பிரதமர் அலுவலகம்
பிரதமர் நாளை (ஜனவரி 27, 2019) கேரள மாநிலம் கொச்சி செல்கிறார்
கொச்சியில் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு விரிவாக்க வளாகத்தையும், எல்.பி.ஜி-யை சிலிண்டர்களில் அடைக்கும் நிறுவனத்தில் வட்ட வடிவிலான சேமிப்புக் கலனையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
பி.பி.சி.எல் கொச்சி சுத்திகரிப்பு நிலையத்தில் பெட்ரோ ரசாயன வளாகத்திற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்
Posted On:
25 JAN 2019 7:46PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (ஜனவரி 27, 2019) கேரள மாநிலம் கொச்சி செல்கிறார். இந்தப் பயணத்தின் போது கொச்சியில் ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு விரிவாக்க வளாகத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதன் குறியீடாக கல்வெட்டை அவர் திறந்து வைப்பார். இதே இடத்தில் பெட்ரோ ரசாயன வளாகத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். கொச்சியில் உள்ள ஐ.ஓ.சி.எல். எல்.பி.ஜி-யை சிலிண்டர்களில் அடைக்கும் நிறுவனத்தில் வட்ட வடிவிலான சேமிப்புக் கலனையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பதோடு எட்டுமானுரில் திறன் மேம்பாட்டு நிறுவனத்திற்கும் அடிக்கல் நாட்டுவார்.
ஒருங்கிணைந்த சுத்திகரிப்பு விரிவாக்கத் திட்டம், நவீனமாக இருக்கும். மேலும், இந்தியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிறுவனமான கொச்சி சுத்திகரிப்பு நிறுவனத்தை, உலகத் தரம் உள்ளதாக மாற்றும். இந்தியாவுக்குத் தூய்மையான எரிசக்தி உற்பத்திக்கு இது கருவியாக அமையும். எல்.பி.ஜி மற்றும் டீசல் உற்பத்தியை இது இருமடங்காக்கும். இந்த நிறுவனத்தில் பெட்ரோ ரசாயன திட்டங்களுக்கான உற்பத்தியும் தொடங்கும்.
கொச்சியில் உள்ள ஐ.ஓ.சி.எல். எல்.பி.ஜி-யை சிலிண்டர்களில் அடைக்கும் நிறுவனத்தில் வட்டவடிவிலான சேமிப்புக் கலனின் மொத்தத் திறன் 4350 மெட்ரிக் டன்னாக இருக்கும். ஆறு நாட்களுக்குத் தேவையான எல்.பி.ஜி.-யை சிலிண்டர்களில் அடைப்பதற்கு ஏற்ற வகையில் சேமிப்புத் திறன் அதிகரிக்கப்படுகிறது. தொழில் நிறுவனத்திலும் அருகில் உள்ள இடங்களிலும் உயர்ந்தபட்ச பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், இந்த சேமிப்புக் கலன் இருக்கும். குழாய் மூலம் எல்.பி.ஜி பெறுவதன் மூலம் சாலைகளில் எல்.பி.ஜி. டாங்கர் லாரிகளின் போக்குவரத்தை குறைக்க முடியும்.
கொச்சி பி.பி.சி.எல் சுத்திகரிப்பு நிலையத்தின் பெட்ரோ ரசாயன வளாகம் அமைப்பது, இறக்குமதிகளை சார்ந்திருப்பதை குறைக்கும் நோக்கத்துடனான இந்தியாவில் உற்பத்தி இயக்கத்தின் ஒரு முயற்சியாகும்.
மத்திய பெட்ரோ ரசாயனம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் உதவியுடன் எட்டுமானூரில் அமைக்கப்படும் திறன் வளர்ச்சி நிறுவனம் தொழில் பயிற்சி அளிப்பதோடு வேலை வாய்ப்பையும் அதிகரிக்கும். எண்ணெய் மற்றும் எரிவாயு துறைகளில் தகுதியான இளைஞர்கள் தொழில் தொடங்கவும் இது உதவும்.
கேரள அரசு ஒதுக்கியுள்ள எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் உலகத் தரம் வாய்ந்த இந்த நிறுவனம் அமைக்கப்படவுள்ளது. ஆண்டொன்றுக்கு 20 வகையான பிரிவுகளில் சுமார் ஆயிரம் இளைஞர்களுக்கு இது திறன் வளர் பயிற்சி அளிக்கும்.
ஏற்கனவே, ஜனவரி 15, 2019 அன்று கேரளாவுக்கு சென்றிருந்த பிரதமர், கொல்லம் புறவழிச்சாலையை தொடங்கி வைத்ததோடு, திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலுக்கும் பயணம் செய்தார்.
**************
(Release ID: 1561501)