பிரதமர் அலுவலகம்

அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு, போக்குவரத்து வசதி மற்றும் தொழில் தொடங்குவதை எளிமையாக்கியிருப்பது கடலோர மற்றும் மேற்கு ஒடிசாவிற்கு ஊக்கத்தை அளிக்கும்

பிரதமர் நாளை ஒடிசாவின் பாலங்கிர் பயணம், பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்கிறார்.
ஜர்சுகுடா பன்னோக்கு சரக்கு போக்குவரத்து பூங்கா நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படுகிறது
பாலங்கிர் & பிச்சுபாலி இடையிலான புதிய ரயில்பாதை தொடங்கி வைக்கப்படுகிறது

Posted On: 14 JAN 2019 4:12PM by PIB Chennai

    பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை, 15 ஜனவரி, 2019 அன்று ஒடிசா மாநிலம் பாலங்கிர் செல்கிறார். ஜர்சுகுடாவில் அமைக்கப்பட்டுள்ள பன்னோக்கு  சரக்கு போக்குவரத்து பூங்கா மற்றும் இதர வளர்ச்சித் திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். பாலங்கிர் – பிச்சுபாலி  இடையிலான புதிய ரயில் பாதையையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். சோனிப்பூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் நிரந்தர கட்டடத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

    ஜர்சுகுடா  பன்னோக்கு சரக்கு போக்குவரத்து பூங்கா, ரூ.100 கோடி  மதிப்பீட்டில்  கட்டப்பட்டுள்ளது.  ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் தனியார் சரக்குப் போக்குவரத்து உள்ளிட்ட உள்நாட்டு சரக்கு போக்குவரத்துக்கு இது உதவிகரமாக இருக்கும். இந்த பன்னோக்கு சரக்கு போக்குவரத்து பூங்கா, ஹவுரா – மும்பை நெடுஞ்சாலையில், ஜர்சுகுடா ரயில் நிலையத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவைச் சுற்றி அமைந்துள்ள எஃகு, சிமெண்ட், காகித ஆலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய  தொழிற்சாலைகளுக்கு இது உதவிகரமாக இருக்கும்.  இந்த பன்னோக்கு சரக்கு போக்குவரத்துப் பூங்கா , ஜர்சுகுடாவை ஒடிசா மாநிலத்தின் முக்கிய சரக்கு போக்குவரத்து வளாகமாக மாற்றுவதுடன், மாநிலத்தில் தொழில் தொடங்குவதையும்  மேலும் எளிதாக்கும்.

    பாலங்கிர் – பிச்சுபாலி இடையிலான 15 கிலோ மீட்டர் தொலைவுக்கான புதிய ரயில்பாதை, கடலோர ஒடிசாவை மேற்கு ஒடிசாவுடன் இணைப்பதுடன், மாநிலம் முழுவதும் வளர்ச்சியை ஏற்படுத்தவும், உதவிகரமாக இருக்கும். அத்துடன், புவனேஷ்வரம் மற்றும் புனேயிலிருந்து புதுதில்லி மற்றும் மும்பை போன்ற முக்கிய நகரங்களுக்குச்  செல்வதற்கான பயண தூரத்தையும் குறைக்கும். ஒடிசாவில் உள்ள பல்வேறு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் குடிசைத் தொழில்களுக்கும் இந்த ரயில் பாதை பலனளிப்பதுடன்,  ஒடிசாவில் சுரங்கத் தொழில் வாய்ப்புகளை பயன்படுத்தவும் வழிவகை செய்யும். 

     இந்த பயணத்தின்போது, கீழ்காணும் வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கிவைக்க உள்ளார் :-

  • ஜர்சுகுடா – வைசியநகரம் மற்றும் சம்பல்பூர் – ஆங்குல் இடையேயான 813 கி.மீ தொலைவுக்கு ரூ.1,085 கோடி  செலவில் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகள் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
  • பார்பாலி – துங்காலிபாலி மற்றும் பாலங்கிர் – தியோகவுன் இடையே 13.5 கி.மீ தூரத்திற்கு இருவழிப்பாதையாக மாற்றப்பட்ட சாலையும், அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த இருவழிச்சாலை ஒடிசாவின் தொழில்துறைக்கு ஊக்கமளிப்பதாக அமையும்.
  • தெருவாலி – சிங்காப்பூர் சாலை ரயில் நிலையத்திற்கு இடையே அமைக்கப்பட்டுள்ள பாலம் எண் 588-ம் அர்ப்பணிக்கப்படுகிறது. 2017 ஜூலையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது நாகவேலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தால் துண்டிக்கப்பட்ட போக்குவரத்து வசதி, இந்தப் பாலத்தால் மீண்டும் சீரடையும்.

மக்களுக்கு பாஸ்போர்ட் சேவைகளை ஏற்படுத்தித் தருவதோடு  பயண சிரமங்களை  குறைக்கவும், ஜகத்சிங், கேந்திரபாரா, பூரி, காந்தமால், பர்கார் மற்றும் பாலங்கிர் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாஸ்போர்ட்  சேவை மையங்களையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.  இது, இப்பகுதி மக்களுக்கு மிகுந்த பயன் அளிப்பதுடன், பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளுக்காக அவர்கள் புவனேஷ்வர் செல்ல வேண்டியதும் தவிர்க்கப்படும்.

காந்தஹராடியில் உள்ள நிலமாதவ் மற்றும் சித்தேஷ்வர் (பவுத்த) கோவில்களின் புனரமைப்பு மற்றும் மறு நிர்மாணப் பணிகளையும், பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்தக் கோவில்கள் ஒடிசாவின் மேற்குப் பகுதியில் பின்பற்றப்படும் பண்டைக்கால கலாச்சாரமான “ஹர – ஹரி” எனப்படும் கோவில் கட்டடக் கலையை பிரதிபலிப்பவையாகும்.

இது தவிர, பாலங்கிரில் பண்டைக்கால வர்த்தக வழித்தடத்தில் அமைந்துள்ள ராணிப்பூர் ஜரியால் குழும நினைவுச் சின்னங்களின் புனரமைப்பு மற்றும் மறு நிர்மாணப் பணிகளும் இந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கப்படுகிறது. 

 காலஹந்தியில் உள்ள ஆசர்கர் கோட்டை புனரமைப்பு மற்றும் மறு நிர்மாணப் பணிகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.  பண்டைக்கால நூல்களில் ஆசர்கர் ஒரு முக்கிய அரசியல் மற்றும் வர்த்தக மையமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சோனிப்பூர் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கான நிரந்தர கட்டடத்திற்கும் திரு மோடி அடிக்கல் நாட்டுகிறார்.   இந்தப் பள்ளியில் பயிலும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்காக அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது.

----------------------



(Release ID: 1560077) Visitor Counter : 126