பிரதமர் அலுவலகம்

காஸிப்பூரில் பிரதமர்

மகாராஜா சுஹல்தேவ் நினைவு அஞ்சல் தலையை வெளியிடுகிறார்
காஸிப்பூரில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுகிறார்

Posted On: 29 DEC 2018 2:04PM by PIB Chennai

உத்தரப்பிரதேச மாநிலம் காஸிப்பூருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (29.12.2018) பயணம் மேற்கொண்டார்.  மகாராஜா சுஹல்தேவ் நினைவு அஞ்சல் தலையை அவர் வெளியிட்டார்.  காஸிப்பூரில் மருத்துவக் கல்லூரிக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இன்றைய பல்வேறு நிகழ்வுகளில் தொடங்கப்பட்ட திட்டங்கள் எதிர்காலத்தில் பூர்வாஞ்சலை மருத்துவ மையமாகவும், வேளாண் துறை ஆராய்ச்சி மையமாகவும் மாற்றும் என்றார். 

மக்களால் மதிக்கத்தக்க நாயகராகவும், தீரமிக்கப் போராளியாகவும் மகாராஜா சுஹல்தேவ் விளங்கியதைப் பிரதமர் நினைவுகூர்ந்தார். மகாராஜா சுஹல்தேவின் தற்காப்புக்கலை மற்றும் ராணுவ பலத்தைப் பற்றியும், நிர்வாகத் திறன்கள் பற்றியும் பிரதமர் எடுத்துரைத்தார்.  இந்தியாவில் பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்துக்கும், சமூக வாழ்க்கைக்கும்  பங்களிப்பு செய்த அனைவரின் பெருமைகளை பாதுகாக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளதாகப் பிரதமர் கூறினார். 

மத்திய அரசும், உத்தரப்பிரதேச மாநில அரசும் மக்களின் நலன்களில் மிகுந்த அக்கறையோடு இருப்பதாகப் பிரதமர் கூறினார்.  ஒவ்வொருவருக்கும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதே இவற்றின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார். 

இங்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி இந்தப் பிராந்தியத்தில் நவீன மருத்துவ வசதிகளைக் கொண்டிருக்கும் என்று பிரதமர் தெரிவித்தார்.  இந்தப் பிராந்திய மக்களின் நீண்டகால கோரிக்கையாக இது இருக்கிறது என்றும், விரைவில் இது நிறைவேற்றப்பட்டு விடும் என்றும் அவர் கூறினார்.  இந்தப் பகுதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு அமைக்கப்பட்டுள்ள பல முக்கியமான மருத்துவமனைகளில் ஒன்றாக இது திகழும் என்றும் அவர் தெரிவித்தார்.  இந்தச் சூழலில் கோரக்பூர், வாரணாசி ஆகிய இடங்களிலும் மருத்துவமனைகள் அமையவிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடு விடுதலையான காலத்தில் இருந்து முதன்முறையாக மத்திய அரசு சுகாதாரத்தில் மிக அதிகமான கவனத்தை செலுத்தி வருவதாகப் பிரதமர் தெரிவித்தார்.  ஆயுஷ்மான் பாரத் திட்டம் பற்றியும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது பற்றியும் அவர் குறிப்பிட்டார்.  வெறும் 100 நாட்களில்  பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயனடைந்திருப்பதாக அவர் கூறினார். 

மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள காப்பீட்டுத் திட்டங்கள் பற்றியும் பிரதமர் குறிப்பிட்டு ஜீவன் ஜோதி அல்லது சுரக்ஷா பீமா திட்டங்களில் நாடுமுழுவதும் 20 கோடி மக்கள் இணைந்திருப்பதாகக் கூறினார்.

வேளாண் துறையோடு தொடர்புடைய பலத் திட்டங்கள் இந்த பிராந்தியத்தில் இருப்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். வாரணாசியில் உள்ள சர்வதேச  அரிசி ஆராய்ச்சிக் கழகம், வாரணாசி மற்றும் காஸிப்பூரில் உள்ள சரக்குப் போக்குவரத்து மையங்கள், கோரக்பூரில் உள்ள உரத் தொழிற்சாலை, பன்சாகர் பாசனத்திட்டம் ஆகியவை இவற்றில் அடங்கும்.  இத்தகைய திட்டங்கள் விவசாயிகளுக்குப் பலன் தரும் என்றும் அவர்களின் வருவாயை அதிகரிக்க உதவும் என்றும் அவர் கூறினார்.

உடனடி அரசியல் ஆதாயத்திற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவாது என்பதைப் பிரதமர் வலியுறுத்தினார்.   செலவை விட ஒன்றரை மடங்கு அதிகம் என்ற அடிப்படையில் 22 வகையான பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது என்றும் அவர் கூறினார்.  வேளாண் துறைக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் பல்வேறு முன்முயற்சிகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இணைப்புத் தொடர்பான முன்னேற்றங்கள் பற்றி பேசிய பிரதமர், பூர்வாஞ்சல் விரைவுச்சாலைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்றார்.  தாரிகாட்-காஸிப்பூர்-மவ் பாலப் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.   அண்மையில் திறக்கப்பட்ட வாரணாசி-கொல்கத்தா இடையேயான நீர்வழிப்பாதை காஸிப்பூருக்கும் பயன்படும் என்று அவர் தெரிவித்தார்.  இந்தப் பிராந்தியத்தில் வணிகத்தையும், வர்த்தகத்தையும் இந்தத் திட்டங்கள் அதிகரிக்கச் செய்யும் என்றும் பிரதமர் கூறினார்.

************

எஸ்எம்பி / வேணி



(Release ID: 1557775) Visitor Counter : 259