பிரதமர் அலுவலகம்

உத்திரப்பிரதேசம், பிரயாக்ராஜில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 16 DEC 2018 8:01PM by PIB Chennai

மேடையில் வீற்றிருக்கும் உத்திரபிரதேச ஆளுநர் திரு.ராம் நாயக் அவர்களே, உத்திரபிரதேசத்தின் புகழ்மிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களே, துணை முதல்வர் திரு.கேசவ் பிரசாத் மவுர்யா அவர்களே, உத்திரபிரேதேச அமைச்சரவையின் உறுப்பினர் மற்றும் எனது நாடாளுமன்ற சகாக்களான திரு.ஷியாம்சரண் குப்தா அவர்களே, திரு.வினோத் குமார் சோனாக்கர் அவர்களே மற்றும் திரு.வீரேந்திர அவர்கள், பிரயாக்ராஜின் மேயர் திரு.அபிலாஷா குப்தா அவர்களே மற்றும் இங்கு பெருந்திரளாக குடியிருக்கும் எனதருமை சகோதர, சகோதரிகளே,

தவம், கலாச்சாரம் மற்றும் மாண்புகளின் இருப்பிடமாக விளங்கும் பிராயகின் மக்களை நான் வணங்குகிறேன். பிரயாக்ராஜிற்கு செல்லும் வாய்ப்பு ஒருவருக்கு எப்போது கிடைத்தாலும், மனம் முழுவதிலும் புதிய சக்தி நிரம்ப பெறும். இந்த இடத்தின் ஒவ்வொரு துளியும் மகான்கள் மற்றும் சாதுக்களின் தெய்வீகத்தை பிரதிபலிக்கிறது. இதனை சுற்றுலா பயணிகள் தொன்றுதொட்டு உணர்ந்து வருகின்றனர்.

யானையை ஒத்த பாவங்களை அழிப்பதற்கான சிங்கத்துடன்  ஒப்பிடப்படும் பிராயகின் தாக்கம் மற்றும் பெருமையை விவரிப்பது கடினமாகும் என்ற பொருள்பட இந்தியில் பழமொழியும் உண்டு. இந்த புனித தலம், மகிழ்ச்சியின் கடலான இறைவன் ராமபிரானுக்கும் கூட நித்திய பேரின்பத்தை அளித்துள்ளது.

சகோதர, சகோதரிகளே,

அர்த-கும்பமேளாவிற்கு முன்பாக, நான் இங்கு வந்துள்ளதால், நான் உங்களுக்கு நற்செய்தியை அளிக்க விரும்புகிறேன். இந்த முறை அர்த-கும்பமேளாவின்போது அனைத்து பக்தர்களும் அக்ஷாயவத்தை காண முடியும். பல தலைமுறைகளாக, அக்ஷாயவத் கோட்டைக்குள் பூட்டப்பட்டிருந்தது. ஆனால், இம்முறை இங்கு வருகை தரும் ஒவ்வொரு பக்தரும் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணியில் நீராடிய பின்பாக அக்ஷயாவத்தை காணும் வாய்ப்பை பெறுவார்கள். (அக்ஷாயவத் என்பது அத்திமரம்.  மார்க்கண்டேயனுக்கு தெய்வீக சக்தியை உணர்த்தும் பொருட்டு பிரபஞ்ஜம் முழுவதும் வெள்ளத்தை விஷ்ணு பகவான் ஏற்படுத்திய போது, நீரில் மூழ்காமல் காட்சியளித்த ஒரே மரம் அக்ஷாயவத்)

மேலும், மக்கள் சரஸ்வதி கும்பமேளாவுடன் அக்ஷாயவத்தையும் தற்போது காணலாம். சிறிது நேரத்திற்கு முன்பாக, நான் அக்ஷாயவத்தை காணச் சென்றேன், தனது ஆழமான வேர்களின் காரணமாக, மீண்டும்மீண்டும் இம்மரம் பூப்பது, நாம் வாழ்க்கையில் உயிரோட்டமான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என்ற உணர்வினை ஏற்படுத்துகிறது.

