பிரதமர் அலுவலகம்

106-வது இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் சுருக்கம்

Posted On: 03 JAN 2019 8:00PM by PIB Chennai

மாணவர்களே, பிரதிநிதிகளே உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

106-வது இந்திய அறிவியல் மாநாட்டை துவக்கி வைப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பிரபல விஞ்ஞானிகள், அறிஞர்கள், மாணவர்களுடன் இருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

இந்திய அறிவியல் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் எதிர்கால இந்தியாவின் அறிவியல் தொழில்நுட்பம், அறிவியல் தொழில்நுட்ப புதுமைப் படைப்புகள் ஆகியவை முக்கிய கவனம் பெற உள்ளன.

நண்பர்களே

இந்திய அறிவியல் மாநாட்டுக்கு செறிவான பாரம்பரியம் உண்டு. ஆச்சாரியா ஜி.சி.போஸ், சி.வி.ராமன், மேக்நாத் சாஹா போன்ற மிகச் சிறந்த அறிவியலாளர்கள் இதனுடன் தொடர்பு கொண்டவர்கள். குறைந்தபட்ச ஆதாரங்கள், அதிகபட்ச உழைப்பு, உறுதிப்பாடு, படைப்பாற்றல் ஆகியன அறிவியலுடன் தொடர்புள்ளவை.

1917-ல் கொல்கத்தாவில் போஸ் நிறுவனம் என்ற முதலாவது இந்திய அர்ப்பணிக்கப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தப்பட்டது. இதில் போஸ் ஆற்றிய தொடக்கவுரையில், அறிவியல் பற்றிய வரலாற்றுக் கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. “இன்று நான் அர்ப்பணித்து வைக்கும் இந்த நிறுவனம் வெறும் சோதனைக்கூடம் மட்டுமல்ல, நாட்டின் அறிவியல் கோவில்” என்று அவர் கூறினார்.

நூற்றுக்கணக்கான இந்திய விஞ்ஞானிகளின் வாழ்க்கையும், பணிகளும் ஆழமான அடிப்படை அறிவை தொழில்நுட்ப மேம்பாட்டுடன் ஒருங்கிணைத்து தேச நிர்மாணத்திற்கு பயன்படுத்தியதை நினைவுகூறும் சாட்சியங்களாகும். இந்த நமது அறிவியல் கோவில்கள் மூலம் இந்தியா தற்காலத்தை எதிர்கால பாதுகாப்புக்காக மாற்றியமைத்து வருகிறது.

நண்பர்களே

நமது முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் நமக்கு கொடுத்த முழக்க வாசகம் “ஜெய் ஜவான் ஜெய் கிசான்” என்பதாகும். 20 ஆண்டுகளுக்கு முன் போக்ரானில் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை ஆற்றிய நமது பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், இந்தியாவுக்கு அறிவியல் தொழில்நுட்பம் அளித்த பங்கினை அங்கீகரித்துள்ளார். அவர் அளித்த முழக்கம் “ஜெய் விஞ்ஞான், ஜெய் ஜவான் ஜெய் கிசான், ஜெய் விஞ்ஞான்” என்பதாகும்.

இப்போது இதனை மேலும் ஒருபடி முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தருணம் வந்து விட்டதாக நான் நம்புகிறேன். இதில் நான் சேர்க்க விரும்புவது “அனு சந்தான்” என்பதாகும்.  எனவே இந்த முழக்கம் இப்போது “ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விஞ்ஞான், ஜெய் அனு சந்தான்” என்று ஆகிறது.

விஞ்ஞானத்தைப் படித்து ஆய்வு செய்வதில் இரண்டு நோக்கங்கள் நிறைவேற்றப்படுகின்றன. முதலாவது, மிகவும் ஆழமான அறிவு. இரண்டாவது சமூகப் பொருளாதார நலன்களுக்காக இந்த அறிவைப் பயன்படுத்துவது. நாம் கண்டுபிடிப்பு சார் அறிவியல் சூழலை முன்னெடுத்துச் செல்லும் போது, புதிய கண்டுபிடிப்புகள், தொடக்க நிலை நிறுவனங்கள் ஆகியவற்றிலும் நாம் முக்கிய கவனம் செலுத்தியாக வேண்டும்.

