பிரதமர் அலுவலகம்

ஜம்முவில் ஷெர்-இ-காஷ்மீர் வேளாண்மை அறிவியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை, 2018 மே 19

Posted On: 19 MAY 2018 10:00PM by PIB Chennai

என் இளைஞர் சகாக்களே, இங்கு வந்திருக்கும் மதிப்புக்குரியவர்களே.

நண்பர்களே,

ஜம்மு காஷ்மீரில் வெவ்வேறு பகுதிகளை பார்க்கும் வாய்ப்பு இன்று காலையில் எனக்குக் கிடைத்தது. இங்கு நான் வருவதற்குத் தாமதம் ஆகிவிட்டது. ஏறத்தாழ ஒரு மணி நேரம் நாங்கள் தாமதமாக வந்து சேர்ந்தோம். முதலில், இங்கு தாமதமாக வந்து சேர்ந்தமைக்காக உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இன்றைக்கு லேஹ் முதல் ஸ்ரீநகர் வரையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் அர்ப்பணிக்கப் பட்டுள்ளன. ஜம்முவின் வயல்கள் மற்றும் காஷ்மீரின் பழத்தோட்டங்களின் தன்மை பற்றி நான் எப்போதும் அறிந்திருக்கிறேன். லேஹ்-லடாக்கின் ஆன்மிக மற்றும் இயற்கை சக்தியை உணர்ந்திருக்கிறேன். நான் எப்போது இங்கு வந்தாலும், என்னுடைய நம்பிக்கை மேலும் வலுப்பெறுகிறது. நாட்டின் வளர்ச்சியைப் பொருத்த வரையில், முன்னெடுத்துச் செல்லும் சக்தி கொண்ட ஒரு பிராந்தியமாக இது இருக்கிறது. நாம் சரியான திசையில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.கடினமாக உழைக்கும் மக்களின் அர்த்தமுள்ள முயற்சிகள் காரணமாகவும், உங்களைப் போன்ற திறமையான இளைஞர்களாலும் நாம் வெற்றியை அடைந்து கொண்டிருக்கிறோம்.

நண்பர்களே, இந்தப் பல்கலைக்கழகம் சுமார் 20 ஆண்டுகள் பழமையானது. அப்போது முதல் இங்கிருந்து நிறைய மாணவர்கள் தேர்ச்சி பெற்று சென்றிருக்கிறார்கள். ஏதாவது ஓர் இடத்தில் சமூக வாழ்வுக்கு அவர்கள் தங்கள் பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இன்று நடைபெறுவது பல்கலைக்கழகத்தின் ஆறாவது பட்டமளிப்பு விழா. இந்த நிகழ்ச்சியில் உங்களுடன் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. என்னை அழைத்தமைக்காக பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஜம்முவின் பள்ளிகளைச் சேர்ந்த சில மாணவர்களும் இங்கிருப்பதால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைக்கு 400க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பட்டங்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டின் இந்த புகழ்பெற்ற கல்வி நிலையத்தில் கடினமாக உழைத்ததன் பலனாக இது கிடைத்திருக்கிறது. உங்கள் அனைவருக்கும், குறிப்பாக இன்று வெற்றிகரமாக பட்டம் பெற்றுள்ள மாணவிகளுக்கு  எனது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இன்றைக்கு, விளையாட்டுகளைப் பாருங்கள், கல்வியைப் பாருங்கள், எல்லா துறைகளிலும் மாணவிகள் அற்புதங்கள் செய்கிறார்கள். என் கண் எதிரே நான் காண்கிறேன், உங்கள் கண்களில் ஒளி தெரிகிறது, உங்கள் கண்களில் ஒரு நம்பிக்கை தெரிகிறது. கனவுகள் நனவாகும் போது மற்றும் எதிர்காலத்தின் சவால்களை வெற்றி கொள்ளும் போது இந்த ஒளி இருக்கும்.

