பிரதமர் அலுவலகம்

அகர்தலாவிற்கு பிரதமர் பயணம்

கார்ஜி – பெலோனியா ரயில் தடம் துவக்கி வைக்கப்படும்
திரிபுராவில் பல்வேறு நலத்திட்டங்கள் திறந்து வைக்கப்படும்
நெடுஞ்சாலை, ஐ வே, ரயில்வே, விமானப் போக்குவரத்து ஆகியவற்றை கொண்ட ஹிரா வளர்ச்சி மாதிரி திரிபுராவில் கொண்டு வரப்பட்டுள்ளது: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 09 FEB 2019 6:57PM by PIB Chennai

அசாம், அருணாச்சலம் மற்றும் திரிபுராவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் தனது பயணத்தின் இறுதிக்கட்டமாக அகர்தலாவை வந்தடைந்தார். கார்ஜி-பெலோனியா ரயில்வே தடத்தை துவக்கி வைத்த அவர், மாநிலத்தின் பல்வேறு நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

அகர்தலாவின் மகாராஜா வீர் விக்ரம் விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள மகாராஜா வீர் விக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூரின் சிலையை பிரதமர் திறந்து வைத்தார். மகாராஜா வீர் விக்ரம் கிஷோரைப் பாராட்டிய பிரதமர், திரிபுராவின் வளர்ச்சிக்காக மகாராஜாவுக்கு தொலை நோக்கு பார்வை ஒன்று இருந்தது.  அகர்தலாவின் நகர வடிவமைப்புக்கு அவர் பெரும் பங்களித்துள்ளார். மகாராஜாவின் சிலையை திறந்து வைப்பது தனக்கு பெருமையாக உள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

திரிபுராவின் வளர்ச்சி குறித்து பிரதமர் பேசுகையில், மாநிலத்தின் வளர்ச்சி புதியப் பாதையை நோக்கி செல்கிறது என்று கூறினார். “திரிபுராவின் வளர்ச்சிக்காக கடந்த நான்கரை ஆண்டுகளாக அரசு போதுமான அளவு நிதி ஒதுக்கி உள்ளது. வரலாற்றில் முதன் முறையாக நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விலைக்கு பயிர்கள் விற்கப்பட்டதாக நான் கேள்விப்பட்டேன்” என்று அவர் கூறினார்.

சுவாமி விவேகானந்தர் அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையைத் திறந்து வைத்து, கார்ஜி பெலோனியா ரயில் பாதையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன் மூலம் தெற்கு மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு நுழைவாயிலாக திரிபுரா அமையும். நரசிங்கரில் உள்ள திரிபுரா தொழில்நுட்ப நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தேர்தல் நேரத்தில் அவர் இங்கு வந்த போது, நெடுஞ்சாலை, ஐ வே (இணையதளம்), ரயில்வே, விமானப் போக்குவரத்து ஆகியவற்றை குறிக்கும் ஹிரா வளர்ச்சி மாதிரி குறித்து தாம் பேசியதை நினைவு கூர்ந்தார். அகர்தலா சப்ரும் தேசிய நெடுஞ்சாலை, ஹும்சபர் விரைவு ரயில், அகர்தலா தியோகர் விரைவு ரயில், அகர்தலாவின் புதிய முனையம் ஆகியவை இந்த வளர்ச்சி மாதிரியைக் குறிக்கிறது.

போலியான பயனாளிகளை நீக்குவது குறித்து பேசிய பிரதமர், இதற்கு முன்பு, வளர்ச்சி, காகிதத்தில் மட்டுமே இருந்தது என்று கூறினார். “மேலும் திரிபுராவில் மட்டும் ஏறத்தாழ 62 ஆயிரம் பயனாளிகள் உள்ளதாக நான் கேள்விப்பட்டேன். இவர்கள் அனைவரும் உங்களின் பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்”. கடந்த நான்கரை ஆண்டுகளில் இந்த முறையிலிருந்து 8 கோடி போலிப் பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.

விவசாயிகள் மற்றும் அமைப்புச் சாரா துறைகளுக்கு அவர் அளிக்கும் முன்னுரிமை குறித்து பேசிய பிரதமர், பிரதமர் ஷ்ரம் யோகி மந்தன் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் மாதம் ஒன்றுக்கு, 60 வயதுக்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளருக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறினார். விவசாய வெகுமதி நிதித் திட்டத்தின் கீழ் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டொன்றுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.6 ஆயிரம் செலுத்தப்படும் என்று கூறினார். மீன் வளத்திற்காக தனியாக துறை அமைக்கப்படுவது மீனவர்களுக்குப் பெரும் பலன் அளிக்கும். இந்த அனைத்து நடவடிக்கைகளும் அரசின் நோக்கத்தைக் குறிக்கிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

மூன்று வடகிழக்கு மாநிலங்களின் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் புதுதில்லி திரும்புகிறார். நாளை அவர் ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவிற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

***


(வெளியீட்டு அடையாள எண்: 1564089) வருகையாளர் எண்ணிக்கை : 224
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Kannada