நண்பர்களே,

சிறிது நேரத்திற்கு முன்பாக, தெய்வீகமான மற்றும் துடிப்பான பிரயாக்ராஜை, இன்னும் கவர்ச்சிகரமாகவும், நவீனமாக்கவும் சுமார் ரூ.4500 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்கள் துவங்கி வைக்கப்பட்டன மற்றும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இதில், சாலைகள், ரயில், ஸ்மார்ட் நகரம் மற்றும் தாய் கங்காவை தூய்மைப்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களும் அடங்கும்.

பிரயாக்ராஜ் மக்களின் வாழ்வினை எளிமையாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள வசதிகளுக்காக அவர்களை வாழ்த்துகிறேன். இத்திட்டங்கள் கும்பமேளாவிற்கு மட்டுமல்லாமல் வருகை தரும் பக்த கோடிகளுக்கும் பயனளிக்கும்.

நண்பர்களே,

பா.ஜ.க. அரசு, கும்பமேளாவின்போது போக்குவரத்து தொடர்பு முதல் உள்கட்டமைப்பு வரையிலான பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்துகிறது. ரயில்,  சாலை அல்லது விமான நிலையத்திற்கான இணைப்பு அல்லது சாலைகளை தரம் உயர்த்துதல் உள்ளிட்ட பிரயாக்ராஜை இணைக்கும் அனைத்து சாலைகளையும் வலுப்பெற செய்யவும், மேம்படுத்தவும் நாங்கள் முயன்று வருகிறோம். ரயில்வே அமைச்சகம், இம்முறை குறிப்பாக கும்பமேளாவிற்காக, பல புதிய ரயில்களை துவக்க உள்ளது. நான் துவக்கி வைத்த பெரும் மேம்பாலங்கள், ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள், மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி போன்ற திட்டங்கள் இப்பகுதியின் உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பினை மேம்படுத்தும்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்பாக, உங்கள் பிரயாக்ராஜ் விமான நிலையத்தின் புதிய முனையத்தை துவக்கி வைக்க நான் செல்லவிருக்கிறேன். இந்த புதிய முனையம் ஒரு வருடத்திற்குள்ளாக, சாதனை நேரத்திற்குள், கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இம்முனையம் பயணிகளுக்கு மிகுந்த பயனளிக்கும் அதே நேரத்தில், பிற நகரங்களுடனான பிரயாக்ராஜின் இணைப்பினை அதிகரிக்கும். இதற்காக பிரயாக்ராஜ் மக்களுக்கு முன்னதாகவே எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இந்த வசதிகள் அனைத்தும் அர்த்-கும்பமேளாவிற்கு முன்பாக வரவிருந்தாலும், அதன் தாக்கம், இத்துடன் மற்றும் நின்றுவிடாது. எதிர்காலத்தில், பிரயாக்ராஜ் மக்கள் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நேர்மறையான தாக்கங்களை உருவாக்கும். முன்பு போல் அல்லாமல், இம்முறை அனைத்து வசதிகளும் நிரந்தரமாக அமையப்போவது ஒரு சிறப்பாகும். இது தற்காலிகமான பணி அல்ல. ரூ.100 கோடிக்கும் அதிகமான செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையமானது, பிரயாக்ராஜின் பழமை மற்றும் நவீன கலவையின் அடையாளமாகும். ஸ்மார்ட் பிரயாக்ராஜிற்கு இது முக்கியமான மையமாகும். சாலைகள், மின்சாரம் முதல் குடிநீர் வசதி வரை அனைத்தும் இம்மையத்திலிருந்து இயக்கப்படும்.

சகோதர, சகோதரிகளே,                                       

கும்பமேளாவின்போது ஆன்மிகம் முதல் தொழில்நுட்பம் வரையிலான ஒவ்வொரு அம்சத்தின் அனுபவத்தை உலககெங்கிலும் உள்ள மக்கள் பெற்றிட அரசு முயன்று வருகிறது. அவர்கள் ஆன்மிகம் மற்றும் தொழில்நுட்பத்தின் அனுபவத்தை பெறுவார்கள்.

