பிரதமர் அலுவலகம்

மத்திய நிதிநிலை அறிக்கை 2019-20 தாக்கல் செய்யப்பட்ட பிறகு பிரதமர் வெளியிட்ட அறிக்கை

Posted On: 01 FEB 2019 5:02PM by PIB Chennai

மக்களின் வாழ்க்கைக்கு பயனுள்ள திட்டங்களுடன் இந்தியாவை வலிமையான நாடாக மாற்றுவதற்கான மாபெரும் நடவடிக்கை இது.

     இந்த நிதிநிலை அறிக்கை, விவசாயிகள் நலன் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரையிலும், வருமான வரி சலுகைகள் முதல் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் வரையிலும், உற்பத்தி துறை முதல் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் வரையிலும், வீட்டுவசதி முதல் சுகாதாரக் காப்பீடு வரையிலும், வளர்ச்சி வீதத்தை அதிகரிப்பது முதல் புதிய இந்தியாவைப் படைப்பது வரையிலும் பல்வேறு துறையினரின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

     நண்பர்களே,

     அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் நாட்டிலுள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.  ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பலன் 50 கோடி ஏழை மக்களை சென்றடையும். பிரதமரின் ஆயுள் காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டங்களின் மூலம் 21 கோடி பேர் பயனடைந்துள்ளனர். தூய்மை இந்தியா திட்டத்தின் பலன் ஒன்பது கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களை சென்றடைந்துள்ளது.  உஜ்வாலா திட்டத்தின்கீழ், ஆறு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின்கீழ், 1.5 கோடி குடும்பங்களுக்கு சொந்தமாக நிரந்தர வீடு கட்டித்தரப்பட்டுள்ளது.

     இந்த நிதிநிலை அறிக்கையிலும், 12 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும், 3 கோடி நடுத்தர வகுப்பு வரி செலுத்துவோர் மற்றும் 30-40 கோடி தொழிலாளர்களும் நேரடியாக பலனடையக்கூடிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

     நண்பர்களே, அரசு மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக, வறுமை ஒழிப்புத் திட்டம் இதுவரை இல்லாத வேகத்துடன் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் கோடிக்கணக்கான மக்கள் வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு இருப்பதுடன், அவர்களது நிலையும் நடுத்தர வகுப்பு அல்லது நடுத்தர வகுப்பை ஒட்டிய நிலைக்கு முன்னேறியிருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. இந்த பெரும் வர்க்கத்தினர், தற்போது அவர்களது கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சித்து வருவது, நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும். வளர்ந்து வரும் இந்த நடுத்தர வகுப்பினருக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கவும், அவர்களது நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்கள் நிறைவேறவும் அரசு உறுதிபூண்டுள்ளது.

     இந்த நிதிநிலை அறிக்கையில், வருமான வரி விலக்கு பெறும் நடுத்தர வகுப்பினர் மற்றும் மாத ஊதியம் பெறும் நடுத்தர வகுப்பினருக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து, பின்பற்றுவதுடன், வரியையும் நேர்மையாக செலுத்தி வரும் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தினருக்கு நன்றியை உரித்தாக்குகிறேன். இவர்கள் செலுத்தும் வரிப்பணம்தான், மக்கள் நலத்திட்டங்களுக்கும், ஏழைகளின் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு, வரி விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வந்தது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்தக் கோரிக்கையை எங்களது அரசுதான் தற்போது நிறைவேற்றியுள்ளது.  

     நண்பர்களே, விவசாயிகள் நலனுக்காக பல்வேறு அரசுகள், பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளன. எனினும், உயர்நிலையில் உள்ள 2-3 கோடி விவசாயிகளைத் தவிர, பெருமளவிலான விவசாயிகள் இந்த வரம்பிற்குள் வரவில்லை. தற்போது பிரதமரின் விவசாயிகள் நிதித்திட்டம் கொண்டுவரப்படுகிறது.  பிரதமரின் விவசாயிகள் திட்டம் என்றழைக்கப்படும் இந்தத்  திட்டம், ஐந்து ஏக்கர் மற்றும் அதற்கு குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு உதவிகரமாக இருக்கும்.  நாடு சுதந்திரம் அடைந்த பிறகு,  விவசாயிகள் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை இதுவாகும்.  விவசாயிகள் நலனுக்காக எங்களது அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  கால்நடை வளர்ப்பு, பசு பாதுகாப்பு மற்றும் மீனவர்கள் நலனுக்கென தனித்துறை ஏற்படுத்துதல் போன்ற விவசாயம் சார்ந்த மற்றும் கிராமப்புற வாழ்க்கை தொடர்பான பல்வேறு தரப்பினரின் நலனும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.  தேசிய காமதேனு இயக்கம் மற்றும் மீனவளத்திற்கென தனித்துறை ஏற்படுத்துவது, கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்த உதவும். இது மீனவர்களுக்கும் உதவிகரமாக இருக்கும். விவசாயிகளை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு இயந்திரங்கள் மற்றும் அவர்களது வருவாயை இரட்டிப்பாக்குவதற்கான ஆதாரங்களை வழங்கவும் அக்கறையுடன் கூடிய முயற்சியை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் இந்த நோக்கத்திற்கு ஊக்கமளிப்பதாக அமையும்.

