பிரதமர் அலுவலகம்

இந்தூரில் ஆஷாரா முபாரகா – இமாம் உசைன் உயிர்த் தியாக நினைவு நாள் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 14 SEP 2018 6:32PM by PIB Chennai

புனிதமிகு டாக்டர் சையத்னா முஃபதல் சைஃபுதீன் அவர்களே, மத்தியப் பிரதேசத்தின் பிரபலமான முதலமைச்சர் திரு. சிவராஜ் சிங் சவுகான் அவர்களே, இங்கே இன்று கூடியுள்ள தாவூதி போரா சமூகத்தின் குடும்பத்தினர்களே…

உங்களுக்கு இடையே இருக்கும் எனக்கு இது ஓர் உத்வேகம் தரும் தருணமும் புதிய அனுபவமும் தருவதாகும்.

இந்தப் புனிதமான ஆஷா முபாரக் நிகழ்ச்சியில் பங்கேற்பதில் எனக்கு வாய்ப்பை நல்கியதற்காக உங்கள் அனைவருக்கும் நான் நன்றிக் கடன்பட்டவன் ஆவேன்.

பல்வேறு நாடுகளிலிருந்தும் பல்வேறு மையங்களிலிருந்தும் இங்கே நமது சமுதாயத்தினர் தொழில்நுட்பத்தின் உதவியோடு இங்கே இணைந்திருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. தொழில்நுட்பத்தின் மூலம் தொலை தூரத்திலிருந்து வந்து நம்மோடு இணைந்துள்ள அனைவருக்கும் என் தலைதாழ்ந்த வணக்கம்.

நண்பர்களே,

இமாம் உசைனின் புனித செய்தியை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் பின்பற்றி வருகிறீர்கள். அத்துடன், அவரது புனிதச் செய்தியை நாட்டுக்கும் உலகுக்கும் பல நூற்றாண்டுகளாகப் பரப்பி வருகிறீர்கள்.

இமாம் உசைன் தனது வாழ்க்கையை அமைதிக்கும் நீதிக்கும் தியாகம் செய்தார். அநீதி, ஆணவத்திற்கு எதிராக அவர் குரல் எழுப்பினார். அவரது போதனைகள் முன்பு போல இன்றும் பொருத்தமானவை. இந்தப் பாரம்பரியத்தை உறுதிபடத் தொடர வேண்டியது மிக மிகத் தேவையாகும். திரு. சையத்னா சாஹிபும் போரா சமுதாயத்தின் ஒவ்வொருவரும் இந்த இயக்கத்துடன் இணைந்திருப்பது கண்டு குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.

 

நண்பர்களே,

நாம் “வசுதைவ குடும்பகம்” என்ற கோட்பாட்டின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளோம். உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்று திடமாக நம்புகிறோம். நாம் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் கைகோர்த்து இருப்பவர்கள். நம் சமூகத்தின், பாரம்பரியத்தின் இந்த பலம்தான் இதர நாடுகளிலிருந்து நமது தனித்தன்மையைக் காட்டுவதாகும்.

இந்தியாவின் இந்தபலத்துடன் போரா சமுதாயம் உலகம் முழுவதும் பரவியுள்ளது குறித்து நான் மகிழ்ச்சி கொள்கிறேன். உலகில் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் நான் எப்படி இருக்கிறேன் என்றுதான் கேட்கிறார்கள்.

நமது பண்டைய காலம் குறித்து நாம் பெருமிதம் கொள்கிறோம். தற்போதைய காலத்தின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். பிரகாசமான எதிர்காலத்தை அடைவதற்கு உறுதி பூணுங்கள். எங்கு நான் சென்றாலும் அமைதி, மேம்பாட்டுக்கான நம் சமுதாயத்தின் பங்களிப்பை மக்களிடம் எப்போதும் கூறுவேன்.

அமைதி, நல்லிணக்கம், சத்தியாக்கிரகம், தேசப் பற்று ஆகியவற்றில் போரா சமுதாயத்தினரின் பங்கு எப்போதும் குறிப்பிடத்தக்கது. நம் நாட்டுக்கும் தாய்நாட்டுக்கும் அன்பு, அர்ப்பணிப்பு செலுத்த வேண்டும் என்று திரு. சையத்னா சாஹிப் தனது சொற்பொழிவுகளில் போதித்து வந்தார். இப்போது பேசியபோதும் நாட்டுக்காகவும் சமுதாயத்துக்காகவும் சட்டத்துக்காகவும் ஒருவர் எப்படி வாழ வேண்டும் என்று போதித்துள்ளார்.