இந்த இடத்திற்கு வருகை தரும் மக்கள், திரும்பி செல்லும்போது அவர்களுடன் ஆன்மிகம், நம்பிக்கை மற்றும் நவீனத்துவம் ஆகியவற்றின் கலவை மிக பிரம்மாண்டமானது மற்றும் நிகரில்லாதது என்ற உணர்வினை கொண்டு செல்வதை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இங்கு உருவாக்கப்பட்டுள்ள சுய-புகைப்படத்திற்கான இடம், கவர்ந்திழுக்கக் கூடியதாக இருக்கும். சிறிது நேரத்திற்கு முன்பாக, நான் சிறப்பு விருந்தினர்களுடன் திவ்ய கும்ப், பாவ்ய கும்ப் சுய-புகைப்படத்திற்கான இடத்தில் சுயபுகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

நண்பர்களே,

திரிவேணி சங்கமம் பிரம்மாண்டமாக உருவாகாமல், அர்த்-கும்ப் மற்றும் சுயபுகைப்படத்தின் இணைப்பு நிறைவு பெறாது. ஆற்றலின் மிகப் பெரிய ஆதாரம் தாய் கங்கை ஆகும். தாய் கங்கை, தூய்மையாகவும், தெளிவாகவும் மற்றும் அதன் ஓட்டம் தடைபடாமலும் இருக்க வேண்டும். இதனை அடைந்திட அரசு துரிதமாக பணியாற்றி வருகிறது.

இன்று துவங்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான திட்டங்களில், தாய் கங்கையை தூய்மைப்படுத்துதல் மற்றும் அதன் படித்துறைகளை அழகுபடுத்துவதற்கான திட்டமும் ஒன்றாகும். ரூ.1700 கோடியில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பல்வேறு கால்வாய்கள் கங்கையில் நேரடியாக பாய்வதை தடுக்கும். அதே நேரத்தில், நமாமி கங்கே திட்டத்தின் கீழ் சுமார் 150 படித்துறைகள் அழகுப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில், சுமார் 50 படித்துறைகள் முடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 6 படித்துறைகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளன.

சகோதர, சகோதரிகளே,

உத்திரபிரதேசத்தின் பிரயாக்ராஜ், காசி, கான்பூர் மற்றும் பிற நகரங்கள் உள்ளிட்ட கங்கையாற்றின் கரையில் அமைந்திருக்கும் அனைத்து மாநிலங்களிலும் இதே போன்ற வசதிகள் உருவாக்கப்படும். இதுவரை, நமாமி கங்கே திட்டத்தின் கீழ் சுமார் ரூ.24500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான 75 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான ரூபாய்களின் மதிப்பிலான 150 திட்டப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

சகோதர, சகோதரிகளே,

தாய் கங்கையை தூய்மையாக வைத்திருப்பதற்கும், தடையற்ற ஓட்டத்தை உறுதி செய்வதற்கும் அரசின் பங்கை தவிர, கோடிக்கணக்கான தூய்மை காவலர்கள் மற்றும் தாய் கங்காவின் பணியாட்களின் பங்கும் மிக முக்கியமானதாகும். இந்த இயக்கத்துடன் தொடர்புடைய மக்கள், தனிப்பட்ட அளவில் உழைத்து வருகின்றனர். கங்கை மீதான பொதுமக்களின் பங்கேற்பு மற்றும் பொறுப்புகள், நமது முயற்சிகளுக்கான  உத்வேகத்தை அளித்துள்ளன. தற்போது ஏறக்குறைய, கங்கையாற்றை ஒட்டியுள்ள அனைத்து கிராமங்களும் திறந்தவெளி கழிதலற்றவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சகோதர, சகோதரிகளே,

நமது சாஸ்திரங்களில், தூய்மை தெய்வீகத்துடனான தொடர்பை ஏற்படுத்தியுள்ளன. கும்பமேளாவின்போது கடவுளர் இங்கு வசிக்கின்றனர். தாய் கங்கையை தூய்மைப்படுத்தல் மூலமாகவோ அல்லது தூய்மையான கும்பமேளாவை நடத்துவதன் மூலமாகவோ, இம்முறை கும்பமேளாவிற்கான ஏற்பாடுகள் எவ்வித குறைபாடும் இல்லாமல் நிறைவேற்றப்படும்.