நண்பர்களே,

உங்கள் கைகளில் இருப்பது வெறும் பட்டமோ அல்லது சான்றிதழோ அல்ல. ஆனால் நாட்டின் விவசாயிகளுடைய நம்பிக்கைகளின் சான்றிதழ் இது. உங்கள் கைகளில் பிடித்திருக்கும் சான்றிதழ்கள், இந்த நாட்டின் விவசாயிகளுடைய நம்பிக்கைகள் மற்றும் ஆசைகளால் நிறைந்திருக்கின்றன. நமது நாட்டின் விவசாயிகளாக உள்ள, நமக்கு அன்னம் இடுபவர்களாக இருக்கும் பல லட்சம் பேரின் நம்பிக்கைகள், உங்கள் மீதான எதிர்பார்ப்புகள் அவை.

காலத்துக்கு ஏற்ப தொழில்நுட்பம் மாறிக் கொண்டிருக்கிறது. பல விஷயங்களின் அடிப்படையில் தொழில்நுட்பங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. வேகமான இந்த மாற்றத்தை எதிர்கொள்வது இந்த நாட்டு இளைஞர்கள் தான். இதனால் தான், இன்றைக்கு உங்கள் மத்தியில் நான் இருக்கிறேன். உங்களுடன் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்போது, அது மிகவும் முக்கியமானது என்று கருதுகிறேன்.

நண்பர்களே,

வேலைகளின் இயல்பை தொழில்நுட்பம் மாற்றுகிறது. வேலை வாய்ப்பில் புதிய பரிமாணங்கள் உருவாகின்றன. அதேபோல வேளாண்மைத் துறையில் புதிய கலாசாரத்தை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. நமது பாரம்பரிய வேளாண்மை முறைகளை அதிகளவில் தொழில்நுட்பம் சார்ந்ததாக மாற்றினால், விவசாயிகளுக்கு அதிக அளவில் பயன்கள் கிடைக்கும். இந்த நோக்கத்தை பின்பற்றுவதன் மூலம், வேளாண்மைத் துறையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

      நாட்டில் இதுவரையில் 12 கோடிக்கும் அதிகமான மண்வள அட்டைகள் விநியோகம் செய்யப் பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ளவர்களில் 11 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் இந்த அட்டைகளைப் பெற்றுள்ளனர். தங்களுடைய நிலங்களுக்கு எந்த வகையிலான உரங்கள் தேவை, வேறு என்ன தேவை என்பதை இந்த அட்டைகள் மூலம் விவசாயிகள் அறிந்து கொள்கிறார்கள்.

      100 சதவீதம் வேம்பு பூச்சு கொண்ட யூரியாவாலும் விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்கள். இது உற்பத்தியை அதிகரிக்கச் செய்திருப்பதுடன், யூரியா பயன்பாட்டு அளவையும் குறைத்திருக்கிறது.

      பாசனத்துக்கு நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொண்டு மைக்ரோ மற்றும் தெளிப்பு பாசன முறைகளுக்கு ஊக்கம் தரப்படுகிறது. ஒவ்வொரு சொட்டு நீரும் நல்ல முறையில் பயன்படுத்தப்படுவதை இது உறுதி செய்கிறது. ஒவ்வொரு சொட்டு நீருக்கும் அதிக பயிர் விளைச்சல் என்பது நம்முடைய லட்சியமாக இருக்க வேண்டும்.

 

 

கடந்த நான்கு ஆண்டுகளில் 24 லட்சம் ஹெக்டருக்கும் அதிகமான நிலங்கள் மைக்ரோ மற்றும் தெளிப்பு நீர் பாசனத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இரண்டு தினங்களுக்கு முன்பு மைக்ரோ பாசனத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ரூ.5,000 கோடிக்கும் அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளது. இந்த அனைத்துக் கொள்கைகளும், இந்த அனைத்து முடிவுகளும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற நமது இலக்கை பலப்படுத்துகின்றன. இந்த முயற்சிகள் மூலமாக உருவாக்கப்படும் நடைமுறைகளில் நீங்கள் முக்கியமான அங்கமாக இருக்கிறீர்கள்.

