மத்திய அமைச்சரவை

இந்திய விண்வெளித் திட்டத்திற்கு உத்வேகம்

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் விண்வெளித் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஆளில்லாத இரண்டு விண்வெளிப் பயணம் மற்றும் ஒரு விண்வெளி வீரர்களை அனுப்பும் விண்வெளி திட்டத்திற்கு ஒப்புதல்
40 மாதத்திற்குள் விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு செல்லும் முதல் பயணம்
முதல்கட்ட செலவு 9023 கோடி ரூபாய் என்று மதிப்பீடு

Posted On: 28 DEC 2018 3:49PM by PIB Chennai

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் விண்வெளித் திட்டத்திற்கு புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  இந்தப் பயணம் அதிகபட்சமாக 7 நாட்கள் இருக்கும்.  மூன்று விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு தாங்கிச் செல்லும் வகையில் அமைக்கப்படும் விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க் – 3 ராக்கெட் விண்ணில் செலுத்தும்.  இந்த விண்வெளித் திட்டத்தில் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கத் தேவையான கட்டமைப்பு வசதிகள், விண்கல அமைப்புக்கள், தரைக் கட்டுப்பாடு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.  இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இந்த திட்டம் தொடர்பாக, தேசிய அளவிலான அமைப்புகள், சோதனைக் கூடங்கள் மற்றும் தொழில் துறையினரோடு விரிவான அளவில் ஒத்துழைத்து விண்வெளி திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றும்.

செலவு:

இந்த விண்வெளித் திட்டச் செலவு சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்குள் இருக்கும். தொழில் நுட்ப மேம்பாடு, விண்வெளித் திட்டத்திற்கு தேவையான வன்பொருள், மென்பொருள் மற்றும் தேவையான கட்டமைப்பு வசதிகளுக்கான செலவுகள் இதில் அடங்கும்.  இந்த விண்வெளித் திட்டத்தில் இரண்டு ஆளில்லா விண்வெளிப் பயணம் முதலில் மேற்கொள்ளப்படும்.  இதனைத் தொடர்ந்து, விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள். 

பயன்கள்:

  • இந்த விண்வெளித் திட்டம்  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கும், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், தேசிய அமைப்புகள் மற்றும் பிற விஞ்ஞான ஆராய்ச்சி  மையங்களோடு ஒருங்கிணைந்து செயல்பட வழிவகுக்கும். 
  • மாறுபட்ட தொழில்நுட்பங்கள், தொழில் நிறுவனங்களின் திறமைகள், விரிவான ஆராய்ச்சி வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவை ஏராளமான மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு பயனளிக்கும்.
  • விண்வெளிப் பயணத்திற்கு தேவையான அமைப்புகள், தொழில் துறையினரிடம் இருந்து தருவிக்கப்படும்.
  • நவீன தொழில்நுட்பத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, மனித வளத்தையும் பயிற்சி அளிக்க இந்த விண்வெளித் திட்டம் வகை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இளம் மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை எடுத்து படிக்க இந்த திட்டம் ஆர்வத்தைத் தூண்டுவதோடு, தேசிய வளர்ச்சிக்கும் இது உதவும்.

செயல்பாட்டு உத்தி மற்றும் இலக்கு:

விண்வெளித் திட்டத்திற்கு தேவையான வன்பொருளைப் பெறுவது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் பொறுப்பாகும்.   தேசிய அமைப்புகள், சோதனைக் கூடங்கள், கல்வி நிறுவனங்கள், விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதோடு மனித உயிர் அறிவியல் தொழில்நுட்ப மேம்பாடு முயற்சிகள் மற்றும் வடிவமைப்பு, மறுஆய்வுகள் ஆகியவற்றை மேற்கொள்ளும். மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்ட நாளிலிருந்து 40 நாட்களுக்குள் முதல் விண்வெளி வீரர்கள் பயணத்தை நிகழ்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  அதற்கு முன்பு இரண்டு ஆளில்லா விண்கலங்களை விண்ணுக்கு அனுப்பி விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும்  திட்ட நிர்வாக விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும்.

தாக்கம்:

  • இந்த விண்வெளித் திட்டத்தின் மூலம் நாட்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அபிவிருத்தி அடையும்.
  • இந்த விண்வெளிப் பயணம் வருங்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்ப மேம்பாடு குறித்து முடிவெடுக்க உதவும்.
  • விண்வெளித் திட்டத்தின் மூலம் பெருமளவு வேலை வாய்ப்பு உருவாக்கப்படுவதோடு மனித வள மேம்பாடு, தொழில்துறையினரின் திறன் மேம்பாடு ஆகியவை மேம்படும்.
  • விண்வெளி வீரர்களை அனுப்பும் திறன் பெற்ற நாடு என்ற நிலையை இந்தியா அடைவதோடு, வருங்காலத்தில் உலகளாவிய விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் இந்தியா ஒருங்கிணைந்து செயல்பட முடிவதோடு, அது நாட்டுக்கு நீண்ட கால பயன்களையும் அளிக்கும்.

***********

ஏடிஜி / வேணி

 



(Release ID: 1557653) Visitor Counter : 691