நமது விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்த நமது அரசு அடல் புத்தாக்க இயக்கத்தைத் தொடங்கி உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் அதற்கு முந்தைய 40 ஆண்டுகளை விட, கூடுதலான தொழில்நுட்ப வர்த்தக கருநிலை அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தொழில் துறையினர், உரிய நேரத்திலான வழிகாட்டுதல்கள், தொலைநோக்கு, கற்பித்தல் மற்றும் பங்களிப்பு ஆகியவற்றை இப்போது தொடக்க நிலை நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டும். நமது விஞ்ஞானிகள், குறைந்த செலவிலான சுகாதாரப் பராமரிப்பு, வீட்டு வசதி, தூய்மையான காற்று-தண்ணீர்-எரிசக்தி, வேளாண்மை உற்பத்தித் திறன் மற்றும் உணவு பதனீடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் உறுதியுடன் செயல்பட வேண்டும். அறிவியலானது உலகத்துக்குப் பொதுவானது என்றாலும், உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ற தீர்வுகளை வழங்குவதில் தொழில்நுட்பம் உள்ளூர் சார்ந்ததாகவே இருந்தாக வேண்டும். தேசிய ஆராய்ச்சி சோதனைக் கூடங்கள் மற்றும் அறிவியல் அமைப்புகள் இந்த வகையில் பங்களிக்க வேண்டும்.

பெரிய அளவு தரவு பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு, தொலைத் தொடர்பு, செயற்கைக் கோள் படப்பிடிப்பு, பூச்சிக்கொல்லிகள் ஆகிய துறைகளில் இந்த அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டும்.

வர்த்தகம் புரிதலில் எளிமை, எளிதான வாழ்க்கை, வறட்சி மேலாண்மை, சூறாவளி, ஊட்டச்சத்து குறைவு, தொழில்நுட்ப தீர்வு, மறுசுழற்சி, இயற்கை வள பாதுகாப்பு ஆகியவை  தொடர்பான பிரச்சனைகளிலும் அறிவியல் அமைப்புகளின் பணி தேவைப்படுகிறது.

நண்பர்களே, இந்திய அறிவியலைப் பொறுத்தவரை  2018  மிகச் சிறந்த ஆண்டாகும். இந்த ஆண்டின் நமது சாதனைகளில், விமானங்களுக்கு ஏற்ற உயிரி எரிபொருள் உற்பத்தி, பார்வையற்றோருக்கு உதவும் எந்திரம், கர்ப்பப்பை புற்றுநோய், காசநோய், டெங்கு ஆகியவற்றை கண்டுபிடிப்பதற்கான விலை குறைந்த கருவி, டார்ஜிலிங் மண்டலத்திலும், சிக்கிமிலும் நிலச்சரிவு எச்சரிக்கை அமைப்பு ஆகியன அடங்கும். எனினும், இந்த வகையில் நாம் செல்ல வேண்டிய தூரம் மிக நீளமானது. நமது ஆராய்ச்சி மேம்பாட்டு சாதனைகளை தொழிற்சாலை உற்பத்திப் பொருட்களாக மாற்றி வர்த்தகப்படுத்துவதில் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம்.  எதிர்காலம் மாற்றுகள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்கள் சார்ந்ததாகும். நம் நாட்டின் வளத்திற்கான வினை ஊக்கியாக மாற்றத்தைப் பயன்படுத்தி நிர்வகிக்க வேண்டும். அறிவியல் வெளியீடுகளின் எண்ணிக்கையைப் பொறுத்த வரை உலகின் முதல் 5 நாடுகளில் இந்தியா இடம் பெற்றுள்ளது என்பது பெருமைக்குரிய விஷயம். இதுவொரு சாதாரணமான சாதனை அல்ல. இதனை முழு மனதுடன் பாராட்ட வேண்டும். இதுதான் நாம் மேலே கட்டமைப்பதற்கான வலுவான அடித்தளம்.

பருவநிலை மாற்றம், செயற்கை நுண்ணறிவு, மக்கள் தொகை இயக்கவியல், உயிரி தொழில்நுட்பம், டிஜிட்டல் சந்தையிடங்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள், திறன் தொகுப்பு, அறிவுசார் சமுதாயம், பாடங்களுக்கு இடையிலான ஆராய்ச்சி, அறிவுசார் படைப்பாற்றல், கலைப்பாடங்கள், சமூக அறிவியல், அறிவியல் தொழில்நுட்பம், புதுமைப் படைப்பு போன்றவற்றிலும் நாம் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். ஆராய்ச்சியும், புதுமைப்படைப்பும்தான் எதிர்காலம் என்பதை நாம் அனைவரும் அறிய வேண்டும்.

