மத்திய அமைச்சரவை

மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு அனந்த்குமார் மறைவுக்கு அமைச்சரவை இரங்கல்

Posted On: 13 NOV 2018 11:02AM by PIB Chennai

    பெங்களூருவில் 12.11.2018 அன்று பிற்பகல் மணி ஒன்று ஐம்பதுக்கு மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு அனந்த்குமாரின் சோகமான மறைவுக்கு மத்திய அமைச்சரவை ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. அனுபவம் மிக்க தலைவர் ஒருவரை தேசம்  இழந்துவிட்டதாக சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.  பிரதமர் திரு. நரேந்திரடி மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை, துயருற்றுள்ள குடும்பத்தினருக்கு மத்திய அரசு மற்றும் ஒட்டுமொத்த தேசத்தின் சார்பாக மனம் நெகிழ்ந்த இரங்கலை தெரிவித்தது.

     அமைச்சரின் மறைவுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திய அமைச்சரவை இரங்கல் தீர்மானத்தையும் நிறைவேற்றியது.

      பெங்களூருவில் 22.07.1959 அன்று பிறந்த திரு அனந்த்குமார், ஹுபாலியில் உள்ள  கர்நாடக பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளநிலை பட்டம் பெற்றார். ஜே எஸ் எஸ்  சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார்.

    மாணவப் பருவத்திலேயே பொதுவாழ்க்கையைத் தொடங்கிய திரு அனந்த்குமார், பிஜேபி உறுப்பினராகி, கட்சியின் கர்நாடக பிரிவில் அமைப்புச் செயலாளரானார். பின்னர், கர்நாடகாவின் பிஜேபி தலைவரானார்.  அவரது தலைமையில் கட்சி விரிவாக்கம் பெற்று அம்மாநிலத்தில் சொந்தமாக ஆட்சியமைக்கும்  வகையில் வளர்ந்தது. பின்னர் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரான அவர், அதைத் தொடர்ந்த ஆட்சிமன்றக் குழுவின் உறுப்பினர் செயலாளரானார்.

  1996-ம் ஆண்டு பெங்களூரு தெற்கு மக்களவைத்  தொகுதியிலிருந்து முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 1998-லும்  வெற்றி பெற்று வாஜ்பாய் அமைச்சரவையில் மிகவும் இளம்வயது அமைச்சர் ஆனார். இவர் விமானப் போக்குவரத்து அமைச்சராக பணியாற்றினார். பெங்களூரு தெற்கு மக்களவை தொகுதியில் தற்போதைய உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்ட அவர், தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்றார்.  

   மத்திய அமைச்சரவையில் சுற்றுலா; கலாச்சாரம், இளைஞர் விவகாரம், விளையாட்டுக்கள்; நகர்கப்புற வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு;  ஊரக வளர்ச்சி ஆகிய துறைகளின் பொறுப்பையும் அவர் வகித்திருந்தார்.

    பல்வேறு நிலைகளில் தேசத்திற்கு திரு அனந்த்குமார் செய்த சேவைகளைப் பாராட்டி, அமைச்சரவை பதிவு செய்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஒட்டுமொத்த தேசத்தின் சார்பாக இதயபூர்வமான இரங்கலை மத்திய அமைச்சரவை தெரிவித்தது.

வி.கீ./எஸ்.எம்.பி./கீதா



(Release ID: 1552578) Visitor Counter : 167