புவி அறிவியல் அமைச்சகம்
புவி அறிவியல் துறையின் இந்த ஆண்டு சாதனைகள்
Posted On:
21 DEC 2018 1:19PM by PIB Chennai
வானிலை, பருவநிலை, பெருங்கடல் மற்றும் கடலோர மாநிலங்கள், நீரியல், நிலநடுக்கவியல் மற்றும் இயற்கை அபாயங்கள் குறித்த சேவைகளையும், கடல்வாழ் உயிரின மற்றும் பிற வளங்களை பயன்படுத்துவது தொடர்பான பணிகளை புவி அறிவியல் துறை மேற்கொண்டு வருகிறது. இந்தத் துறை கடந்த நான்கு ஆண்டுகளிலும், குறிப்பாக 2018 ஆம் ஆண்டிலும், சமுதாயத்திற்கு பயனுள்ள வகையில், பல்வேறு சேவைகளை வழங்கி சாதனை படைத்துள்ளது. அவற்றில் சில முக்கியமான சாதனைகள் வருமாறு:-
உயர் செயல் திறன் கணிப்பு மையம்
புனேயில் உள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு மையம் மற்றும் நொய்டாவில் உள்ள நடுத்தர ரக வானிலை முன்னறிவிப்புக்கான தேசிய மையம் ஆகிய இரண்டு இடங்களில் உயர் செயல்திறன் கணிப்பு மையங்களை புவி அறிவியல் துறை அமைத்துள்ளது. முறையே பிரத்யூஷ் மற்றும் மிகிர் என பெயரிடப்பட்டுள்ள இந்த மையங்களை மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஷர்ஷ்வர்தன் 2018 ஜனவரி 8 மற்றும் 30 ஆம் தேதிகளில் நாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார். இந்த மையங்கள் செயல்படத் தொடங்கியதன் மூலம் வானிலை மற்றும் பருவநிலை கணிப்பு நடவடிக்கைகளில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
உலகில் உயர் செயல்திறன் கணிப்பு மையங்கள் கொண்ட முதல் 500 நாடுகளின் பட்டியலில் 368-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது முதல் 30 இடங்களுக்குள் முன்னேறியுள்ளது. ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைத் தொடர்ந்து, வானிலை / பருவநிலை கணிப்புக்காக இந்த உயர் செயல்திறன் கணிப்பு மையத்தைக் கொண்ட நான்காவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
மேம்பட்ட வானிலை மற்றும் புயல் எச்சரிக்கை
உயர் திறன் கொண்ட அதிநவீன சர்வதேச குழும கணிப்பு முறைகள் 2018 ஜூன் 1 அன்று, மத்திய புவி அறிவியல் துறையால் தொடங்கிவைக்கப்பட்டது. உலகில் உள்ள வானிலை முன்னறிவிப்பு மையங்களில் அதிக திறன் கொண்ட குழும கணிப்பு முறை இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் வானிலை கணிப்பு சேவையில் இந்தியாவின் தரம் மேம்பட்டுள்ளது. குறிப்பாக கனமழை மற்றும் வெப்பமண்டல புயல்கள் பற்றிய முன்னறிவிப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
வேளாண் பணிகளுக்கான வானிலை சேவை
மத்திய புவி அறிவியல் துறை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து, விவசாயிகளின் நலனுக்காக மாவட்ட அளவிலான வேளாண் வானிலை ஆலோசனை சேவைகளை வழங்கி வருகிறது. விவசாயிகள் இந்த சேவைகளைப் பயன்படுத்தி, விதை நடுதல், பாசனவசதி, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடு, அறுவடை மற்றும் பேரிடர் காலங்களில் பயிர்களை காப்பது தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் நான்கு கோடி விவசாயிகளுக்கு அவரவர் மாநில மொழிகளிலேயே பயிர் மற்றும் பயிர் பாதுகாப்பு தொடர்பான வானிலை தகவல்கள் வழங்கப்படுகிறது. 50 மாவட்டங்களில் உள்ள 200 வட்டங்களில், வட்டார அளவிலான வேளாண் வானிலை ஆலோசனை சேவைகளும், சோதனை அடிப்படையில் தொடங்கியுள்ளது.
மின்சாரத் துறைக்கான சேவைகள்
இந்திய வானிலை ஆய்வு துறையும், மத்திய அரசின் மின்சார சேவைகள் செயல்பாட்டுக் கழகமும் இணைந்து மின்சாரத் துறைக்கான வானிலை தகவல்களை அறிந்து கொள்வதற்கென பிரத்யேக வலைப்பக்கம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த வலைப்பக்கம் மூலம் பருவநிலை மாற்றத்திற்கேற்ற மின்சாரத் தேவை, வெப்பநிலை முன்னறிவிப்பு உள்ளிட்ட வானிலை முன்னறிவிப்புகள், சூறாவளி மற்றும் தகவல்களை அறிந்துகொணடு அதற்கேற்ப மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானப் பணிகளை மேற்கொள்ள முடிகிறது.
மீன்வளம் மிகுந்த பகுதிகளை கண்டறிதல்
இந்திய தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம், கடலில் மீன்கள் பெருமளவில் கிடைக்கும் பகுதி மற்றும் அது தொடர்பான சேவைகளை வழங்கி வருகிறது.
தீவுகளுக்கான பெருங்கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
இந்திய கடலோரப் பகுதிகளில் உள்ள முகத்துவாரங்கள், உப்புநீர் ஏரிகள், அழையாத்திக் காடுகள், ஈரத்தரை, பாறை கரையோரங்கள், பவளப் பாறைகள் போன்ற பல்வேறு சூழல் அமைப்புகளின் முக்கியத்துவம் கருதி சென்னையில் உள்ள ஆய்வு மையம் 2018 ஏப்ரல் முதல், கடலோர ஆராய்ச்சிக்கான உயர் சிறப்பு மையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை வெள்ளத் தடுப்புப் பணி
பெருநகர சென்னை மாநகராட்சியில் கடலோர வெள்ள எச்சரிக்கை அமைப்புக்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு மத்திய புவி அறிவியல் துறையின் கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம், தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டுள்ளது. இந்த நடைமுறை விரிவுபடுத்தப்பட்ட சென்னைப் பெருநகரப் பகுதிகளிக்கும் படிப்படியாக நீட்டிக்கப்பட உள்ளது.
சென்னை ஐஐடி, அண்ணாப் பல்லைக்கழகம், இந்திய வானிலை ஆய்வுத் துறை நடுத்தர ரக வானிலை முன்னறிவிப்புக்கான தேசிய மையம் ஆகியவற்றுடன் மும்பை ஐஐடியும் இணைந்து சென்னை வெள்ள எச்சரிக்கை அமைப்பை உருவாக்கியுள்ளன.
******
வி.கீ/எம்.எம்/உமா
(Release ID: 1557097)
Visitor Counter : 704