பிரதமர் அலுவலகம்

ஜம்மு-காஷ்மீரில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் தலைவர்கள் பிரதமரை சந்தித்தனர்

Posted On: 19 DEC 2018 5:49PM by PIB Chennai

ஜம்மு-காஷ்மீரில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 48 ஊராட்சித் தலைவர்கள் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று (19.12.2018) புதுதில்லியில் சந்தித்தனர்.

அகில ஜம்மு-காஷ்மீர் பஞ்சாயத்து மாநாட்டின் தலைவர் திரு.ஷஃபீக் மீர் இந்த தூதுக் குழுவிற்குத் தலைமைத் தாங்கினார்.

ஜம்மு-காஷ்மீரில் அமைதியாகவும், வெற்றிகரமாகவும் பஞ்சாயத்துத் தேர்தல்களை நடத்தியதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்ததற்காக பிரதமருக்கு இந்தக் குழுவினர் பாராட்டுத் தெரிவித்தனர்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு பிரதமர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மக்களின் நலனுக்கும், மேம்பாட்டுக்கும் பாடுபடுமாறு அவர்களைப் பிரதமர் கேட்டுக் கொண்டார். மக்களுக்கு அதிகாரமளிக்க தமது அரசு உறுதிபூண்டிருப்பதாகவும் பொதுமக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் மாநில நலனுக்காகவும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் தமது அரசு தோளுடன் தோள் சேர்ந்து நிற்கும் என்றும் அந்தக் குழுவினரிடம் அவர் உறுதி அளித்தார். மக்கள் அவர்கள் மீது அளப்பரிய நம்பிக்கை வைத்திருப்பதால் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க  வேண்டுமென்று தூதுக்குழுவின் உறுப்பினர்களை அவர் வலியுறுத்தினார்.

கடுமையான நிலைமைகளை எதிர்கொள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வெளிப்படுத்திய துணிவுக்காகவும், அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல்களையும் மீறி ஜனநாயக நடைமுறையில் வெற்றிகரமாகப் பங்கேற்றதற்காகவும் பிரதமர் அவர்களைப் பாராட்டினார். மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும் குறைகளைத் தீர்ப்பதற்கும் பொறுப்பான பஞ்சாயத்துராஜ் அமைப்பை வெற்றிகரமாக்க மத்திய அரசு முழு ஆதரவையும் அளிக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார். உள்ளூர் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து வளர்ச்சியை ஏற்படுத்தவும், வன்முறைப் பாதையிலிருந்து ஜம்மு-காஷ்மீரை விலக்கி வைக்கவும் அடித்தள அமைப்புகளுக்கு அதிகாரமளித்தல் மிக முக்கிய நடவடிக்கையாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தல்களில் பெண்களின் பங்கேற்பையும் அவர் பாராட்டினார்.

பின்னணி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 1989-ல் நிறைவேற்றப்பட்ட பஞ்சாயத்துராஜ் சட்டத்தின்படி 13 ஆண்டு இடைவெளிக்கு பின் 1100 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளுக்கும் 7 ஆண்டுகளுக்கு பின் 35 ஆயிரம் பஞ்சாயத்துக்களுக்கும் நவம்பர், டிசம்பர் 2018-ல் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 58 லட்சம் வாக்காளர்களில் 74 சதவீதம் பேர் பஞ்சாயத்துத் தேர்தலில் வாக்களித்தனர்.

இந்த நடைமுறையை முன்னெடுத்துச் செல்ல 40,000 அடித்தள நிர்வாக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்படவிருக்கிறது. பஞ்சாயத்துத் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ரூ.2500-ம், உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1000-மும் மதிப்பூதியமாக வழங்கப்படும்.



(Release ID: 1556737) Visitor Counter : 142