இங்கு வருவதற்கு முன்பாக, ‘தூய்மையான கும்பமேளா’ என்ற கண்காட்சியில் கலந்துக் கொண்டேன். கும்பமேளாவின்போது, தூய்மைக்காக நடமாடும் காம்பேக்டர் போன்ற இயந்திரங்கள் மற்றும் பிற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான திட்டங்களை நாங்கள் துவக்கியுள்ளோம்.

நண்பர்களே,

உத்திரபிரதேச அரசுடன் இணைந்து மத்திய அரசு, கண்கவர் வண்ணமும், பிரம்மாண்டமானதாகவும், தெய்வீகத்துடனும் இருப்பதற்கான ஏற்பாடுகளை உறுதி செய்து வருகிறது. இந்தியாவின் புகழ்மிக்க கடந்தகாலம் மற்றும் அற்புதமான எதிர்காலத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.

பிரயாக்ராஜின் ஒவ்வொரு குடிமகனும் அரசின் முயற்சிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். உங்களது தனிப்பட்ட அளவில் நீங்கள் அனைவரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறீர்கள். நகரின் தூய்மை மற்றும் விருந்தோம்பலுக்கான நேர்மறை சுற்றுச்சூழலை உருவாக்கிட நீங்கள் அனைவரும் உழைத்து வருகிறீர்கள். நகரை அலங்கரிப்பதற்காக கண்கவர் ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதை நான் கண்காட்சியில் பார்தேன். ஒவியங்கள் மூலம் பிரயாக்ராஜ் மற்றும் இந்தியாவை வெளிக்காட்டும் இந்த அற்புதமான முயற்சி பாராட்டுக்குரியது. இங்கு வரும் ஒவ்வொரு பயணிக்கும் இந்த அனுபவம் தனித்துவமாக இருக்கும்.

நண்பர்களே,

பிரயாக்ராஜ் மக்களின் இத்தகைய உணர்வினை புரிந்து கொண்டும், உங்களின் அன்பினை பரிசீலித்தும், அர்த்-கும்பமேளாவில் பங்கேற்க உலகெங்கும் உள்ள மக்களுக்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன். கடந்த 1-1.5 வருடத்தில் நான் எந்த இடத்திற்கு சென்றாலும், அங்கு வசிக்கும் இந்தியர்கள் அவர்களது வெளிநாட்டு நண்பர்களுடன் பிரயாக்ராஜிற்கு வருகை தந்து, கலாச்சார பாரம்பரியத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள அழைப்பு விடுத்துள்ளேன். ஏனென்றால் தற்போது நானும் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவன்.

நேற்று திரிவேணி சங்கமத்தில் 70 நாடுகளின் கொடிகள் பறந்ததை நீங்கள் நிச்சயம் கண்டிருப்பீர்கள். இந்தியாவில் நியமிக்கப்பட்டுள்ள 70 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் தூதுவர்கள் மொத்த கும்பமேளா பகுதியையும் ஆய்வு செய்து, அற்புதமான சூழ்நிலையை அனுபவித்தனர்.

இத்தகைய முயற்சிகள், உலகம் முழுவதும் கும்பமேளாவின் புகழை உயர்த்துவதற்கு உதவும்.

நண்பர்களே,

இம்முறை இரண்டு முக்கிய நிகழ்வுகள் ஒரே நேரத்தில் உலகின் மிகவும் பழமையான இரண்டு கலாச்சார இடங்களான, பிரயாக்ராஜ் மற்றும் காசியில் நடைபெற உள்ளன. உலகெங்கும் உள்ள மக்கள் இங்கு அர்த்-கும்பமேளாவிற்காக கூடும்போது, உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் காசியில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தினத்திற்காக கூடுவார்கள். அவர்கள் இந்த இடத்திற்கும் வருகை தர திட்டமிடுவார்கள் என்பது மிகவும் தெள்ளத்தெளிவாகும்..

