பிரதமர் அலுவலகம்

சூரிய சக்திக்கான சர்வதேசக் கூட்டமைப்பின் முதல் கூட்டத் தொடக்கத்தில் பிரதமரின் உரை

Posted On: 02 OCT 2018 8:39PM by PIB Chennai

ஐ.நா. மன்றத்தின் தலைமைச் செயலர் மேதகு அன்டோனியோ கட்டரஸ் அவர்களே, இந்தியப் பெருங்கடல் சங்கத்தில் (Indian Ocean Rim Association) இடம்பெற்றுள்ள நாடுகளின்   அமைச்சர்களே, சூரிய சக்திக்கான சர்வதேசக்  கூட்டமைப்பு (International Solar Alliance) நாடுகளின் அமைச்சர்களே, இங்கு கூடியிருக்கும் எனது அமைச்சரவை சகாக்களே, தொழில்நிறுவனங்களின் நண்பர்களே, மதிப்பிற்குரிய விருந்தினர்களே, குறிப்பாக இளம் மாணவ நண்பர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!

இன்று காலையில் மேதகு அன்டோனியோ கட்டரஸும் நானும் தூய்மை குறித்த ஒரு முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. நாட்டில், மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் விழாவின் தொடக்கமான  நிகழ்ச்சி அது. உலக அளவிலும் கூட இன்றிலிருந்துதான் தொடங்குகிறது. பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு இந்த நாளை விட  மிகவும் பொருத்தமான  தருணம் இருக்க முடியாது.

சூரிய சக்திக்கான சர்வதேசக் கூட்டமைப்பு என்பதைக் குறிக்கும் ஐஎஸ்ஏ (ISA) என்ற சொல் சபையைக் குறிப்பதை விடவும் மக்களிடம்  பரவலாக்கப்பட வேண்டும் என்பது என் விருப்பம். உலக அளவிலான புதுப்பிக்கத் தக்க எரிசக்திக்கான முதலீடு, அது குறித்த காட்சிவிளக்கம், மறு முதலீட்டுக் கூட்டம் அல்லது இந்தியப் பெருங்கடல் சங்கத்தின் எரிசக்திக்கான கூட்டம்  (Indian Ocean Rim Association Energy Meet) என எதுவாக இருந்தாலும் அதன் குறிக்கோள் ஒன்றுதான். பசுமையான எதிர்காலத்தை உருவாக்கும் வகையில், மாற்று எரிசக்திக்கானதுதான்.

நண்பர்களே,

கடந்த 150-200 ஆண்டுகளில் மனித இனம் அதன் எரிசக்தித் தேவைகளுக்குப் படிம எரிமங்களைச் (fossil fuels) சார்ந்தே இருந்தது. ஆனால், அவற்றை எல்லாம் இயற்கை நிராகரித்துவிட்டதற்கான ஆதாரங்களை நாம் கொண்டிருக்கிறோம்.  இன்றும் கூட அது நிராகரிக்கவே செய்கிறது.  நிலத்துக்கு மேலே கிடைக்கும் காற்று, சூரிய சக்தி, நீர் ஆகியவைதான் எதிர்காலத்துக்குச் சரியான, பாதுகாப்பான எரிசக்தி அளிக்கும் என்று இயற்கை நமக்குச் சொல்லிக் கொடுத்துவருகிறது.

இயற்கை நமக்கு அளித்துள்ள இந்தத் தகவலை வைத்து இன்று நாம் விவாதிக்கப் போகிறோம் என்பது குறித்து நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.

நண்பர்களே,

மூன்றாண்டுகளுக்கு முன் புதுப்பிக்கத் தக்க எரிசக்திக்கான மறுமுதலீட்டின் முதல் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றபோது, புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மூலம் மெகாவாட் அளவு மின் உற்பத்தியை கிகாவாட் அளவு மின் உற்பத்தியாக உயர்த்துவது என்ற இந்தியாவின் இலக்கை முன் வைத்தது இன்னமும் என் நினைவில் இருக்கிறது. அப்போது, சூரியசக்தியும் பசுமை எரிசக்தியும் எளிதாகவும் மலிவாகவும் கிடைத்தால் மட்டுமே பயன்படுத்தலாம் என்று நான் தெளிவுபடுத்தினேன். சூரிய சக்தி அதிக அளவில் கிடைக்கும் நாடுகளைக் கொண்ட பொது அமைப்பை உருவாக்கலாம் என்ற கருத்தையும் நான் முன்வைத்தேன். தற்போது இத்திட்டங்கள் குறுகிய காலத்தில் முன்னெடுத்துச் செல்லப்படுவதில் முன்னெப்போதும் இல்லாத வெற்றியைப் பெற்றுள்ளோம் என்பதை அறிந்து மகிழ்கிறேன்.    