      இங்கு கல்வியை முடித்த பிறகு, அறிவியல் ரீதியிலான அணுகுமுறை, புதுமையான தொழில்நுட்ப சிந்தனைகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகள் மூலமாக விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவதில் நீங்கள் முக்கிய பங்காற்றுவீர்கள் என்பது நாட்டின் எதிர்பார்ப்பாக உள்ளது. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, விவசாயம், கால்நடை பராமரிப்பு மற்றும் இதுதொடர்பான பிற தொழில்களை சிறப்பானதாக ஆக்க வேண்டிது நமது இளைய தலைமுறையினரின் பொறுப்பாக உள்ளது.

      நீங்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் பற்றி கேள்விப்பட்ட போது என்னுடைய எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்தப் பிராந்தியத்தில் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதற்கு நீங்களும், உங்கள் பல்கலைக்கழகமும் உருவாக்கியுள்ள மாடல் பற்றி எனக்குத் தெரிவித்தார்கள். அதற்கு ஒருங்கிணைந்த வேளாண்மை நடைமுறை மாடல் அல்லது IFS மாடல் என்று நீங்கள் பெயரிட்டிருக்கிறீர்கள். இந்த மாடல் திட்டத்தில் தானியங்கள், பழங்கள், காய்கறிகள், மலர்கள், கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் கோழிப் பண்ணை தொழில்கள் உள்ளன. இதுதவிர மக்கும் உரம், காளான், பயோ கேஸ் ஆகியவையும் இதில் உள்ளன. விவசாய நிலங்களின் எல்லையில் மரங்கள் நடும் திட்டமும் இதில் இருக்கிறது. மாத வருமானத்தைப் பெருக்குவதாக மட்டுமின்றி, ஆண்டுதோறும் இரட்டிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகவும் இது இருக்கும்.

      ஆண்டு முழுக்க விவசாயிகளுக்கு வருமானம் கிடைப்பதை உறுதி செய்யும் இந்தத் திட்டம் முக்கியமானது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத எரிசக்தி இருக்கிறது, கழிவுகளில் இருந்து விடுதலை, கிராமங்களில் தூய்மை உறுதி செய்யப்பட்டிருக்கிறது, பாரம்பரிய விவசாய முறைகளுடன் ஒப்பிடும்போது, உங்களுடைய மாதிரி திட்டம் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாவது உறுதி செய்யப் படுகிறது. இந்தப் பகுதியின் சீதோஷ்ண நிலையைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தை உருவாக்கி இருப்பதற்கு நான் பாராட்டு தெரிவிக்க விரும்புகிறேன். ஜம்மு மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் இந்தத் திட்டம் விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

 

நண்பர்களே,

      விவசாயிகள் ஒரு பயிரை மட்டும் சார்ந்து இருப்பதை அரசு விரும்பவில்லை. கூடுதல் வருமானம் தரும் அனைத்து அம்சங்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதை நாங்கள் வற்புறுத்தி வருகிறோம். விவசாயத்தில் நல்ல எதிர்காலம் கொண்ட புதிய துறைகளை உருவாக்குவது விவசாயிகளின் வளர்ச்சியில் ஒருங்கிணைந்த அம்சமாக இருக்கப் போகிறது, அது அதற்கு உதவி செய்யும்.

      பசுமை மற்றும் வெண்மைப் புரட்சிகளுடன் சேர்த்து, இயற்கை வேளாண்மை புரட்சி, தண்ணீர் புரட்சி, நீலப் புரட்சி, இனிப்புப் புரட்சி ஆகியவற்றுக்கும் அதிக முக்கியத்துவம் தருகிறோம். இவை விவசாயிகளுக்கு அதே அளவில் வருவாயை அதிகரிக்கும். நாங்கள் சமர்ப்பித்த பட்ஜெட்டில் இந்த சிந்தனை தான் இருக்கிறது. முன்பு பால்வளத் துறையை ஊக்குவிப்பதற்கு ஓர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் இப்போது மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறைகளுக்கு ரூ.10,000 கோடி மதிப்பில் இரண்டு புதிய நிதியங்களை உருவாக்கியிருக்கிறோம். அதாவது, விவசாயிகள் இப்போது விவசாயத்துக்கும், கால்நடை பராமரிப்புக்கும் அரசின் ஆதரவை எளிதாகப் பெற முடியும் என்பது அர்த்தம். முன்பு விவசாயத்துக்கு மட்டும் கிசான் கடன் அட்டைகள் மூலம் கடன் வசதி கிடைத்து வந்த நிலையில், இப்போது மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புக்கும் இதில் கடன் பெறலாம்.