முன்பு கூட மகாத்மா காந்தியுடன் மதிப்பிற்குரிய சைதானா தாஹிர் சைஃபுதீன் சாஹிப் இணைந்து இத்தகைய விழுமியங்களுக்காக அரும்பாடுபட்டனர்.

 

ஒரு முறை இந்த இரு பெரிய மகான்களும் ரயிலில் ஒன்றாகப் பயணம் செய்தனர் என்று எங்கேயோ படித்திருக்கிறேன். அதன் பின் இருவரும் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். ஒவ்வொரு முக்கியமான நிகழ்விலும் இயக்கத்திலும் ஒருவருடன் ஒருவர் கலந்து பேசி விவாதித்து வந்துள்ளனர்.

தண்டி யாத்திரை நமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் பொன்னான அத்தியாயமாகும் என்பதை உணர்ந்துள்ளோம். அந்தத் தண்டி யாத்திரையின்போது, மதிப்புக்குரிய மகாத்மா காந்தி திரு. சையத்னா சாஹிப் இல்லமான சைஃபி வில்லாவில் தங்கியிருக்கிறார். மகாத்மா காந்தியின் நட்பையும் அவர் காட்டிய விழுமியங்களையும் போற்றிய திரு. சையத்னா சாஹிப் விடுதலை பெற்ற பிறகு சைஃபி வில்லாவை தேசத்துக்கு வழங்கிவிட்டார். அந்த சைஃபி வில்லா இப்போது இளைஞர்களைக் கவர்ந்துள்ளது.

நண்பர்களே,

   போரா சமூகத்தினருடனான எனது உறவு நீண்டகாலமாக உள்ளது. இது குறித்து திரு. சையத்னா சாஹிப் குறிப்பிட்டதை தொடர்ந்து நான் இந்த சமூகத்தினரின் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக ஆகிவிட்டதாக உணருகிறேன். இன்றைக்கும், எனது கதவு உங்களுக்காக எப்போதுமே திறந்திருக்கிறது. உங்களது ஆதரவும், உங்கள் குடும்பத்தின் ஆதரவும் எனக்கு கிடைத்திருப்பதை நான் பெரும் பேராக கருதுகிறேன்.

    எனது பிறந்த நாளுக்கு இன்னும் காலமிருக்கிறது, ஆனால் அதற்குள் இந்த புனிதமான கூட்டத்தில் உங்கள் வாழ்த்துகளை எனக்கு  தெரிவித்துள்ளீர்கள்.  நாட்டு மக்களின் நலத்திற்காக எனக்கு வலுவை அளிக்கும்படி கேட்டுக் கொண்டீர்கள். இது உண்மையில் மிகப்பெரிய வேண்டுதலாகும். எனவே உங்களுக்கு நான் பெரிதும் எப்போதும் கடமைப்பட்டவனாக இருப்பேன்.

  போரா வணிக சமூகத்தினர் எந்தவொரு கிராமத்திலும் இல்லாத நிலை உள்ளது என்று கூறலாம்.  நான் குஜராத் முதலமைச்சராக இருந்த போது எனது ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இந்த சமூகத்தினர் ஆதரவு தெரிவித்தனர். இந்த நெருக்கமான உறவுதான் என்னை தற்போது உங்கள் முன் நிறுத்தியுள்ளது.