சகோதர, சகோதரிகளே,

கோடிக்கணக்கான மக்கள் கூடும் அர்த்-கும்பமேளா, வெறும் திருவிழா மட்டுமல்ல, அந்த மக்களுடனான தொடர்பும், கலந்துரையாடலும் நாடு பயணிக்க வேண்டிய திசையை காட்டுவதில் உதவிகரமாக அமைகிறது.  கும்பமேளாவிற்கு கோடிக்கணக்கான மக்கள் வருகை தருவதால், இந்தியாவை மேலும் வளமாகவும், வலுமிக்கதாகவும் உருவாக்குவதற்கான கோடிக்கணக்கான கருத்துக்கள் கிடைக்கப் பெறும்.

கும்பமேளா திருவிழா இந்தியா மற்றும் இந்தியர்களின்-தன்மைக்கான சிறந்த சாட்சியாகும். மொழி மற்றும் சடங்குகளில் உள்ள வேற்றுமைகளை மறந்து நாம் அனைவரும் ஒன்று என்ற உணர்வை இத்திருவிழா விளைவிக்கிறது. இத்திருவிழா நம்மை மட்டும் இணைக்காமல், கிராமங்கள் மற்றும் நகரங்களையும் இணைக்கிறது. இங்கு ஒருவர் ‘ஒரே பாரதம், வளமான பாரதம்’ என்பதன் உண்மையான காட்சியை காணலாம். அத்தகைய சூழ்நிலையில், இங்கு வருகை தரும் நமது விருந்தினர்களை சிறப்பான முறையில் கவனித்துக் கொள்வது நமது பொறுப்பாகும். இந்நிகழ்ச்சி வெறும் பக்திக்கானது மட்டுமல்ல, இந்தியாவின் கவுரவத்தை நிலைநாட்டுவதற்கான நிகழ்ச்சியுமாகும். வருகை தரும் மக்கள் அவர்களுடன், இந்தியா குறித்த புதிய கண்ணோட்டத்தை கொண்டுச் செல்வதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

இந்த காலகட்டத்தில், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு மேலாண்மை குறித்து அறிய வருவார்கள். உலகின் மிகப் பெரிய மேலாண்மை பல்கலைக்கழகம், இந்நிகழ்ச்சியின் பெருமனப்பான்மை, பன்முகத்தன்மை மற்றும் வெற்றி குறித்த மேலாண்மைகளின் நுணுக்கங்கள் குறித்து மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும்.

நண்பர்களே,

கலாச்சார பாரம்பரியம் மற்றும் அறிவின் களஞ்சியமாக இந்தியா அறியப்படுகிறது.  சுவாமி விவேகானந்தர் உள்ளிட்ட பல்வேறு முனிவர்கள் உலகத்திற்கு இச்சக்தியை அறிமுகப்படுத்துவதற்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்தனர். கடந்த நான்கு முதல் நான்கரை ஆண்டுகளாக மத்திய அரசு, நாட்டின் கலாச்சார மற்றும் ஆன்மிக பாரம்பரிய தாக்கத்தை அதன் வளஆதாரங்களுடன் உயர்த்துவதற்கு தொடர்ந்து தீவிரமாக உழைத்து வருகிறது.

நண்பர்களே,

இந்த புனிதமான பிரயாக்ராஜில் இன்று, உங்களிடையே நான் மற்றுமொரு முக்கியமான தலைப்பு குறித்து பேச விரும்புகிறேன். உத்திரபிரதேசத்தில் உள்ள இந்த பிரயாக்ராஜ் என்ற இடம், நீதியின் கோயில் என்றும் அறியப்படுகிறது. சிறிது காலமாக தற்போது, நீதித்துறையின் மீது நிர்பந்தங்கள் உருவாக்கப்படுகின்றன. இத்தகைய சூழலில், இது தொடர்பாக இந்திய மக்களும், நாட்டின் இளைஞர்களும் கவனமாக இருந்திட வேண்டும்.