      வேளாண்மைத் துறையை சீரமைப்பதற்கு, ஒரு பெரிய திட்டம் சமீபத்தில் அறிவிக்கப் பட்டுள்ளது. HaritKrantiKrishiUnnatiYojana என்ற திட்டத்தில் வேளாண்மையுடன் தொடர்புடைய 11 திட்டங்கள் சேர்க்கப் பட்டுள்ளன. இதற்கு ரூ.33,000 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த ரூ.33,000 கோடி என்பது சிறிய தொகை அல்ல.

நண்பர்களே,

      கழிவில் இருந்து பெரிய அளவுக்கு செல்வத்தை உருவாக்கும் விஷயங்களில் அரசு கவனம் செலுத்துகிறது. விவசாயக் கழிவுகளை வருவாயாக மாற்றும் விஷயங்கள் குறித்து நடைபெறும் பணிகளில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற இயக்கங்கள் இப்போது வேகம் பிடிக்கத் தொடங்கியுள்ளன.

      இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், GobarDhanYojana என்ற திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. கிராமங்களின் தூய்மையை மேம்படுத்துவது மட்டுமின்றி, கிராமங்களில் கிடைக்கும் உயிரி கழிவுகளை பயன்படுத்துவதன் மூலம், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்குவதற்கும் இந்தத் திட்டம் உதவும். துணை பொருட்கள் தயாரித்தால் தான் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்று கிடையாது. பயிர்களின் பிரதான விளைபொருட்களை, சிலநேரம் வெவ்வேறு மாதிரி பயன்படுத்தினாலும் விவசாயிகளின் வருமானம் பெருகும். கயிறு கழிவாக இருந்தாலும் அல்லது தேங்காய் ஓடுகளாக இருந்தாலும் அல்லது மூங்கில் கழிவாக இருந்தாலும், அல்லது அறுவடை செய்த பிறகு நிலத்தில் கிடக்கும் கழிவுகளாக இருந்தாலும், உங்கள் வருமானத்தை அதிகரிப்பதற்கு அவை உதவ முடியும்.

      இத்துடன் சேர்த்து, மூங்கில் தொடர்பான பழைய சட்டத்தைத் திருத்தியதன் மூலம், மூங்கில் வளர்ப்பதை நாங்கள் எளிதாக்கி இருக்கிறோம். ஆண்டுதோறும் நமது நாடு ரூ.15,000 கோடி மதிப்புக்கு மூங்கிலை இறக்குமதி செய்கிறது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். இதில் எந்த நியாயமும் கிடையாது.

 

நண்பர்களே,

      இங்கே நீங்கள் பயிர்களில் புதிதாக 12 ரகங்களை உருவாக்கி இருப்பதாக எனக்கு தெரிவிக்கப் பட்டுள்ளது. ரண்வீர் பாசுமதி, அநேகமாக நாடு முழுக்க இது மிகவும் பிரபலமாக இருக்கிறது. உங்களுடைய முயற்சி பாராட்டுக்குரியது.

      இருந்தபோதிலும், இப்போது வேளாண்மைத் துறை எதிர்கொண்டுள்ள சவால்கள், விதைகளின் தரம் என்பதோடு மட்டும் இல்லை. பருவநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகளும் இருக்கின்றன. நமது விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகளின் கடின உழைப்பு, நமது அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமாக கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவுக்கு உற்பத்தி அதிகரித்திருக்கிறது. கோதுமை அல்லது அரிசி அல்லது பருப்பு வகைகள் என எதுவாக இருந்தாலும், முந்தைய சாதனைகள் முறியடிக்கப் பட்டுள்ளன. உணவு எண்ணெய்  வித்துகளும், பருத்தியும் உற்பத்தியில் பெருமளவு அதிகரித்துள்ளன. ஆனால், கடந்த சில ஆண்டுகளின் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், உற்பத்தியில் நிச்சயமற்ற ஒரு நிலை இருப்பதை நீங்கள் கண்டறிய முடியும். மழை நீரை மட்டுமே விவசாயம் நம்பியிருப்பது தான் இதற்கு மிகப் பெரிய காரணம்.