     ஒரு காலத்தில் சையத்னா சாஹிப், பட்டானியிலிருந்து திரும்பிய போது அவர் சூரத்துக்கு செல்வதாக இருந்தார் என்று நான் தெளிவாக நினைக்கிறேன். அவருக்கு போதிய நேரம் இல்லை. எனவே நான் விமான நிலையத்துக்கு அவரை சந்திப்பதற்கு அவசரமாக சென்றேன். தாங்கள் வரவில்லை என்றால் நானே உங்களை சந்திக்க  வந்திருப்பேன்  என்று சையத்னா சாஹிப் அப்போது தெரிவித்தார். நாங்கள் விமான நிலையத்தில் இருந்தபோது ஒரு குழந்தைக்கு காட்டுவதைப் போல அவர் என் மீது அன்பையும், பாசத்தையும் பொழிந்தார். அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது குஜராத்தில் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினைக் குறித்து விவாதித்தேன். அணைகள் கட்டுவதுக் குறித்தும் பேசினேன். அப்போது அவருக்கு  98 வயதிருக்கும். அந்த வயதிலும் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தபோது முனைப்போடு செயல்படுவதுக் குறித்து அவர் வலியுறுத்தினார். அவரது முயற்சிகளின் விளைவாக குஜராத்தின் பல கிராமங்களில் தண்ணீரை சேமிப்பதற்காக அணைகளைக் கட்டினோம். இந்த இயக்கம் வெற்றிகரமாக நடைபெற்றது எல்லா கிராமங்களுக்கும்  குடிதண்ணீர் சென்றடைய முடிந்தது. மேலும் சில ஆண்டுகளுக்கு பின்னர் சத்துணவுக் குறைபாட்டை எதிர்த்து போராடுவதற்கான திட்டத்திற்கு  போரா சமூகத்தினரின் உதவியைக் கோரினேன்.  பொது மக்களிடையே வழிப்புணர்வு முகாமை ஏற்படுத்த வேண்டும் என்று அவர்களை கேட்டுக் கொண்டேன்.   இந்த முக்கியமான பிரச்சினைக்குத் தீர்வு காண போரா சமூகத்தினர் எனக்கு உதவிக்கரம் நீட்டினர்.

    ஆஷாரா முபாரக்கா புனித நிகழ்வில் தாவூதி போரா ஈடுபட்டிருக்கும் தருணத்தில் சத்துணவு மாதத்தையும், சத்துணவு இயக்கத்தையும் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.  இந்தத்  தொடர்பை எண்ணிப்பாருங்கள். இந்த முகாம், நாடு முழுவதும் தாய்- சேய் நலப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்டு வருகிறது.

  குழந்தைகளுக்கான கல்வி, சுகாதாரம் மற்றும் சத்துணவு திட்டங்களில் நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் சமுதாய முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவி உள்ளன. மகாராஷ்ட்டிரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் குழந்தைகளுக்கு நீங்கள் சத்துணவு வழங்கி வருவதாக என்னிடம் தெரிவித்தீர்கள். உங்களின் இந்த முயற்சி நாட்டின் எதிர்காலத்தை மேலும் வலுப்படுத்தும்.

    நாட்டில் முதல் முறையாக சுகாதார வசதிக்கு  முக்கியத்துவம் அளிப்பதை மத்திய அரசு நோக்கமாக் கொண்டு செயல்படுவதை நீங்கள் அறிவீர்கள். அனைவருக்கும் சுகாதார வசதி, வரும்முன் காப்பதற்கான தடுப்பு மருந்துகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. தரமுள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார உடல்நல மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. நியாயமான விலையில், ஜன் அவுஷாதி அங்காடிகளில் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.  இலவச சிறுநீரக மாற்றுச் சிகிச்சை வசதிகள் மற்றும் இதயம், மற்றும் மூட்டு மாற்றுச் சிகிச்சை வசதிகள் மற்றும் இதயம், மற்றும் மூட்டு வலிக்கான அறுவைச் சிகிச்சைக்கான மருத்துவக் கருவிகள் நியாயமான விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. ஆயுஷ்மான் பாரத் காப்பீ்ட்டுத்திட்டம் நாட்டில் உள்ள 50 கோடி ஏழை, எளியவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

    இது சாதாரண சிறிய திட்டமல்ல, அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளின் மக்கள் தொகைக்கு சம அளவில் உள்ள இந்திய மக்களுக்கு இந்தத் திட்டம் பயனளிக்கும். மேலும் ஐரோப்பா முழுவதும் உள்ள மக்கள் தொகைக்கு சமமான இந்திய மக்களுக்கு இந்தத் திட்டம் பலனளிக்கும். பெரிய அளவிலான மக்கள் தொகைக்கு சுகாதார நலத்தை அளிக்கும் பெரிய திட்டமாகும்.

 ஒவ்வொரு ஆண்டும் ஒரு குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்க இந்தத் திட்டம் வகை செய்கிறது. இது சாதாரண திட்டமல்ல.  ஐம்பது கோடி மக்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை இந்தத் திட்டத்திற்கு மருத்துவ வசதி பெறலாம் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் பாதுகாப்பு அளிக்கும். நாடு முழுவதும் இந்தத் திட்டம் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா அவர்கள் பிறந்த நாளான செப்டம்பர் 25-ம் தேதி அன்று  அமல்படுத்தப்படும்.