நண்பர்களே,

நாட்டை நீண்ட காலமாக ஆட்சி செய்த கட்சி, சட்டத்திற்கும், நீதித்துறைக்கும், அமைப்பிற்கும் மட்டுமன்றி, நாட்டிற்கும் மேலாக தன்னை எப்போதும் கருதிக் கொண்டிருக்கிறது. இக்கட்சியானது, அதன் விதிகள் மற்றும் உத்ததரவுகளின்படி நடக்காத ஒவ்வொரு நிறுவனத்தையும், அரசியலமைப்பு சட்டத்தினால் ஏற்படுத்த அமைப்புகளையும் கூட, சீரழித்துள்ளது.

சகோதர, சகோதரிகளே,

இத்தகைய எதேச்சதிகாரத்துடன், நமது நாட்டின் நீதியமைப்பினை வலுவிழக்கச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இக்கட்சியின் ஊழல் மற்றும் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய நிறுவனங்களில் நீதித்துறையும் ஒன்றாகும் என்பதே இதற்கு காரணமாகும். காங்கிரஸ் ஏன் நீதித்துறையை விரும்பவில்லை என்பதை பிரயாக்ராஜ் மற்றும் உத்திரபிரதேச மக்களான உங்களைத் தவிர வேறு யார் நன்கறிந்திருக்க முடியும்? பொதுமக்களின் கருத்தினை முடக்குவதற்கு இக்கட்சியின் பெருந்தலைவர்கள் முயன்ற நாட்களை உத்திரபிரதேச மக்கள் நினைவுகூற வேண்டும். அது ஜனநாயகத்திற்கு அவமதிப்பில்லையா?

நண்பர்களே,

பிரயாக்ராஜ் உயர்நீதிமன்றம், நீதியை உயர்த்திபிடித்தும், அரசியலமைப்பு சட்டத்தின்படியும், நாடாளுமன்றத்தைவிட்டு அவர்களை அகற்றிய அந்நாளினை தேசம் என்றும் மறக்காது; அவர்கள் ஜனநாயகத்தையே முடிவிற்கு கொண்டு வர முயற்சித்தார்கள். அவர்கள் தேசத்தில் நெருக்கடிநிலையை அறிவித்தார்கள். உண்மையாக, அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தையும், நாட்டையும் மாற்றியமைத்தார்கள். தேர்தல் மனுக்கள் குறித்து நீதித்துறை விசாரிக்கும் உரிமைகளை பறிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

நண்பர்களே,

இதுவே காங்கிரஸ் தலைவர்களின் பழக்கமாக இருந்தது. இந்த பழக்கத்தின்படி, நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தினால் ஏற்படுத்தப்பட்ட அமைப்புகள் அக்கட்சியின் முன்பு தங்கள் கைகளை கட்டிக் கொண்டு நின்றன. ஒத்துப்போகாத எவரையும் அழிக்க அவர்கள் முயற்சித்தார்கள். அவர்களின் பழமையான மற்றும் எதேசிக்கார மனப்பான்மை, நடுநிலையான நிறுவனங்களை அழிக்க ஊக்குவித்தது. நீதித்துறையின் கவுரவத்தை வேரறுக்கும் வகையில், இக்கட்சி வலுவை மட்டுமல்ல, வஞ்சகத்தையும் கையாண்டது. அவர்களது திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக, மோசடி, சுரண்டல் மற்றும் சூழ்ச்சியின் அனைத்து எல்லைகளையும் கடந்தனர். நீதித்துறையை ஆட்சியில் இருக்கும்போது, செயலற்றதாக வைத்திருப்பதையும், எதிர்கட்சியாக இருக்கும்போது, மிரட்ட முயற்சிப்பதையும் இக்கட்சி தன் கலாச்சாரமாக பின்பற்றி வருகிறது.