      பருவநிலை மாற்றத்தின் விளைவாக, வெப்பநிலை ஒருபுறம் அதிகரிக்கும் நிலையில், சில பகுதிகளில் மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரிலும் இதன் பாதிப்பைக் காண முடிகிறது. நெல் சாகுபடியாக இருந்தாலும் அல்லது தோட்டக்கலைப் பயிர் சாகுபடியாக இருந்தாலும் அல்லது சுற்றுலாத் துறையாக இருந்தாலும், இவற்றுக்கெல்லாம் போதிய அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. ஜம்மு காஷ்மீரின் தண்ணீர் தேவையை பனி சிகரங்கள் பூர்த்தி செய்கின்றன. ஆனால் , வெப்ப நிலை உயர்வு காரணமாக, பனி சிகரங்கள் வேகமாக உருகி வருகின்றன. அதன் விளைவாக, சில பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

     

நண்பர்களே,

      நான் இங்கு வரும்போது உங்கள் பல்கலைக்கழகத்தைப் பற்றி படித்தபோது, உங்களுடைய FASAL திட்டம் பற்றி அறிந்து கொண்டேன். பயிர் சாகுபடி பருவம் தொடங்குவதற்கு முன்பு, ஆண்டு முழுக்க எந்த வகையிலான ஈரப்பதம் இருக்கப் போகிறது, சாகுபடி எப்படி இருக்கும் என்பதை மதிப்பீடு செய்வதற்கு நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். ஆனால், இப்போது அதையும் தாண்டி நீங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. புதிய சவால்களை சமாளிப்பதற்கு, புதிய தொழில்நுட்பங்கள்  தேவைப்படுகின்றன. பயிர்கள் மற்றும் தொழில்நுட்பம் என இரண்டு நிலைகளிலும் இந்த  திட்டமிடல் தேவைப்படுகிறது. குறைந்த தண்ணீரில் விளையும் பயிர்களை நாம் பரிசீலிக்க வேண்டும். வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு, மதிப்பு கூட்டுவது எப்படி என்பது உங்களுடைய தொடர்ச்சியான சிந்தனையாக இருக்க வேண்டும்.

      sea buck thorn பற்றிய உதாரணத்தை நான் கூறுகிறேன். அநேகமாக உங்களில் பலருக்கு இதுபற்றித் தெரிந்திருக்கும். லடாக் பகுதியில் காணப்படும் இந்தத் தாவரம், மோசமான வானிலையைத் தாங்கக் கூடியது. மைனஸ் 40 டிகிரி குளிர் முதல் 40 டிகிரி  சென்டிகிரேட் வரையிலான வெப்ப நிலையையும் தாங்கக் கூடியது. பருவநிலை எவ்வளவு வறட்சியாக இருந்தாலும் சரி, அது செழிப்பாக இருக்கும். 8 ஆம் நூற்றாண்டின் திபெத்திய இலக்கியங்களில், இதன் மருத்துவ குணங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. நாட்டின் பல நவீன கல்வி நிலையங்கள் மற்றும் உலக அளவில் உள்ள கல்வி நிலையங்கள், இதை மிகுந்த மதிப்பு மிக்கதாக கருதுகின்றன. ரத்த அழுத்தம் அல்லது காய்ச்சல் அல்லது கட்டி அல்லது கல் அல்லது அல்சர் அல்லது சளி மற்றும் இருமல் என எந்தப் பிரச்சினைக்கும் இதில் இருந்து தயாரிக்கும் மருந்து தீர்வாக அமைகிறது.