     நண்பர்களே, இந்தியா பல்வேறு அம்சங்களிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது, புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன,  புதிய வாய்ப்புகள் கண்டறியப்படுவதுடன், இந்தத் துறைகளில் ஈடுபட்டுள்ள ஏராளமான மக்கள் பன்மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளனர். எனினும், அமைப்புசாரா துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், வீட்டு வேலைப் பணியாளர்கள் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் அல்லது சாலையோர தள்ளுவண்டி வியாபாரிகள் என சமுதாயத்தின் பெரும் பகுதியைச் சேர்ந்தவர்களின் நலன் புறக்கணிக்கப்பட்டு வந்தது. அவர்கள், தத்தமது சொந்த முயற்சிகளையே சார்ந்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.  நாடு முழுவதும் சுமார் 40-42 கோடி அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளனர்.  இவர்கள் 60 வயதைக் கடந்த பிறகு ஆதரவளிக்கும் வகையில், பிரதமரின் ஷ்ரம்யோகி மன் தன் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.  இவர்கள் ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் ஆயுள் காப்பீடு, பிரதமரின் விபத்து காப்பீடு, பிரதமரின் வீட்டுவசதித் திட்டம் உள்ளிட்ட பிற நலத்திட்டங்களின் பலனையும் பெறுவதோடு, அவர்களது அன்றாட செலவுகளுக்காக ஓய்வூதியமும் பெறுவார்கள்.

சகோதர சகோதரிகளே,

     வளர்ச்சியின் கடைக்கோடி நிலையில் உள்ள மக்களையும் சென்றடைவதற்கான பல்வேறு முயற்சிகளில் எங்களது அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. வித்தைக்காரர்கள், பாம்பாட்டிகள், இசைக்கலைஞர்கள், கழைக்கூத்தாடிகள் போன்ற நாடோடி இனத்தவரின் முன்னேற்றத்திற்காக நலவாரியம் ஒன்றை அமைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.  முறையான அங்கீகாரத்திற்குப் பிறகு, இந்த வளர்ச்சித் திட்டங்களின் பலன் சம்பந்தப்பட்டவர்களை விரைவாக சென்றடையும் என நான் நம்புகிறேன்.

     நண்பர்களே, வணிகர்கள் மற்றும் வர்த்தகர்களின் நலனுக்காக தனி அமைச்சகம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.  தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை, வணிகர்கள், வர்த்தகர்கள் மற்றும் பிற அலுவலர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  இனி இந்தத் துறை, தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை என அழைக்கப்படும்.

     அடுத்த பத்தாண்டுகளின் முடிவில் ஏற்படும் தேவை மற்றும் இலக்குகளை மனதில் வைத்து இந்த நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.  இந்த நிதிநிலை அறிக்கை, ஏழைகளுக்கு அதிகாரம் அளிப்பதுடன், விவசாயிகளுக்கு ஊக்கமளிப்பதாகவும், தொழிலாளர்களுக்கு கண்ணியத்தை ஏற்படுத்துவதாகவும், நடுத்தர வர்க்கத்தினரின் விருப்பங்களை பூர்த்தி செய்வதாகவும், நேர்மையாக வரி செலுத்துவோரை கௌரவிக்கும் விதமாகவும், வணிகர்களுக்கு அதிகாரம் அளிப்பதுடன், அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சியை விரைவுபடுத்துவதாகவும் உள்ளது.  புதிய இந்தியாவிற்கான இலக்குகளை எதிர்கொள்ளும் விதமாக நாட்டிலுள்ள 130 கோடி மக்களுக்கு உற்சாகம் அளிப்பதாகவும் இந்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.  அனைத்து தரப்பினரின் வாழ்க்கை மற்றும் உள்ளார்ந்த வளர்ச்சிக்கான இந்த நிதிநிலை அறிக்கை, அனைத்து தரப்பினரின் மேம்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

     இந்த மிகச்சிறந்த நிதிநிலை அறிக்கையை தயாரித்ததற்காக எனது நண்பர்கள் அருண்ஜேட்லி, பியூஷ்கோயல் மற்றும் அவர்களது குழுவினருக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்”.

*****



(Release ID: 1562413) Visitor Counter : 243