பிரதமர் அலுவலகம்

அந்தமானில் பிரதமர்:

போர்ட் பிளேரில் உள்ள செல்லுலார் சிறைச் சாலையை பார்வையிட்டார்.
உயர் கம்பத்தில் கொடி ஏற்றினார், நேதாஜி சுபாஷ் சந்திர போஸிற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்
இந்திய மண்ணில் நேதாஜி மூவர்ண கொடியேற்றிய 75-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்றார்.

Posted On: 30 DEC 2018 6:23PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள போர்ட் பிளேருக்கு இன்று வருகை தந்தார்.

போர்ட் பிளேரில் தியாகிகளுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அங்குள்ள செல்லுலார் சிறைச்சாலையைப் பார்வையிட்டார். மத்திய சிறைச்சாலையில் வீர சவர்கார் உள்ளிட்ட பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்கள் அடைக்கப்பட்டிருந்த சிறை அறைகளை அவர் பார்வையிட்டார். பிறகு உயர் கம்பத்தில் கொடி ஏற்றினார். அங்குள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் உருவ சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

இந்திய மண்ணில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மூவர்ண கொடியேற்றிய 75-ஆம் ஆண்டு நிறைவை குறிக்கும் விழாவில் பங்கேற்ற பிரதமர், நினைவு அஞ்சல் தலை, நாணயம் மற்றும் அஞ்சல் முதல் நாள் உறை ஆகியவற்றை வெளியிட்டார்.

எரிசக்தி, தொடர்பு மற்றும் சுகாதாரத் துறை தொடர்பான பல்வேறு திட்டங்களையும் அவர் தொடங்கிவைத்தார்.

இந்த விழாவில் பேசிய பிரதமர், அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் இயற்கை அழகின் சின்னங்கள் மட்டும் அல்ல, இந்தியர்களுக்கு புனிதத்ம் போன்றது என்று தெரிவித்தார். நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கூட்டு தீர்மானத்தை நமக்கு நினைவுறுத்துகிறது அந்தமான் நிக்கோபார் தீவுகள் என்றார்.

தீவுகளுக்கு அதிகாரம் அளிப்பதிலும், அவற்றை மேம்படுத்துவதிலும் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றும் இன்று தொடங்கப்பட்டுள்ள கல்வி, சுகாதாரம், தொடர்பு, சுற்றுலா, வேலைவாய்ப்பு போன்ற துறைகள் தொடர்பான பல்வேறு திட்டங்கள் இந்த நோக்கத்தை மேலும் வலுவடைய செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.

மத்திய சிறைச் சாலையை தான் பார்வையிட்டது குறித்தும், 75 ஆண்டுகளுக்கு முன்பு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மூவர்ண கொடி ஏற்றிய இடத்தை தாம் பார்வையிட்டது குறித்தும் பேசினார். அப்போது, ஆயிரக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்த மத்திய சிறைச்சாலை தனது வழிப்பாட்டு தலத்தை விட குறைந்தது அல்ல என்று கூறினார். சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை நமது நாடு என்றுமே மறக்காது என்றும் குறிப்பிட்டார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸினை நினைவு கூர்ந்த பிரதமர், நேதாஜியின் அழைப்பை ஏற்று பல இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையை நமது இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக அர்ப்பணித்தனர் என்பதை சுட்டிக்காட்டினார். 150 அடி உயரத்தில் பறக்கும் இந்தக் கொடி, 1943 ஆம் ஆண்டு நேதாஜி மூவர்ண கோடி ஏற்றிய தினத்தின் நினைவை போற்றிப் பாதுகாக்கும் முயற்சி என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், ராஸ் தீவு இனி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு என்று அழைக்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். அதேபோல், நெயில் தீவு ஷாஹித் தீவு என்றும் ஹவேலோக் தீவு சுவராஜ் தீவு என்று பெயர் மாற்றப்படும் என்றும் கூறினார்.

நேதாஜியின் வழியில் இந்தியர்கள் வலிமையான இந்தியாவை உருவாக்க பாடுபட்டு வருகின்றனர் என்றார் பிரதமர்.

நாடு முழுவதும் உள்ள தொடர்பை வலுப்படுத்த அரசு செயல்பட்டுவருகிறது. நமது நாட்டின் நாயகர்களை நினைவுகூர்வதும் மரியாதை செய்வதும் நமது ஒருமைப்பாட்டு உணர்வை வலுப்படுத்த உதவுகிறது. நமது நாட்டு வரலாற்றின் பெருமிதமான அத்தியாயங்கள் பக்கங்களை அனைத்தையும் சிறப்பிக்க மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று பிரதமர் கூறினார். இது தொடர்பாக, பாபாசாஹேப் அம்பேத்கர் தொடர்பான பஞ்ச தீர்த்தம், தேசிய காவல் நினைவகம் மற்றும் ஒற்றுமைக்கான சிலை ஆகியவை குறித்து எடுத்துரைத்தார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் சர்தார் படேல் பெயரில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இந்த பெரும் தலைவர்களின் ஊக்குவிப்போடு உருவாக்கப்படும் புதிய இந்தியா வளர்ச்சியை தனது மையக் கருவாக கொண்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.

சுற்றுச்சூழல் தேவைகளுக்கு ஏற்றாற்போல் தீவுகளின் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள அரசு உறுதியாக உள்ளதாக பிரதமர் தெரிவித்தார். தொழில்துறை மேம்பாட்டின் ஒரு பகுதியாக சுற்றுலா, உணவு பதனிடுதல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் கூறினார்.

அந்தமான் நிக்கோபார் தீவுகளை, முடிந்தவரை தற்சார்புடைய பூர்த்தி தீவுகளாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார். போர்ட் பிளேர் கப்பல் பட்டறையின் விரிவாக்கம் குறித்து பேசுகையில் இந்த விரிவாக்கம் மூலம் பெரிய கப்பல்களின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் கூறினார். இரண்டு வாரங்களில் இந்த தீவுகளின் கிராமப்புற சாலைகளின் நிலைமை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் பிரதமர் உத்தரவிட்டார். மேலும், இந்த அறிக்கை வந்தவுடன் மத்திய அரசு அதனை ஆய்வு செய்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் உறுதி அளித்தார்.

வீர சவர்கார் சர்வதேச விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் அமைக்கப்பட உள்ளது என்று பிரதமர் கூறினார். அதேபோல், சென்னையில் இருந்து கடல் வழியாக கண்ணாடி இழை கேபிள் அமைக்கப்படுகிறது, இதன் மூலம் நல்ல இணைய வசதி கிடக்கும் என்று தெரிவித்த பிரதமர், தண்ணீர், மின்சாரம், தூய்மையான எரிசக்தி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.  

*****



(Release ID: 1557961) Visitor Counter : 396