      இந்தப் பழங்கள் மட்டுமே உலகின் ஒட்டுமைத்த வைட்டமின் சி - தேவையைப் பூர்த்தி செய்யும் என்று ஓர் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல் மூலமாக, மொத்த சூழ்நிலையே மாறிவிட்டது. இப்போது மூலிகை டீ, ஜாம் மற்றும் பாதுகாப்பு எண்ணெய், கிரீம், சத்து பானங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. உயர்ந்த மலைச் சிகரங்களில் பணியில் உள்ள ராணுவத்தினருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது பல நோய்த் தடுப்பு பொருட்களை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

      இன்றைக்கு, இந்தத் தளத்தில் நான் இந்த உதாரணத்தைக் கூறுகிறேன். நாட்டில் எந்தப் பகுதியை உங்களுடைய பணிக்கான இடமாக நீங்கள் தேர்வு செய்தாலும், இதுபோன்ற பல பொருட்கள் அந்தப் பகுதியில் இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளால், அங்கு ஒரு மாடலை உங்களால் உருவாக்க முடியும். மாணவர் என்ற நிலையில் இருந்து, வேளாண் விஞ்ஞானி என உயர்வதாலும், மதிப்பு கூட்டுவதாலும், வேளாண்மைப் புரட்சியில் நீங்கள் தலைவராக உருவாவீர்கள்.

      வேளாண்மையில் இன்னொரு முக்கியமான தலைப்பு இருக்கிறது. அது செயற்கை புத்திசாலித்தனம். குறுகிய எதிர்காலத்தில் இது புரட்சிகரமான மாற்றங்களை உருவாக்கப் போகிறது. நாட்டின் சில பகுதிகளில், குறைந்த அளவில் இவற்றை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். பூச்சிக் கட்டுப்பாட்டில் மற்றும் மருந்துகள் தெளிப்பதில் ட்ரோன் எனப்படும் பறக்கும் கருவியை சில பகுதிகளில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

      இத்துடன் சேர்த்து, மண்வளம் பரிசோதனை மற்றும் அந்தச் சமுதாயத்தினரே விலை நிர்ணயித்தல் ஆகியவற்றில் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதுமட்டுமின்றி, வரக் கூடிய நாட்களில் பிளாக் செயின் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றப் போகிறது. இதன் மூலம், வழங்கல் தொடர்புகளை உடனுக்குடன் கண்காணிக்கப்படும். வேளாண்மைத் துறையின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை இது கொண்டு வரும். இதில் மிகவும் முக்கியமானது என்னவென்றால், இடைத்தரகர்களின் மோசடிகள் இதனால் தடுக்கப்படும். உற்பத்தியில் விளைபொருட்கள் வீணாவதை இது தடுக்கும்.

 

நண்பர்களே,

      தரம் குறைந்த விதைகள், உரங்கள் மற்றும் மருந்துகள் தான் விவசாயத்தில் ஏற்படும் அதிகப்படியான செலவுகளுக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது என்பதை நாம் எல்லோரும் மிக நன்றாக அறிவோம். பிளாக் செயின் தொழில்நுட்பம் மூலமாக இந்தப் பிரச்சினையை சமாளிக்க முடியும். இந்தத் தொழில்நுட்பத்தின் உதவியால், உற்பத்தியில் இருந்து விவசாயிகளை அடையும் வரையில் எந்த நிலையிலும் ஒரு பொருளை எளிதாக சோதித்திட முடியும்.

      விவசாயி பதப்படுத்தல் நிலையங்கள், விநியோகஸ்தர்கள், ஒழுங்குமுறை அதிகாரிகள், நுகர்வோர்கள் என அனைத்து தரப்பினரையும் கொண்டதாக முழுமையான நெட்வொர்க் உருவாக்கப்படும். இந்த அனைத்து தரப்பினருக்கு இடையிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஸ்மார்ட் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கலாம். இந்த முழு சங்கிலித் தொடரில் தொடர்புடைய யாரும் இதை கண்காணிக்க முடியும். எனவே இந்த நடைமுறையில் ஊழல் நடைபெறுவதற்கு சிறிதளவு தான் வாய்ப்பு உள்ளது.

