பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

2018 ஆம் ஆண்டு சாதனைகள்: பணியாளர், பொதுமக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியங்கள் அமைச்சகம்

Posted On: 21 DEC 2018 7:25PM by PIB Chennai

12-வது குடிமைப் பணிகள் தின நிகழ்ச்சி

12-வது குடிமைப் பணிகள் தின 2-ம் நாள் நிகழ்ச்சியை குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம்.வெங்கையா நாயுடு 20.04.2018 அன்று தொடங்கி வைத்தார். அதற்கு அடுத்த நாள் பிரதமர் திரு. நரேந்திர மோடி குடிமைப் பணி அதிகாரிகளிடையே உரையாற்றி பல்வேறு பிரிவுகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு 15 விருதுகளை வழங்கினார்.

 

உதவி செயலாளர்கள் நியமனம்

குடியரசுத் துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு, மத்திய அரசின் செயலகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 2014-ம் ஆண்டு தொகுதியைச் சேர்ந்த உதவி செயலாளர்கள் இடையே 11.07.18 அன்று உரையாற்றினார். இந்தியாவில் ஏற்பட்டு வரும் மாற்றத்திற்கு மூலகாரணமானவர்களாக மக்களைப் பார்க்க வேண்டும் என்றும் வெறுமனே பயனாளிகளாக பார்க்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்தத் தொகுதியை சேர்ந்த 176 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், 58 மத்திய அமைச்சகங்களில் உதவி செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

 

120-வது தொடக்க நிலை பயிற்சித் திட்டத்தில் பணியாளர், ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் உரை

18 மாநிலங்களைச் சேர்ந்த மாநில குடிமைப் பணியிலிருந்து பதவி உயர்வு மூலம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட 89 அதிகாரிகளைக் கொண்ட குழுவினரிடையே 03.08.18 அன்று இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்துரையாடினார். இந்த அதிகாரிகள் முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் பயிற்சி பெற்றபோது இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பயிற்சி தளங்கள், புதிய பயிற்சி மையங்கள் உருவாக்குவது, அரசின் புதிய நிகழ்ச்சிகள் ஆகியவை குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது.

 

நல்ல ஆளுகை குறித்த மண்டல மாநாடு

2018-19 நிதியாண்டில் இந்தத் துறை, போபால், கோஹிமா, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் 3 மண்டல மாநாடுகளை நடத்தியது. மத்திய-மாநில அரசுகளைச் சேர்ந்த, நல்ல நிர்வாக நடைமுறைகளுக்கு பொறுப்பு வகிக்கும் முதுநிலை அதிகாரிகள் மற்றும் நித்தி ஆயோக் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். வளர்ச்சி வேட்கை மாவட்டங்களின் ஆட்சியர்கள், பிரதமர் விருது வென்றவர்கள், மின்னணு ஆளுகை விருது வென்றவர்கள் ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்றனர்.

 

தேசிய மின்னணு ஆளுகை விருதுகள்

ஐதராபாத்தில் 27.12.18 அன்று நடைபெற்ற தேசிய மின்னணு ஆளுகை குறித்த 2 நாள் மாநாட்டில் 2017-18 ஆம் ஆண்டுக்கான மின்னணு ஆளுகை தேசிய விருதுகளை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வழங்கினார்.  இந்தத் துறையில் சிறப்பாக பணியாற்றிய 8 பிரிவுகளைச் சேர்ந்த 19 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதன் தங்கப் பிரிவு விருது ஒவ்வொன்றிலும் ரூ.2 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் ஆகியனவும், வெள்ளி பிரிவு விருதில் ரூ.1 லட்சம் ரொக்கமும் அடங்கும்.

 

பொது நிர்வாகம் மற்றும் ஆளுகை துறையில் சர்வதேச ஒத்துழைப்பு

பொது நிர்வாகம் மற்றும் ஆளுகை துறையில் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான விஷயங்களில் ஒருங்கிணைப்பு அமைப்பாக இந்த துறை செயல்படுகிறது. அந்த முறையில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வது, வெளிநாட்டுக் குழுக்கள் இந்தியா வருகை, இந்தியக் குழுக்கள் வெளிநாடுகளில் பயணம் ஆகியவற்றை அமலில் இருக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி நடத்துவது, ஆகியவற்றுக்கு இத்துறை பொறுப்பு வகிக்கிறது.

