பிரதமர் அலுவலகம்

மஹாராஷ்ட்ராவில் உள்ள சீரடிக்கு பிரதமர் பயணம் : ஸ்ரீ சாய் பாபாவின் நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்று உரை

Posted On: 19 OCT 2018 1:50PM by PIB Chennai

மஹாராஷ்ட்ராவில் உள்ள சீரடியில் பிரதமர் திரு நரேந்திர மோடி  இன்று ( 19.10.18 ) பயணம் மேற்கொண்டார்.

ஸ்ரீ  சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளையின் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதைக் குறிக்கும்  நினைவுப் பலகையை பிரதமர் பொதுக் கூட்டம் ஒன்றின்போது திறந்துவைத்தார். ஸ்ரீ சாய்பாபாவின் சமாதியின் நூற்றாண்டைக் குறிக்கும் வெள்ளி நாணயம் ஒன்றையும் பிரதமர் வெளியிட்டார்.

மஹாராஷ்டிராவில் பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்ட பயனாளிகளுக்கு புதுமனை புகுவிழாவை குறிக்கும் வகையில் வீட்டு சாவிகளை பிரதமர் திரு. நரேந்திரமோடி வழங்கினார். மஹாராஷ்டிராவின் சத்தாரா, லத்தூர், நந்துர்பர், அமராவதி, தானே, சோலாப்பூர், நாக்பூர் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த திட்டப் பயனாளிகளுடன் காணொலி மூலம் பிரதமர் கலந்துரையாடினார். பயனாளிகள், பெரும்பாலும் பெண்கள் தங்களுக்கு புதிய நல்ல தரமான வீடுகள் கிடைத்தது குறித்தும் கடன்கள் எளிதாக கிடைத்தது குறித்தும் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் ஊழலற்ற நடைமுறைகளுக்கும் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நாட்டு மக்கள் அனைவருக்கும் தசரா வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். தசரா பண்டிகையின்போது மக்களுடன் இருப்பது நாட்டுக்கு மேலும் சிறந்த பணி ஆற்றும் வகையில் தமக்கு ஆற்றலையும் புதிய உற்சாகத்தையும் வழங்கியிருப்பதாக அவர் கூறினார்.

சமுதாயத்திற்கு ஸ்ரீ சாய்பாபா ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்ந்த பிரதமர், அவரது போதனைகள் வலுவான, ஒற்றுமையான சமுதாயத்தை, நிர்மாணிக்கவும் மனிதகுலத்திற்கு அன்புடன் சேவை புரியவும், உரிய மந்திரத்தை வழங்கியிருப்பதாக கூறினார். சீரடி பொதுமக்கள் சேவையின் சிகரமாகவே கருதப்படுகிறது என்றார் அவர். சாய்பாபா வகுத்தப் பாதையை ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை பின்பற்றி வருவது மகிழ்ச்சியளிப்பதாக பிரதமர் கூறினார். கல்வி மூலமும், ஆன்மீக போதனை மூலமான சிந்தனை மாற்றங்கள் மூலமும் சமுதாயத்திற்கு ஆற்றல் அளிப்பதில் இந்த அறக்கட்டளையின் பங்கை பாராட்டுவதாக அவர் கூறினார்.

தசரா பண்டிகையின்போது பிரதமர் கிராமப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2 லட்சம் பயனாளிகளுக்கு புதிய வீடுகளை வழங்கியது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த பிரதமர், இது ஏழ்மைக்கு எதிரான போரில் முக்கியமான படி என்று கூறினார். 2022 வாக்கில் அனைவருக்கும் வீட்டு வசதியை உறுதி செய்ய அரசு எடுத்து வரும் முயற்சிகளை கோடிட்டு காட்டிய பிரதமர், கடந்த நான்கு ஆண்டுகளில் அரசு 1.25 கோடி வீடுகளை கட்டியிருப்பதாக தெரிவித்தார். கட்டப்பட்ட ஒவ்வொரு வீடும் நல்ல தரம் உள்ளதாக இருப்பதையும் ஒவ்வொரு வீட்டுக்கும் கழிவறை, எரிவாயு இணைப்பு, மின்சார இணைப்பு ஆகியன வழங்கப்படுவதை  அரசு உறுதி செய்கிறது என்று கூறினார்.

கூட்டத்தினரிடையே பேசிய பிரதமர், மஹாராஷ்டிரா மாநிலத்தை திறந்தவெளி கழிப்பறை அற்றதாக மாற்றி அமைத்தமைக்கு மக்களுக்கு நன்றி தெரிவித்தார். தூய்மை இந்தியா இயக்கத்தில் மஹாராஷ்டிரா அரசு மேற்கொண்ட  நடவடிக்கைகளையும் பாராட்டினார். பிரதமர் மக்கள் ஆரோக்கிய திட்டம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இதன் கீழ் சுமார் ஒரு லட்சம் பேர் இதுவரை பயடைனந்து இருப்பதாகத் தெரிவித்தார். இந்த திட்டத்தின் கீழ் நவீன மருத்துவ கட்டுமான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மஹாராஷ்டிரா எதிர்கொண்டுள்ள வறட்சி நிலையை கையாள்வதற்கு மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளை பிரதமர் சுட்டிக்காட்டினார். இந்த வகையில் அவர்  விவசாய நீர்ப்பாசனத் திட்டம், பயிர்க்காப்பீட்டுத் திட்டம் போன்றவற்றை குறிப்பிட்டார். மஹாராஷ்டிரா அரசின் ல்யுக்த் ஷிவிர் அபியான் திட்டத்திற்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். மஹாராஷ்டிரா அரசு மேற்கொண்ட பாசனக் கால்வாய் தூர்வாரும் திட்டத்தில் மக்கள் பங்கேற்பை அவர் பாராட்டினார். 
பி.ஆர்.அம்பேத்கர், ஜோதிராவ் பூலே, சத்ரபதி சிவாஜி ஆகியோரின் போதனைகளை நினைவுகூர்ந்த பிரதமர், அவர்களது உயரிய கருத்துக்களையும், போதனைகளையும் பின்பற்றி மக்கள் வலுவான ஒற்றுமையான சமுதாயத்தை உருவாக்க உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அனைவருடன் இணைந்து அனைவருக்கும் மேம்பாடு என்பதையும் ஒரே பாரதம் வளர்ச்சியடைந்த பாரதம் என்பதையும் அடைய பாடுபடுமாறு மக்களை அவர் கேட்டுக்கொண்டார். 
முன்னதாக, பிரதமர் ஸ்ரீ சாய்பாபா சமாதி கோவில் வளாகத்துக்கு சென்று வழிபட்டார். ஸ்ரீ சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்ட நிறைவு நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார்.

 

                                                 *****

 


(Release ID: 1550249) Visitor Counter : 163