பிரதமர் அலுவலகம்

ஆதரவற்ற குழந்தைகளுக்கான உணவு வழங்கும் திட்டத்தில் 300-வது கோடி அன்னதானத்தை பிருந்தாவனத்தில் பிரதமர் வழங்கினார்.

Posted On: 11 FEB 2019 4:24PM by PIB Chennai

  பிரதமர் திரு.நரேந்திர மோடி உத்தரப்பிரதேசம் மாநிலம் பிருந்தாவனுக்கு இன்று  வருகை தந்தார். அப்போது அங்குள்ள சந்திரோதயா கோவிலில் அக்ஷ்ய பாத்திர அறக்கட்டளை சார்பில் 300-வது கோடி அன்னதானம் வழங்குவதைக் குறிக்கும் வகையிலான பெயர் பலகையை அவர் திறந்து வைத்தார். வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு 300-வது கோடி அன்னதானத்தை பிரதமர்  வழங்கினார்.  இஸ்கான் அமைப்பின் தலைவர் ஸ்ரீலா பிரபுபாதாவின்  உருவச்சிலைக்கு  அவர்  மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

     உத்தரப்பிரதேச ஆளுநர் திரு ராம்நாயக், முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், அக்ஷ்ய பாத்திர அறக்கட்டளை தலைவர் சுவாமி மது பண்டிட் தாசா மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், அக்ஷ்ய பாத்திர அறக்கட்டளையின் முயற்சிகளைப் பாராட்டினார். இந்த இயக்கம் 1500 குழந்தைகளுக்கு உணவு வழங்குவதைத் தொடங்கி இன்று நாடு முழுவதும் உள்ள 17 லட்சம் பள்ளிக்குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கி வருவதாகத் தெரிவித்தார்.  அடல் பிகாரி வாஜ்பேயி ஆட்சியின்போது முதல் உணவு வழங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், 300-வது கோடி பேருக்கு உணவு வழங்கும் வாய்ப்பு தமக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகத்  தெரிவித்தார். நல்ல சத்துணவு, ஆரோக்கியமான குழந்தைப் பருவம் ஆகியவைதான் புதிய இந்தியாவுக்கான அடித்தளம் என்று அவர் குறிப்பிட்டார்.

      ஆரோக்கியத்தின் 3 அம்சங்களான சத்துணவு, தடுப்பூசி, மற்றும் துப்புரவு ஆகியவற்றுக்கு  தமது அரசு முன்னுரிமை அளித்திருப்பதாகத் தெரிவித்த பிரதமர், தேசிய சத்துணவு இயக்கம், இந்திரா தனுஷ் இயக்கம் மற்றும் தூய்மை இந்தியா இயக்கம் ஆகியவை முக்கிய முயற்சிகளாகும் என்றும் சுட்டிக்காட்டினார். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய சத்துணவு இயக்கம் ஒவ்வொரு தாய் சேயு-க்கும் சரியான சத்துணவு வழங்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்துள்ளதாகவும் அவர் கூறினார். தாய், சேய் ஒவ்வொருவரையும் சத்துணவுத் திட்டத்தின் கீழ் கொண்டுவருவதில் நாம் வெற்றி பெற்றால், பல உயிர்கள் காப்பாற்றப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

     இந்திரா தனுஷ் இயக்கம் குறித்துப் பேசிய பிரதமர், இந்த தேசியத் திட்டத்தில் மேலும் ஐந்து தடுப்பூசிகள் சேர்க்கப்பட்டிருப்பதாகக் கூறினார். 3 கோடியே நாற்பது லட்சம் குழந்தைகளுக்கும் 90 லட்சம் கர்ப்பிணிப் பெண்களுக்கும் இதுவரை தடுப்பூசி போடப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.  உலக அளவில் உள்ள 12 சிறந்த இயக்கங்களில்  இந்திர தனுஷ் இயக்கத்தையும் ஒன்றாக புகழ் பெற்ற மருத்துவ இதழ் ஒன்று தேர்ந்தெடுத்திருப்பதை பிரதமர் பாராட்டினார்.

     தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் துப்புரவு குறித்துப் பேசிய அவர், கழிப்பறைகளை பயன்படுத்துவதால், 3 லட்சம்  மக்களின் உயிர்களைப் பாதுகாக்க முடியும் என்று சர்வதேச அறிக்கை ஒன்று குறிப்பிட்டிருப்பதை எடுத்துரைத்தார்.  தூய்மை இந்தியா இயக்கம் இந்த முயற்சியின் இலக்கை நோக்கி செயல்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

     பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா திட்டம், உஜ்வாலா திட்டம். ராஷ்ட்ரீய கோகுல் இயக்கம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களையும் அவர் விரிவாக விளக்கினார். உஜ்வாலா திட்டத்தின் கீழ் மத்திய அரசு,  உத்தரப்பிரதேசத்தில் மட்டும் ஒரு கோடி குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பை வழங்கியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

     பசுக்களைப் பாதுகாப்பதற்கும், மேம்பாட்டிற்கும் ராஷ்ட்ரீய காமதேனு ஆயோக் உருவாக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். கால்நடை பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான உதவிகளை வழங்குவதில்  மத்திய அரசின் முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்.  விவசாயக்கடன் அட்டை திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை அவர்களுக்கான கடன் உதவி நீட்டிக்கப்பட்டிருப்பதையும் தெரிவித்தார்.

     பிரதமரின் கிசான் திட்டம் விவசாயிகளின் நலன்களை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் உத்தரப்பிரதேச விவசாயிகளுக்கு இதன் மூலம் அதிக பலன் கிடைக்கும் என்று சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த மாநிலத்தில்தான் அதிகமான விவசாயிகள் ஐந்து ஏக்கருக்கும் குறைவான நிலங்களை வைத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

     பிரதமர் தமது உரையின் முடிவில், தமது சொந்தத் தேவைகளைவிட சமுதாயத்தின் தேவைகளை  நிறைவு செய்வதில் நாம் உயர்ந்திருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

     மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தும் பங்குதாரராக அட்சயப் பாத்திரம் அறக்கட்டளை விளங்குகிறது.

     தனது 19 ஆண்டு பயணத்தில், 12 மாநிலங்களில் 14,702 பள்ளிகளில் உள்ள 1.76 மில்லியன் குழந்தைகளுக்கு அட்சயப் பாத்திர அமைப்பு மதிய உணவை வழங்கியுள்ளது.  2016-ல் அப்போதைய குடியரசுத் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி முன்னிலையில் அட்சயப் பாத்திரம் அமைப்பு தனது 200-வது கோடி அன்னதானத்தை வழங்கியது.

     இந்த அமைப்பு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடனும், மாநில அரசுகளுடனும் இணைந்து, தரமான, தூய்மையான மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவை பல கோடி குழந்தைகளுக்கு வழங்கி வருகிறது.

 பள்ளிகளில் படிக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு, 300-வது கோடி அன்னதானத்தை பிரதமர்  திரு நரேந்திரமோடி இன்று வழங்கியுள்ளது, நமது சமுதாயத்தில் உள்ள வறுமையான, விளிம்பு நிலை பிரிவினரை சென்றடையும் மற்றுமொரு நடவடிக்கையாகும்.

****



(Release ID: 1563921) Visitor Counter : 178