பிரதமர் அலுவலகம்

எரிசக்தி பாதுகாப்புக்கு ஊக்கம்

குண்டூர் சென்ற பிரதமர், 1.33 மில்லியன் மெட்ரிக் டன் திறன்கொண்ட விசாகப்பட்டினம் நிலையான பெட்ரோலியம் சேமிப்பு மையத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார்
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் கடலோர முனையம் மற்றும் ஓ.என்.ஜி.சி-யின் எஸ்-1 வசிஷ்டா திட்டங்களையும் தொடங்கிவைத்தார்.

Posted On: 10 FEB 2019 1:18PM by PIB Chennai

ஆந்திர மாநிலம் குண்டூருக்கு இன்று பயணம் மேற்கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, 3 பெரும் திட்டங்களைத் தொடங்கிவைத்தார்.  

ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் திரு ஈ.எஸ்.எல். நரசிம்மன், மத்திய வர்த்தகம் & தொழில் மற்றும் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்கு ஊக்கமளிக்கும் விதமாக, இந்திய நிலையான பெட்ரோலிய சேமிப்பு அமைப்பின், 1.33 மில்லியன் மெட்ரிக் டன் விசாகப்பட்டினம் நிலையான பெட்ரோலிய சேமிப்பு வசதியை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்தத் திட்டம் ரூ.1,125 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நாட்டிலேயே மிகப்பெரிய அளவிலான நிலத்தடி சேமிப்பு வசதியைக் கொண்டதாகும்.

கிருஷ்ணாபட்டினத்தில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் கடலோர முனையத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.  சுமார் 100 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவிலான இத்திட்டம், ரூ.580 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது.  இந்தத் திட்டம் 2020 நவம்பரில் செயல்பாட்டிற்கு வரும்.  முற்றிலும் தானியங்கி முறையிலான அதிநவீன வசதிகளைக் கொண்ட இந்த கடலோர முனையம், ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கான பெட்ரோலியப் பொருட்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்.  

 

 

      எரிசக்தி சார்ந்த பொருளாதாரத்திற்கு பெரும் ஊக்கமளிக்கும் விதமாக, ஆந்திரப்பிரதேச மாநிலம் கிருஷ்ணா – கோதாவரி ஆற்றுப்படுகையில் அமைந்துள்ள ஓ.என்.ஜி.சி-யின் எஸ்-1 வசிஷ்டா வளர்ச்சித் திட்டத்தையும் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.  இந்தத் திட்டம் ரூ.5,700 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2020-க்குள் எண்ணெய் இறக்குமதியை 10% குறைப்பது என்ற பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்தை நனவாக்க இந்தத் திட்டம் உதவும்.

****


(Release ID: 1563728)