      இத்துடன், விலை மாறுதல்களால் ஏற்படும் இழப்புகளில் இருந்து விவசாயிகளை இந்தத் தொழில்நுட்பம் காப்பாற்றும். இதில் தொடர்பில் உள்ள யாரும், தங்களுக்குள் உடனுக்குடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். பரஸ்பர புரிதல் அடிப்படையில், ஒவ்வொரு நிலையிலும் விலைகளை நிர்ணயிக்க முடியும்.

 

நண்பர்களே,

      e-NAM போன்ற திட்டங்களின் கீழ் நாட்டில் கிராம சந்தைகள் அனைத்தையும் அரசு தொடர்புபடுத்தி வருகிறது. இத்துடன், உலகச் சந்தையுடன் 22,000 கிராம மற்றும் மொத்த விற்பனை சந்தைகளை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வேளாண் உற்பத்தியாளர்கள் அமைப்புகளை (FPO-க்கள்) ஊக்குவிப்பதற்கு அரசு முக்கியத்துவம் தருகிறது. தங்களுடைய சிறிய சங்கங்களை இணைப்பதன் மூலம் கிராம சந்தைகள் மற்றும் பெரிய சந்தைகளை தாங்களாகவே சேர்ந்து கொள்ளலாம்.

      இப்போது, பிளாக் செயின் தொழில்நுட்பம் போன்றவையும் எங்களுடைய முயற்சிகளை அர்த்தம் உள்ளதாக ஆக்குகின்றன.

 

நண்பர்களே,

      எதிர்கால தொழில்நுட்பங்கள் உள்ளூர் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக மட்டுமின்றி, அவர்களால் பயன்படுத்த எளிதாக இருக்கும் வகையிலான மாடல்களை உருவாக்குவது பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.

      நாம் இந்த விஷயத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும் : வேளாண்மைத் துறையில் புதிய சிந்தனைகள், புதிய தொழில்களை எப்படி உருவாக்கலாம் என்று யோசிக்க வேண்டும். உள்ளூர் விவசாயிகளை தொழில்நுட்பத்துடன் தொடர்புபடுத்துவதற்கு நீங்கள் தொடர்ச்சியாக முயற்சிகள் எடுக்க வேண்டும். உள்ளூர் அளவில் விவசாயிகளை இயற்கை வேளாண்மையுடன் தொடர்புபடுத்துவதற்கு, உங்களுடைய படிப்பின் போது நீங்கள் நிறைய பணியாற்றியதாக எனக்குத் தெரிவித்தார்கள். இயற்கை வேளாண்மைக்குப் பொருத்தமான பயிர்களை உருவாக்க நீங்கள் ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கிறீர்கள். ஒவ்வொரு நிலையிலும் வெவ்வேறு முயற்சிகள் நடப்பது விவசாயிகளின் வாழ்வை எளிதாக்கும்.

நண்பர்களே,

      கடந்த நான்கு ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீர் விவசாயிகள் மற்றும் தோட்டக்கலை விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தந்திருக்கிறது. விவசாயம் மற்றும் தோட்டக்கலைத் துறை தொடர்பான மற்ற திட்டங்களுக்கு ரூ.500 கோடிக்கு அனுமதிக்கப்  பட்டுள்ளது. இதில் ரூ.150 கோடி ஏற்கெனவே விடுவிக்கப் பட்டுள்ளது. லேஹ் மற்றும் கார்கில் பகுதிகளில் குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப் படுகின்றன. இத்துடன், சூரியசக்தி உலர் வசதிகளை அமைப்பவர்களுக்கு ரூ.20 கோடி மானியம் அளிக்கப் பட்டுள்ளது.

      விதைகளில் இருந்து சந்தைகள் வரையில், அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சிகள், மாநிலத்தின் விவசாயிகளை மேலும் பலப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.