நண்பர்களே,

முக்கியமாக கேசவானந்த் பார்தி வழக்கினை நாட்டின் நினைவிற்கு கொண்டு வர விழைகிறேன். அழுத்தங்களுக்கு பணியாத நீதிபதிகள், தீர்ப்புகளை அளிக்க இருந்த நிலையில், ஆண்டுக்கணக்காக இருந்துவந்த நீதித்துறையின் பாரம்பரியம்/மரபுகளை அவர்கள் தலைகீழாக மாற்றினர்.

மூத்த நீதிபதியை தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கு பதிலாக பணிமூப்பில் மூன்றாவது இடத்தில் இருந்த நீதிபதியை அவர்கள் தேர்வு செய்தனர். இதுதான் அவர்களின் பணிக் கலாச்சாரமாகும். அவ்வாறுதான் அவர்கள் நீதித்துறையின் மீது நெருக்கடியை உருவாக்கினார்கள். நெருக்கடி நிலையை பிறப்பித்த முடிவினை அங்கீகரிக்காத நீதியரசர் கண்ணா அவர்களுக்கும், இது போன்றே செய்தனர். அவரது பணிமூப்பு புறக்கணிக்கப்பட்டது.

சகோதர, சகோதரிகளே, 

தங்களின் சுயநலத்தின் காரணமாக அவர்கள் நாட்டின் நல்வாழ்வு குறித்தோ, ஜனநாயகம் குறித்தோ கவலைப்படமாட்டார்கள். சட்டத்திற்கோ அல்லது பாரம்பரியத்திற்கோ அவர்கள் எந்த மதிப்பும் அளிக்க மாட்டார்கள். அவர்களில் ஒரு தலைவர் விடுத்த அறிக்கை செய்திகளில் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றது. அவர் கூறியுள்ளார் – எங்களது கொள்கைள், எங்கள் கருத்துக்கள் மற்றும் எங்களது உத்தரவுகளின்படி செயல்படும் ஒருவரையே தலைமை நீதிபதியாக பணியாற்ற நாங்கள் அனுமதிப்போம்.

நண்பர்களே,

நமது நாட்டின் நீதித் துறை நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை சிரமேற்கொண்டு செயல்படுகிறது.

நீதித்துறையை தன் விருப்பத்திற்கேற்றவாறு வளைப்பதற்காக பேராசை, வெறுப்பு, ஆற்றல் மற்றும் அனைத்தையும் எவ்வாறு ஒரு அரசியல் கட்சி பயன்படுத்துகிறது என்பதை நாடு சாட்சியாக பார்த்துக் கொண்டிருக்கிறது. நீதித்துறையை மிரட்டுவதற்காக, தடுத்தல், தவறாக வழிகாட்டுதல் போன்ற பல்வேறு வழிகளை இக்கட்சி மேற்கொண்டுள்ளது.

சமீபத்தில், நீதித்துறையின் உயரிய நீதிமன்றத்தின் மீது கண்டன தீர்மானம் எடுத்துவர அவர்கள் முயன்றதை நீங்கள் கண்டிருப்பீர்கள். நீதிபதிகளை பயமுறுத்துவது மற்றும் மிரட்டுவது அவர்களது பழைமையான மனநிலையில் ஒன்றாகும்.

செய்தியில் இருந்த ஒரு அறிவிப்பை நான் நினைவில் கொண்டுள்ளேன். அவர்களின் ஒரு தலைவர் மீதான வழக்கின்போது, நீதிபதியிடம், அவரது மனைவி கர்வா சவுத் கொண்டாட இருக்க வேண்டாமா எனக் கேட்டனர். அது மிரட்டுதல் இல்லையா?