நண்பர்களே,

சூரிய சக்திக்கான சர்வதேசக் கூட்டமைப்பு (ISA) இன்று உலக அளவில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. மூன்றே ஆண்டுகளில் இந்த அமைப்பு  அரசுகளுக்கு இடையே உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதாக மாறியிருக்கிறது. இந்தக் கூட்டமைப்பின் தலைமையகம் இந்தியாவில் அமைந்துள்ளதற்கு நாட்டின் 125 கோடி மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது ஐஎஸ்ஏ மீதான நமது நெருக்கத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

21ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட உலக மனித நல உயர் அமைப்புகள் குறித்துப் பேசப்படும்போதெல்லாம் சூரிய சக்திக்கான சர்வதேச கூட்டமைப்பு (ISA) முதலிடம் வகிக்கும். ‘பருவ நீதியை’ (Climate Justice) நிலை நாட்டுவதற்காக ஐஎஸ்ஏ (ISA) அமைப்பை உருவாக்கியுள்ளோம். எதிர்கால சந்ததிக்கு மானுடம் சார்ந்த வெகுமதியை நாம் எல்லோரும் ஒன்றிணைந்து அளித்துள்ளோம்.

நண்பர்களே,

உலகின் எரிசக்தித் தேவைகளை எதிர்கொள்ள இன்று பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (OPEC) செய்கிற அதே பங்களிப்பை சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு (ISA) செய்யும் என்று நான் நம்புகிறேன். இன்றைக்கு எண்ணெய்க் கிணறுகள் செய்யும் பணிகளை சூரியக் கதிர்கள் எதிர்காலத்தில்  செய்யும். ஐஎஸ்ஏ அமைப்பு மேற்கொள்ளும் முன்முயற்சிகளுக்கு ஐ.நா. மன்றம் தீவிர ஆதரவை அளித்து வருவதற்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரிஸில் ஐஎஸ்ஏ அமைப்பைத் தொடங்கியபோது அப்போது ஐ.நா. தலைமைச் செயலராக இருந்த பான் கி-மூன் பங்கேற்றார். இன்றைக்கு இந்த நிகழ்ச்சியில் ஐ.நா.மன்றத்தின் தற்போதைய தலைமைச் செயலர் அன்டோனியோ கட்டரஸ் பங்கேற்றுள்ளார். இந்த அமைப்புக்கு ஐ.நா மன்றம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை இது காட்டுகிறது.  இந்த அமைப்புக்கு ஆதரவு தந்த பிரான்ஸ் அதிபருக்கும், பிரான்ஸ் அரசுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இந்த ஐஎஸ்ஏ முதல் கூட்டத்தில் 40 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.  சூரிய ஒளிச் சக்தியின் பயன் வெறும் 100 அல்லது 150 நாடுகளுக்கு மட்டும் அல்லாமல், உலகின் அனைத்து நாடுகளுக்கும் என்ற நோக்கத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டியுள்ளது.

சூரிய ஒளிச் சக்தி மீதான அனைவரின் ஒத்துழைப்பு உணர்வுகளைக் கணக்கில் கொண்டு ஐ.நா. மன்றத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து நாடுகளையும் ஐ.எஸ்.ஏ. அமைப்பில் உறுப்பினர்கள் ஆவதற்கான திட்டத்தை இந்தியா முன் வைக்கப்போகிறது.

நண்பர்களே,

இந்த அமைப்பின் முக்கிய உறுப்பினரான இந்தியா, இந்தியப் பெருங்கடல் கூட்டமைப்புக்கு (Indian Ocean Rim Association)  முக்கியத்துவம் அளித்து வருகிறது. எரிசக்தியில் நமக்கும் பெரிய சவால்கள் உள்ளன. எரிசக்தி தேவை உள்ள நிலையில், புதுப்பிக்கத் தக்க எரிசக்தியின் தேவையை ஒருமித்து வலியுறுத்த வேண்டியுள்ளது.