 

அமைச்சரவை முடிவுகள்

மத்திய பணியாளர் தேர்வாணையம் மற்றும் மொரிஷியஸ் அரசு பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 07.03.18 அன்று ஒப்புதல் அளித்தது. 23.05.18 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியாவுக்கும், சிங்கப்பூருக்கும் இடையே பணியாளர் மேலாண்மை மற்றும் பொது நிர்வாகம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

ஓய்வூதிய அதாலத்

2-வது ஓய்வூதிய அதாலத் 2018 பிப்ரவரி 9-ந் தேதி நடைபெற்றது. பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், வங்கிகள் ஆகியவற்றை சேர்ந்த ஓய்வூதியம் தொடர்பான 34 புகார்கள் கூட்டத்திலேயே தீர்த்து வைக்கப்பட்டன.

 

அகில இந்திய ஓய்வூதிய அதாலத்

ஆண்டுக்கு ஒருநாளை ஓய்வூதியதாரர்களுக்கு ஒதுக்கும் வகையில் ஓய்வூதியங்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை அகில இந்திய ஓய்வூதிய அதாலத்தை 2018 செப்டம்பர் 18-ந் தேதி நடத்தியது. இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இதனை தொடங்கி வைத்தார். நாடெங்கும் உள்ள அமைச்சகங்கள், துறைகள் சார்பாகவும் மத்திய ஆயுத காவல் படைகள், பாதுகாப்பு, ரெயில்வே, தொலை தொடர்பு, அஞ்சல் துறைகள் சார்பாகவும் இந்த அதாலத்துகள் நடத்தப்பட்டன.

 

ஓய்வூதிய சீர்திருத்தங்கள்

2018 ஆம் ஆண்டு பல ஓய்வூதிய சீர்திருத்தங்களை அரசு மேற்கொண்டது.

  1. மத்திய அரசு சுகாதார சேவைகள் திட்டத்தின் கீழ் வராத நகரங்களில் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு நிலையான மருத்துவப்படி கோருவதற்கு முதன்மை மருத்துவ அதிகாரி சான்றிதழ் அவசியமில்லை என்று 31.01.18 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு கூறுகிறது.
  2. தேசிய ஓய்வூதிய திட்டம் குறித்த குழு 28.02.18 அன்று தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு தேசிய ஓய்வூதிய திட்ட பங்களிப்பை முதல் நிலை நகரங்களைப் பொறுத்தவரை 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை அரசு மேற்கொண்டது.

மத்திய தகவல் ஆணையத்தின் 13-வது ஆண்டு கூட்டம்

மத்திய தகவல் ஆணையத்தின் 13-வது ஆண்டு கூட்டத்தை குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் 12.10.18 அன்று தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் தகவல் ரகசியம் மற்றும் தகவல் அறியும் உரிமைகள், ஆர்.டி.ஐ. சட்டத்தில் திருத்தம், ஆர்.டி.ஐ. சட்ட அமலாக்கம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

 

மத்திய தகவல் ஆணையத்திற்கு புதிய கட்டிடம்

மத்திய தகவல் ஆணையத்திற்கான புதிய கட்டிடத்தை 06.03.18 அன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

 

கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்

மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் 2018 அக்டோபர் 31-ந் தேதி சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தன்று கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை கடைப்பிடித்தது. ஊழலை ஒழிப்போம்-புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்ற தலைப்பில் இந்த விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது.

 

மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்தின் உரைக் கோவை

2018 ஆம் ஆண்டில் மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் நிபுணர்கள் மற்றும் பிரபல தலைவர்கள் பங்கேற்ற உரைக்கோவை நிகழ்ச்சியை நடத்தியது. மக்களவைத் தலைவர் திருமதி. சுமித்ரா மகாஜன், “மக்கள் பிரதிநிதியாக எனது அனுபவங்கள்” என்ற தலைப்பில் பேசினார். நித்தி ஆயோக் முதன்மை நிர்வாக அலுவலர் திரு.அமிதாப் காந்த் உள்ளிட்ட 10 நிபுணர்கள் பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தினார்கள்.

 

பெரிய 100 வங்கி மோசடிகள் அறிக்கை

2017 ஆம் ஆண்டு தகவல் அடிப்படையில் பெரிய 100 வங்கி மோசடிகளை ஆய்வு செய்து, புலன் விசாரணை மேற்கொண்டு மத்திய கண்காணிப்பு ஆணையம் இந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையில் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், தகவல் தொழில்நுட்பம், வேளாண்மை உள்ளிட்ட 13 துறைகளைச் சேர்ந்த பெரிய வங்கி மோசடிகள் இடம் பெற்றிருந்தன.

****


(Release ID: 1561948) Visitor Counter : 288


Read this release in: English , Hindi , Bengali , Kannada