சகோதர, சகோதரிகளே,

அனைத்து நிறுவனங்களையும் அழித்த பின்பாக தற்போது இவர்கள் ஜனநாயகத்திற்காக அழுகின்றனர். ஆனால் அவர்களது நடவடிக்கை மற்றும் சூழ்ச்சிகள், மீண்டும் மீண்டும் நாடு, ஜனநாயகம், நீதித்துறை மற்றும் மக்களை விடவும் தங்களை உயர்வாக அவர்கள் கருதுவதையே உறுதி செய்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன்பாக, அத்தகைய மற்றொரு உதாரணத்தையும் நாம் கண்டோம். ஆகையால், நீங்கள் அனைவரும் இத்தகைய நபர்கள் மற்றும் கட்சிகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

சகோதர, சகோதரிகளே,

தற்போதைய காங்கிரஸ் அதன் கடந்த காலத்தை போலவே கறைபடிந்துள்ளது. அதிகாரம் மற்றும் சுயநலன்களின் மூழ்கி போன இவர்கள், நாட்டுமக்களை பற்றியோ அல்லது நாட்டை பற்றியோ அல்லது அதன் பொருளாதார மற்றும் கலாச்சார வளர்ச்சி குறித்தோ சிறிதும் கவலைப்பட மாட்டார்கள். சிறப்பு தருணங்களில் மட்டுமே அவர்களுக்கு, நாட்டின் கலாச்சாரத்தை பற்றி நினைக்க நேரமிருக்கிறது. ஆனால் எங்களுக்கோ, நாடு, அதன் வளம், புகழ் மற்றும் ஆன்மிக வளர்ச்சி ஆகியவை சிந்தனையின் ஒரு பகுதியாக தொடர்ந்து நீடித்திருக்கிறது.

அந்த மாண்புகளுக்கேற்ப, தெய்வீகம் மற்றும் ஆன்மிகத்துடன் தொடர்புடைய உத்திரபிரதேசம் உள்ளிட்ட நாட்டில் உள்ள பல்வேறு இடங்கள் பிரசாத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன. அத்தகைய இடங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. பிரயாக்ராஜ், காசி, அயோத்யா-பிருந்தாவன், கேதார்நாத், காமாக்யா மற்றும் சபரிமலை, போன்ற மத முக்கியத்துவமிக்க மையங்கள் கண்கவர்மிக்கதாகவும் மற்றும் அற்புதமிக்கதாகவும் மாற்றப்பட்டு வருகின்றன.

சகோதர, சகோதரரிகளே,

இந்தியா எவ்வாறு மாறி வருகிறது என்பதையும் மற்றும் பழமையுடன் நவீனத்தை எவ்வாறு புதிய இந்தியா இணைத்துள்ளது என்பதையும் அர்த்-கும்பமேளாவில் நீங்கள் காண்பீர்கள்.

நவீனத்துடன் ஆன்மிகம், விசுவாசத்துடன் வளர்ச்சி மற்றும் நம்பிக்கையுடன் வசதி ஆகியவற்றை இணைத்து கும்பமேளாவை வெற்றிகரமான நிகழ்ச்சியாக்க வேண்டும் என பிரயாக் மக்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

அரசு அதன் பொறுப்பினை நிறைவேற்றி வருகிறது. ஆனால், இத்தகைய மாபெரும் நிகழ்ச்சி வெறும் அரசின் முயற்சிகளால் மட்டுமே வெற்றி பெறாது. நான், யோகி அவர்கள் மற்றும் எனது அனைத்து சகாக்களும் உங்களுடன் கைகோர்த்து பணியாற்றி இம்முறை அர்த்-கும்பமேளாவை வெற்றியடைய செய்வோம்.

இந்த எதிர்பார்புடன், மீண்டும் ஒரு முறை, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்கள் அனைவரையும் மற்றும் பிரயாக்ராஜையும் நான் பாராட்டுகிறேன்.

ஜெய் கங்கை தாய் – ஜெய்!

ஜெய் யமுனா தாய் – ஜெய்!

ஜெய் சரஸ்வதி மையா – ஜெய்!

ஜெய் தீர்த்தராஜ் – ஜெய் தீர்த்தராஜ்!

ஜெய் தீர்த்தராஜ் – ஜெய் தீர்த்தராஜ்!

இந்திய தாய்த் திருநாடு நீடுழி வாழ்க!

இந்திய தாய்த் திருநாடு நீடுழி வாழ்க!

இந்திய தாய்த் திருநாடு நீடுழி வாழ்க!

மிக்க நன்றி!

***


(Release ID: 1557553) Visitor Counter : 262