நண்பர்களே, நமது ஆராய்ச்சி மேம்பாட்டின் வலிமையானது, நமது தேசிய சோதனைக் கூடங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐடிகள், ஐஐஎஸ்சிகள், டிஐஎப்ஆர், மற்றும் ஐஎஸ்இஆர் போன்ற முதுகெலும்பு அமைப்புகளில் அமைந்துள்ளது. எனினும், நமது மாணவர்களில் 95 சதவீதம் பேர் மாநில பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் செல்கிறார்கள். அங்கெல்லாம் ஆராய்ச்சிப் பணி மிகக் குறைவாக நடைபெறுகிறது. இந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆராய்ச்சி சூழல் அமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும். இந்தப் பிரச்சனை குறித்து விரிவாக விவாதித்து செயல்திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டுமென பிரதமரின் அறிவியல் தொழில்நுட்ப, புதுமைப்படைப்பு குழுமத்தை நான் கேட்டுக் கொள்கிறேன். இதில் மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆலோசனையையும் பெற்றுக் கொள்ளலாம்.

நண்பர்களே, இந்திய அறிவியல் காங்கிரசின் திருப்பதி மாநாட்டில் நான் இழை இயல்பியல் அமைப்புகள் உலகளவில் உயர்ந்து வருவது பற்றிப் பேசினேன். இது நமது மக்கள்தொகை அடிப்படையிலான சாதக அம்சத்திற்கு முன்னெப்போதும் இல்லாத சவாலை ஏற்படுத்தக் கூடியது. இந்த விஷயத்தை, ரோபாடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, பெரிய தரவு பகுப்பாய்வு ஆகியவை சார்ந்த ஆராய்ச்சி, பயிற்சி, திறன் மேம்பாட்டின் மூலம் மிகப் பெரிய வாய்ப்புகளாக மாற்ற இயலும். பாடங்களுக்கு இடையிலான கணினி இயற்பியல் அமைப்புக்கான தேசிய இயக்கத்திற்கு 3600 கோடி ரூபாய் தொகையை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த இயக்கம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில்நுட்ப மேம்பாடு, மனித ஆற்றல், திறன் மேம்பாடு, தொடக்க நிலை சூழல் அமைப்பு, வலுவான தொழில் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவை குறித்து ஆராயும்.

செயற்கை அறிவை இயக்கும் எந்திரத் தரவு சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுடன் பணியாற்றி நமது விஞ்ஞானிகள் திறம்பட்ட தரவுக் கொள்கை மற்றும் நடைமுறைகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் தரவு உற்பத்தியிலிருந்து தரவு வெளிப்பாடு, தரவு பாதுகாப்பு, தரவு பகிர்வு, தரவு பயன்பாடு ஆகியவற்றை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

விண்வெளி துறையைப் பொறுத்தவரை 2020 முதல் 2022 வரையிலான காலத்தில் கார்ட்டோ சாட்-2 தொடரில் வரும் செயற்கைக்கோள்கள், வழிகாட்டுதல் மற்றும் தொலைத் தொடர்பு செயற்கைக் கோள்கள், உயர் நிறமாலை படப்பிடிப்பு செயற்கைக்கோள்கள் போன்றவை விண்ணில் செலுத்தப்படும்.

மனிதர்களை ஏற்றிக் கொண்டு விண்ணுக்கு செல்லும் கலங்களில் அவசர காலத்தில் அவர்கள் தப்பிச் செல்லும் செயல்முறை விளக்கம் நடைபெற்றுள்ளது.

அறிவியல், தொழில்நுட்ப புதுமைப் படைப்பு, தொடர்ச்சியாக செயல்படும் சரிபார்ப்பு நிலையங்கள் கட்டமைப்பு, உயர் நுண்ம புவி வெளி டிஜிட்டல் தரவுகள் ஆகியவற்றில் இந்த அறிவியல் மாநாடு கவனம் செலுத்த வேண்டும். மாநாட்டில் கவனம் பெற வேண்டிய மற்றொரு விஷயம் ஜீன் தெரப்பி ஆகும்.