இந்தப் பகுதியில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்ற சாகர்  திட்டம் குறித்த கருத்தை ஏற்கெனவே முன் வைத்துள்ளேன். இந்தக் கூட்டம் ஒத்துழைப்புக்குப் புதிய கதவுகளைத் திறந்துவிடும் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

இந்தியாவில் புதுப்பிக்கத் தக்க மின்சக்தியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வெளிப்படையாகத் தெரிகிறது. பாரிஸ் மாநாட்டில் ஏற்பட்ட பருவநிலை குறித்த உடன்பாட்டின்படி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதற்காக புதுப்பிக்கத் தக்க எரிசக்தியைப் பயன்படுத்துவதற்கான செயல் திட்டத்தைத் தொடங்கிவிட்டோம். 2030ம் ஆண்டுக்குள் 40 சதவீத மின்சாரத்தைப் படிம எரிமங்கள் அல்லாத  மாற்று எரிசக்தி மூலம் பெறுவது என்று முடிவு செய்துள்ளோம். இந்த இலக்கின்படி புதுப்பிக்கத் தக்க எரிசக்தியை இருமடங்காக உயர்த்தி 72 கிகாவாட் என கடந்த நான்கு ஆண்டுகளில் அதிகரித்துள்ளோம். இதில் சூரிய மின்சக்தியின் உற்பத்தி ஒன்பது மடங்கு அதிகரித்துள்ளது. இன்றைக்கு நீர் மொத்த மின்சாரத்தில் 20 சதவீதம் அளவுக்கு மின்திட்டம் அல்லாமல் புதுப்பிக்கத் தக்க மின்சக்தி மூலம் கிடைத்து வருகிறது. இது மட்டுமின்றி, விரைவில் மின்சார உற்பத்தித் திறன் 50 கிகாவாட் அதிகரிக்க உள்ளது. இவையெல்லாம் 2022ம் ஆண்டிற்குள் 175 கிகாவாட் மின்சாரத்தைப் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மூலம்  பெறுவது என்ற இலக்கை எட்டும் பாதையில் சரியாகப் பயணிப்பதைக் காட்டுகின்றன. அதை நிச்சயம் எட்டியே தீருவோம்.

நண்பர்களே,

‘வறுமையிலிருந்து வல்லமைக்கு’ (poverty to power) என்ற புதிய நம்பிக்கையுடன் இந்தியா இன்று வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்தப் புதிய நம்பிக்கைக்கு வலுவூட்டி வருகிறோம். அதன் மூல ஆதாரம் பல ஆயிரம் ஆண்டுகளாக நாம் வலிமையாகவும் ஆற்றலுடனும் இருக்க உதவுகிறது. அந்த வளம்தான் சூரியன். நம்மால், இந்திய மக்களால் பல ஆண்டுகளாக வணங்கப்பட்டு வரும் சூரியக் கடவுள்.

நண்பர்களே,

சூரியன் ஒளிக்கும் ஆற்றலுக்கும் கடவுளாக இருக்கிறது. எல்லாப் படைப்புகளுக்கும் சூரியன்தான் ஆற்றல் தருகிறது. எங்களின் சமூக வாழ்க்கையில் சூரியனின் முதல் கதிருக்கு என்று நாங்கள் நம்புகிறோம்.  நீர் தெளித்து “ஓம் சூரியாய நமஹ” என்று சொல்லி நாளைத் தொடங்குவது இயற்கையான  பாரம்பரியமாகும்.

வேதம் முதல் யோகம் வரையில் சூரியன் சிந்தனைக்கும், வழிபாட்டுக்கும், உள்ளே இருக்கும் சக்திக்கும் மூல ஆதாரமாக இருந்து வருகிறது. நமக்கு உள்ளே இருக்கும் இந்த ஆற்றலை நவீன அறிவியல் ஆற்றலின் மூலம் புறத்தில் உள்ள நமது எரிசக்தித் தேவைக்குப் பயன்படுத்தத் தீர்மானித்துள்ளோம். நண்பர்களே,

சூரிய ஒளிச் சக்தி உற்பத்தியில் இந்தியா வேகமாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் சூரிய ஒளி சக்தி மிகவும் மலிவாகக் கிடைக்கிறது. ஏழை மக்கள் பலருக்கும்  விரைவாக மின்சாரம் கிடைக்கச் செய்வது என்ற இலக்கினை சாத்தியமாக்கியுள்ளது.