 

நண்பர்களே,

      2022 ஆம் ஆண்டில் நாடு சுதந்திரமடைந்த 75வது ஆண்டை கொண்டாட உள்ளது. மாணவர்களான உங்களில் பலரும் நல்ல வேளாண் விஞ்ஞானியாக உருவாகி இருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். 2022 ஆம் ஆண்டை மனதில் கொண்டு, உங்கள் பல்கலைக்கழகமும், பல்கலைக்கழக மாணவர்களும் ஒரு இலக்கை நீங்களே நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். உதாரணமாக, நாட்டின் உயர்நிலையில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இந்தப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவது மட்டுமின்றி, உலக அளவில் உயர்நிலையில் உள்ள 200 பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் உருவாக்குவது பற்றி விவாதிக்கலாம்.

      அதேபோல, ஒரு ஹெக்டருக்கு கிடைக்கும் விளைச்சலை அதிகரிப்பது அல்லது அதிகபட்ச அளவிலான விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பத்தை கொண்டுபோய் சேர்ப்பது என பல்கலைக்கழக மாணவர்கள் உறுதி எடுத்துக் கொள்ளலாம்.

 

நண்பர்களே,

      வேளாண்மையை தொழில்நுட்ப மயமாக்குவது மற்றும் தொழில்முனைவோர் போன்ற முனைப்பு கொண்டதாக ஆக்குவது பற்றி நாம் பேசும்போது, அதற்கான திறமையான ஆட்கள் கிடைப்பது பெரிய சவாலாக இருக்கும்.

      இதில் உங்களுடைய பல்கலைக்கழகத்தைப் போன்ற, நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களின் பொறுப்புகளும் அதிகமாக உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், என்னுடைய கருத்தின்படி,  ஐந்து T - கள் பயிற்சி, திறமை, தொழில்நுட்பம், உரிய காலத்தில் செயல்படுதல் மற்றும் பிரச்சினை இல்லாத அணுகுமுறை ஆகியவை மிகவும் முக்கியமானவையாக உள்ளன. நாட்டின் வேளாண்மை நடைமுறையில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு இந்த ஐந்து அம்சங்களும் மிகவும் முக்கியமானவை. மேலும், உங்களுடைய திட்டங்களை முடிவு செய்யும்போது, இந்த விஷயங்களையும் மனதில் கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.

 

நண்பர்களே,

      இன்றைக்கு, வகுப்பறைகள் என்ற மூடிய சூழ்நிலைகளில் இருந்து நீங்கள் வெளியே வருகிறீர்கள். உங்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுவர்களால் ஆன இந்த வகுப்பறைகளில் இருந்து நீங்கள் வெளியே வருகிறீர்கள். ஆனால், வெளியில் உங்களுக்கு மிகப் பெரிய, திறந்தவெளி வகுப்பறை காத்துக் கொண்டிருக்கிறது. இந்த இடத்தில் உங்களுடைய கற்றலில் ஒரு நிலை மட்டுமே முடிவுக்கு வந்திருக்கிறது. எதார்த்த வாழ்வின் முக்கியமான கல்வி இங்கிருந்து தான் தொடங்குகிறது. எனவே, உங்களுக்குள் இருக்கும் மாணவர் என்ற மனநிலையை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். உங்களுக்குள் இருக்கும் மாணவர் மரணித்திட ஒருபோதும் அனுமதித்துவிடாதீர்கள். அப்போது தான், உங்களுடைய புதுமையான சிந்தனைகள் மூலமாக நாட்டின் விவசாயிகளுக்கு நல்ல மாடல்களை உங்களால் உருவாக்க முடியும்.

      நீங்கள் ஓர் உறுதிமொழி எடுத்துக் கொண்டு, உங்களுடைய மற்றும் உங்கள் பெற்றோருடைய கனவுகளை நனவாக்க வேண்டும். தேசத்தை நிர்மாணிப்பதில் உங்களுடைய பங்களிப்பைச் செய்ய வேண்டும். எனது உரையை நான் நிறைவு செய்து எனது சகாக்களுக்கு நல்வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய பெற்றோருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பாராட்டுகள்.

மிக்க நன்றி.

 

***



(Release ID: 1556683) Visitor Counter : 701