நண்பர்களே

அறிவியல், தொழில்நுட்ப, புதுமைப்படைப்புக்கு புதிய எதிர்காலத்திற்குரிய கால வரையறைத் திட்டம் இந்தியாவுக்குத் தேவைப்படுகிறது. சமீபத்தில் இந்த நோக்கங்களுடன், பிரதமர் அறிவியல் தொழில்நுட்ப, புதுமைப்படைப்பு ஆலோசனை குழுமத்தை உருவாக்கியுள்ளோம். இந்தக் குழுமம், உரிய அறிவியல் தொழில்நுட்பத் திட்டங்களை உருவாக்கும், அக்கறையுள்ள அமைச்சகங்கள் உள்ளிட்ட அனைவரிடையேயும் ஒத்துழைப்பை மேம்படுத்தும், கொள்கை முடிவுகளை அமல்படுத்தும். கல்வியின், குறிப்பாக உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நடைமுறையில் அரசு தற்போது கவனம் செலுத்தி வருகிறது. உயர்கல்வித் துறையை தாராளமயமாக்கி உள்ளோம். உயர்கல்வி நிறுவனங்களுக்கு செயல்பாட்டு மற்றும் நிதி சுயாட்சியை ஏற்படுத்த பல்கலைக்கழக மானியக் குழு தரநிலை அடிப்படையிலான சுயாட்சி விதிகளை உருவாக்கி உள்ளது. மிகச்சிறப்பான நிறுவனங்களை உருவாக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்கள் உலகின் மற்ற சிறந்த நிறுவனங்களுடன் போட்டியிடக் கூடியவை. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தும், தனியார் முதலீட்டை கொண்டு வரும், உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்தும். பிரதமரின் ஆராய்ச்சி உதவித் திட்டத்தை தொடங்கி உள்ளோம். இதன் கீழ் நாட்டின் தலைச் சிறந்த நிறுவனங்களில் மிகச் சிறந்த அறிவாற்றல் உள்ள ஆயிரம் பேரைத் தேர்ந்தெடுத்து ஐஐடி மற்றும் ஐஐஎஸ்சி ஆகியவற்றில் பி.எச்டி பட்டப்படிப்புக்கு நேரடி சேர்க்கை அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் தரமான ஆராய்ச்சி ஊக்குவிக்கப்படும், முன்னணி கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சனை நீக்கப்படும்.

நண்பர்களே, காலஞ்சென்ற முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறிய வாசகத்தை இங்கே நினைவு கூற விரும்புகிறேன். “தெளிவான கற்பனை ஆற்றல், தொடர்ச்சியான முயற்சிகள் ஆகியவற்றின் மூலம் பிரபஞ்சத்தின் ஆற்றலை, ஊக்கம் பெற்ற மனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. இந்திய இளைஞர்களின் மனங்களில் எழுச்சியை எவ்வாறு உருவாக்குகிறோம் என்பது முக்கியமானது. அவர்கள்தான் முன்னிலை ஆராய்ச்சிக்கு அடித்தளமாக அமைந்து இந்திய அறிவியலில் மறுமலர்ச்சியை கொண்டு வருவார்கள்” என்பதுவே கலாமின் வார்த்தைகள்.

படைப்பாற்றல் கொண்ட, உடல்திறம் மிக்க, அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட புதிய தலைமுறையினர் இந்தியாவில் நிரம்ப உள்ளனர். இவர்களுக்கு உதவக் கூடிய சூழலை உருவாக்கி அதன் மூலம் அறிவியல் ரீதியிலான புதிய இந்தியாவை நிர்மாணிப்பதில் அரசு உறுதியுடன் உள்ளது. தற்காலத்திய மற்றும் எதிர்காலத்திய சவால்களையும், வாய்ப்புகளையும் ஒருசேர பயன்படுத்தி, எதிர்கொள்ளும் தயார் நிலையில் உள்ள இந்தியாவே புதிய இந்தியா. இந்த இந்தியா கருத்துகள், அறிவு,ஞானம், செயல்பாடு ஆகியன நிரம்பியது. இந்த இந்தியா வலுவானது, தன்னம்பிக்கை கொண்டது, வளமானது, ஆரோக்கியமானது. இந்த இந்தியா இரக்கத்தன்மை கொண்டது, அனைவரையும் உள்ளடக்கிச் செல்வது.

2019 புத்தாண்டு உங்கள் அனைவருக்கும் படைப்பாற்றல் மிக்க பயனுள்ள புத்தாண்டாக அமைய எனது வாழ்த்துக்கள்.

உங்கள் அனைவரும் மிக்க நன்றி.

*****



(Release ID: 1564263) Visitor Counter : 581