 

அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் அளிப்பது என்ற இலக்கை அடைவதற்கு ‘சூரியத் தகட்டிலிருந்து மின்சாரம்’ (Panel to Power) மற்றும் ‘இந்தியாவில் உற்பத்தி’ (Make in India) ஆகியவை மிகவும் முக்கியமானவை. புதுப்பிக்கத் தக்க எரிசக்தித் துறைக்கு உகந்த இடமாக இந்தியா கடந்த நான்கு ஆண்டுகளில் உருவாகியுள்ளது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தக் காலக்  கட்டத்தில் இத்துறையில் மட்டும் சுமார் 4,200 கோடி அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.

நண்பர்களே,

 

சூரிய ஒளிச் சக்தி உற்பத்தியில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் வெளிநாட்டு முதலீடுகளுக்கு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள தொழில்முனைவோரும் முதலீடு செய்ய ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. சூரிய ஒளிச் சக்தி உற்பத்திக்கான தகடுகளை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கி வருகிறோம்.

புதுப்பிக்கத் தக்க எரிசக்தித் துறையில் முதலீடு செய்வதற்கு இதுதான் உகந்த தருணம் ஆகும். அடுத்த நான்கு ஆண்டுகளில் 7000 கோடி டாலர் முதல் 80 ஆயிரம் கோடி டாலர் வரை இத்துறையில் வணிக வாய்ப்பு இருக்கும் என நான் எதிர்பார்க்கிறேன்.

நண்பர்களே,

மின்சார உற்பத்தியுடன், மின்சார சேமிப்பும் மிகவும் முக்கியமானது. அதற்குரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது தொடர்பான பணி தேசிய எரிசக்தி சேமிப்பு இயக்கம் (national energy storage mission) என்ற திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் கீழ் மின்சாரத் தேவையை உருவாக்குதல், உள்நாட்டு உற்பத்தி, புதுமையாக்கம், மின்சாரச் சேமிப்புத் திறனை அதிகரித்தல் ஆகியவற்றுக்கு உதவும் வகையிலான கொள்கைகளை வகுக்க வேண்டும் என்பதில் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

கிராமங்களின் பண்ணைகளில் சூரிய ஒளித் தகடுகளை அமைப்பதற்கும் வேளாண் மின்சக்தி பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு பிரசாரத் (Kisan Urja Suraksha Evam Utthan Maha Abhiyan) திட்டத்துடன் மூலம் இணைப்பதற்குமான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

சூரிய சக்தி மூலம் இயக்கப்படும் சுமார் 28 லட்சம் பம்புகள் நாடு முழுவதும் அடுத்த நான்கு ஆண்டுகளில் அமைக்கப்படும். சுமார் 10 கிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

நண்பர்களே,

சூரிய சக்தி, காற்றாலைச் சக்தி மட்டுமின்றி, பி-3 என அழைக்கப்படும் உயிரி எரிவாயு (biomass), உயிரி எரிபொருள் (bio-fuel), உயிரி எரிசக்தி (bio-energy) ஆகிய மூன்று எரிசக்தி உற்பத்தியை விரைவாக மேற்கொள்ளவும் நாங்கள்  ஈடுபட்டுள்ளோம். இந்தியாவில் தூய எரிபொருள் சார்ந்த போக்குவரத்து முறையைச் செயல்படுத்துவதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். உயிரி வாயுவிலிருந்து உயிரி எரிபொருளை உற்பத்தி செய்வதன் மூலம் இந்தச் சவாலை ஒரு வாய்ப்பாக மாற்றி வருகிறோம்.

“கோபர்தான்” (GobarDhan) என்ற மிகப் பெரிய திட்டத்தை முன் வைத்துள்ளோம். கோபர்தான்  என்பது பசு சாணத்தின் மூலம் வருவாய் ஈட்டுதல் ஆகும். இது தொடர்பாக பல நகரங்களிலும் கிராமங்களிலும் கழிவுகளிலிருந்து மின்சாரம் தயாரிப்பதற்காகப் பல்வேறு நவீன  பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

நண்பர்களே,

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான பணி ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டது. ஆனால், மின்சார சேமிப்பும் மிகவும் முக்கியமானது ஆகும்.

