பிரதமர் அலுவலகம்

தாத்ரா நாகர் ஹவேலியில் சில்வாசாவுக்கு பிரதமர் வருகை

தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியில் ரூ.1,400 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
தகவல் தொழில்நுட்ப கொள்கையையும் அவர் வெளியிட்டார்

Posted On: 19 JAN 2019 6:48PM by PIB Chennai

தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியின் சில்வாசாவில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு.நரேந்திர மோடி திட்டப்பணிகளையும் தொடக்கி வைத்தார்.

   தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியின் சைலியில் மருத்துவக் கல்லூரிக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

      தாத்ரா மற்றும் நாகர் ஹவேலிக்கு தகவல் தொழில்நுட்பக் கொள்கையை பிரதமர் வெளியிட்டார். எம்ஆரோக்கிய கைபேசி செயலி மற்றும் வீட்டுக்கு வீடு சென்று குப்பைகளைச் சேகரிப்பது, திடக்கழிவுகளைப் பிரித்தெடுத்து செயலாக்கத்திற்கு உட்படுத்துவது உள்ளிட்ட திட்டங்களும் தாத்தரா மற்றும் நாகர் ஹவேலியில் தொடங்கி வைக்கப்பட்டன.  ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பயனாளிகளுக்கு அவர் தங்க அட்டைகளையும் வழங்கினார். மேலும் பயனாளிகளுக்கு வன் அதிகார் பத்திரங்களையும் பிரதமர் வழங்கினார்.

    பின்னர் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இன்றைக்குத் தான், 1,400 கோடிக்கும் அதிக மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்திருப்பதுடன் பலவற்றுக்கு அடிக்கல் நாட்டியிருப்பதையும் சுட்டிக்காட்டினார். இந்தத் திட்டங்கள் சுகாதாரத்திற்கான  உள்கட்டமைப்பு, கல்வி உள்ளிட்டவற்றுக்கு  இணைப்பை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறினார்.

    தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய தொழில்கொள்கை மற்றும் புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டு மக்களின் நலனில் அரசு அக்கறை கொண்டிருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், “அனைவரும் இணைவோம், அனைவரும் முன்னேறுவோம்”  என்ற கொள்கையின் அடிப்படையில் நாம் பணியாற்றி வருவதாக கூறினார்.

    டாமன் மற்றும் டையூ, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆகியவை திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.  இந்த இரண்டு யூனியன் பிரதேசங்களும் மண்ணெண்ணெய் பயன்படுத்தப்படாத பகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் இல்லந்தோறும் சமையல் எரிவாயு இணைப்பு. மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு ஆகிய வசதிகள் செய்யப்பட்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.

   பிரதமரின் இலவச வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் உள்ள ஏழை எளிய, மக்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும்  அவர் தெரிவித்தார்.  ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் தங்கஅட்டைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

     கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களுக்கு இந்த இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் ரூ.9,000 கோடி முதலீடு செய்யப்பட்டிருப்பதை எடுத்துரைத்த பிரதமர், அவை பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு வழி வகுத்திருப்பதாக கூறினார்.  மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டியிருப்பதன் மூலம் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ ஆகியவை முதலாவது மருத்துவக் கல்லூரியைப்  பெற்றிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த ஆண்டு தொடக்கத்தில் மருத்துவக் கல்லூரியை இயக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இன்று இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் ஓராண்டில் 15 மருத்துவ இருக்கைகள் மட்டுமே இருந்ததாகவும், மருத்துவக் கல்லூரியை  அமைத்திருப்பதன் மூலம் தற்போது 150 இருக்கைகள் அமையும் என்று தெரிவித்த பிரதமர் மருத்துவக் கல்லூரி, மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதியை அளிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

   ஆயஷ்மான் பாரத் திட்டம் குறித்து பேசிய பிரதமர், இது, உலகின் மிகப்பெரிய சுகாதாரத்திட்டம் என்றும்,  இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளும் பத்தாயிரம் ஏழைகள் பயனடைந்து வருவதாகத்  தெரிவித்தார். திட்டம் தொடங்கப்பட்ட 100 நாட்களில் மட்டும் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏழை நோயாளிகள் பயனடைந்து இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், நகரங்களிலும் கிராமங்களிலும் நிரந்தர வீடுகளை ஏழைகளுக்கு வழங்குவதற்காக பெரிய அளவிலான இயக்கம் செயலாக்கத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

     இதற்கு முந்தைய அரசு 5 ஆண்டுகளில் 25 லட்சம் வீடுகளை மட்டுமே கட்டியிருந்ததை சுட்டிக்காட்டிய அவர் தமது அரசு, நாங்கள் ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடியே 25 லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகளை கட்டியிருப்பதாகத் தெரிவித்தார்.   தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியில் மட்டும் 13,000 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டிருப்பதாக பிரதமர் கூறினார். 

      மலைவாழ் மக்களுக்கு நலத்திட்டங்களை  உறுதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.  வன நிதித் திட்டத்தின் கீழ், வனப்பகுதிகளில் உற்பத்தியாகும பொருட்களுக்கான மதிப்பை மேம்படுத்தும் வகையில் மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் மலைவாழ் மக்களின் கலாச்சாரத்தை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

  தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி சுற்றுலாத்துறைக்கு அதிக அளவில் சாத்தியமாக அமைந்துள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.  சுற்றுலாத்துறை வரைபடத்தில் இப்பகுதியை கொண்டுவருவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

    மீனவர்களின் வருவாயை அதிகரிப்பதற்கு நீலப்புரட்சிப் பணியின் கீழ் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மீன்வளத்துறையை மேம்படுத்த சிறப்பு நிதி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் கீழ் இத்துறையை மேம்படுத்த ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

   இந்தியாவின் 120 கோடி மக்களும் நமது குடும்பம் என்றும் அவர்களது நல்வாழ்வில் தாம் உறுதிபூண்டிருப்பதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.

---------


(Release ID: 1560762) Visitor Counter : 179