இன்றைக்கு, உஜ்வாலா திட்டத்தின் கீழ், நாட்டின் மூலை முடுக்குகளிலும் அனைத்து வீடுகள், சாலைகள், தெருக்களிலும் எல்.இ.டி. பல்புகள் மூலம் ஒளி வீசுவதற்கான மிகப் பெரிய இயக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 31 கோடி எல்இடி பல்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பல்புகள் மூலம் ஆண்டுதோறும் 4000 கோடி கிலோவாட் மணிநேர மின்சாரம் மிச்சப்படுகிறது. இது எத்தகைய மகத்தான வேலை! 

அது மட்டுமல்ல, மக்களின் மின்சாரச் செலவில் ஆண்டுதோறும் ரூ. 16,000 கோடி மிச்சப்படுகிறது. அத்துடன் கரியமில வாயு உற்பத்தியையும் குறைத்துள்ளோம்.

இவையெல்லாம் ஒரு தொடக்கம்தான் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். எதிர்காலத்தில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. பருவநிலை நீதியுடன் (climate justice) தொடர்புள்ளதாகக் காண்பதற்கு ஒவ்வொரு வாய்ப்பையும் சாதகமாகப் பயன்படுத்த வேண்டும். அதில் வெற்றியும் பெற வேண்டும்.

அடுத்து வரும் மூன்று நாட்களில் இவை பற்றியெல்லாம் நீங்கள் முழுமையாக விவாதிப்பீர்கள் என்று நம்புகிறேன். அதில் உருவாகும் கருத்துகள் புதுப்பிக்கதக்க நமது எதிர்காலத்தை அழகுடையதாகவும் ஒளிமயமாகவும் ஆக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

இங்கு கூறப்படும் உங்களது ஒவ்வொரு யோசனையும் ஒவ்வொரு புதுமையான சிந்தனையும் எங்களுக்கு மிகவும் முக்கியமானவை என உறுதி கூறுகிறேன். அதனால்தான், மனித ஆற்றல் மேம்பாடு குறித்ததோ, தொழில்நுட்ப மேம்பாடு குறித்ததோ, புதிய நாடுகளில் நடத்தப்படும்  சாதாரண மனிதர்களின் சிறுசிறு பரிசோதனைகளோ எதுவாயினும்  சபைமுன் வெளிப்படையாக கொண்டு வருகிறோம். இந்த இயக்கத்தை நிறைவேற்றுவோம் என்று நம்புகிறேன். உலகமயமாக்கல் பொருளாதார நிலைகளில் விரிவாக விவாதிக்கப்பட்டது. தொழில்நுட்பம் இந்த உலகில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் நெருங்குவதற்குப் பெரும் துணை புரிந்துவிட்டது. நாமும் ஒரே உலகம் (One World), ஒரே சூரியன் (One Sun), ஒரே மின் தொகுப்பு (One Grid) என்ற புதிய கனவைத் தொடங்கிவிட்டோம்.

இந்த இயக்கத்தை நாம் வெற்றிபெறச் செய்துவிட்டால், சூரியன் உதிக்கும் நேரத்திலிருந்து சூரியன் மறையும் வரையில் சூரியனிடமிருந்து முழு நாளும் மின்சாரத்தைப் பெறும் நிலை வரும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.

இப்போது சூரிய வெளிச்சம் இருக்கும் நேரத்தை மட்டுமே கருத்தில் கொண்டு மின் உற்பத்தியைப் பற்றி சிந்திக்கிறோம். ஒரே உலகம், ஒரே சூரியன், ஒரே மின் தொகுப்பு சாத்தியமாகிவிட்டால், உலகின் எந்த இடத்திலாவது சூரியன் மூலம் மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும். காரணம், உலகின் ஏதாவது ஓரிடத்தில் சூரியன் ஒளி வீசிக் கொண்டுதான் இருக்கும். முழு உலகத்தைப் பொறுத்தவரையில் சூரியன் மறைவதில்லை. அப்படி இருக்க மின்சார உற்பத்தி எங்கே நிற்கப் போகிறது?

புதிய வழியில் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இந்த சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் (ISA) நிகழ்ச்சியில் புதிய நம்பிக்கையோடு, புதிய சிந்தனைகளோடு, புதிய சக்தியோடு, புதிய தீர்மானத்தோடு புதிய உலகை உருவாக்குவதில் முக்கியப் பங்கை ஆற்றுவோம் என்று உறுதியாக நம்புகிறேன்.

ஒளிமயமான உலகம் உருவாகப் பங்களிப்புச் செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முக்கியமான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பல நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ள உங்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி, வணக்கம்!

 

*****



(Release ID: 1548312) Visitor Counter : 1363