       சத்துணவு மற்றும் சுகாதார சேவைகளோடு  வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுவசதிகளையும் வழங்க நீங்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகள் பாராட்டுதலுக்கு உரியது.  உங்களுடைய முயற்சிகளின் காரணமாக சுமார் 11,000  பேர் வீட்டுவசதிகளைப் பெற்றிருப்பதாக என்னிடம் தெரிவித்தீர்கள். வரும் 2022-ம் ஆண்டுக்குள் ஏழை, எளிய மற்றும் வீடில்லாதவர்களுக்கு வீட்டு வசதிகளை வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

     ஒரு கோடிக்கும் மேற்பட்ட சகோதர சகோரிகளுக்கு வீடுகளுக்கான திறவு கோல் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை அறியும் போது உள்ளபடியே பெரும் மகிழ்ச்சியடைவீர்கள். இது வெறும் அறிவிப்பு மட்டுமல்ல உண்மையில் அவர்கள் வீடுகளுக்கான திறவுகோலை பெற்றுக் கொண்டுள்ளனர். மேலும் பல வீடுகளை கட்டி முடிப்பதற்கான கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. கல்வித்துறையிலும், திறன் மேம்பாட்டிலும் நீங்கள் மேற்கொண்டு வரும் உழைப்பு மத்தியஅரசின் முயற்சிகளால் ஏற்படும் பலனை பெருமளவில் அதிகரிக்கும். இரட்டிப்பு மட்டுமல்ல இதன் பலன் பலமுறை சிறந்ததாக சாமானிய மக்களின் வாழ்வாதாரங்களை எளிதாக்கவும் அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் நாம் தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம்.

நண்பர்களே,

    ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் மேம்பாட்டிலும் அரசு கவனம் செலுத்திவருகிறது. தூய்மையைப் பொறுத்தது இந்தப் பிரச்சினை.  இந்த இயக்கத்தை அரசு தொடங்கியிருந்தாலும் 125 கோடி இந்திய மக்கள், இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர். தூய்மை குறித்து ஒவ்வொரு கிராமத்திலும் வீதி தோறும் மக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். 

   நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், நான் பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்பு, இந்தியாவில் 40 சதவீத  வீடுகள் மட்டுமே கழிப்பறை வசதி பெற்றிருந்தது. மிகக் குறுகிய காலத்தில் இந்த வசதி 90 சதவீதத்தை எட்டியுள்ளது.

   தூய்மையைப் பொறுத்தமட்டில் இந்தூர் நகரம் தொடர்ந்து முன்னேறி வருகிறது. எனவே, இந்தூர் மக்களையும்  நகராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகள், உறுப்பினர்கள், மாநில அரசு, முதலமைச்சர் திரு.சிவ்ராஜ் சிங் சவுகான் அவரது குழுவினர் அனைவரையும் நான் பாரட்ட விரும்புகிறேன்.

     இந்தூர் மட்டுமல்ல  போபால் நகரமும் ஆச்சரியப்படத்தக்க வகையில், பணிகளைச் செயல்படுத்தி உள்ளது. எனது இளம் நண்பர்கள், மத்தியபிரதேசத்தின் ஒவ்வொரு தனி நபரும் இந்த இயக்கத்திற்கு ஊக்குவிப்பை அளித்து வருகின்றனர்.  தூய்மை மற்றும் சுற்றுப்புறச்சூழல், சுகாதாரம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கு உங்கள் சமூகம் ஆற்றி வரும் பணிகளை நான் நன்கு அறிவேன்.

     சையத்னா சாஹிப், தூய்மைக்கும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புக்கும் தானே பாதுகாவலராக இருந்திருக்கிறார்.   சையத்னா சாஹிப், பிறந்தநாள் நூற்றாண்டு விழாவுக்கு என்னை நீங்கள் அழைத்ததை நான் நினைவு கூற விரும்புகிறேன். 

      மற்றவர்கள் பிறந்த நாள் நூற்றாண்டை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பது எனக்கு தெரியாது.  ஆனால்  சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வேண்டும் என்ற முனைப்போடு இந்த இயக்கம் தொடங்கப்பட்டிருப்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்கீர்கள். சிட்டுக்குருவிகள் கூடுகளைக் கட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு பெட்டி கொடுக்கப்பட்டது. சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதற்கு இதைவைிட வேறு என்ன திட்டம் வேண்டும்?  இந்த பண்புகள் நமது எண்ணத்தை தூய்மைப்படுத்தி சுற்றுப்புற சுகாதார மேம்பாட்டிற்கு வழி வகுத்துள்ளது.

      தூய்மை என்பது நமது இதயத்திலும் எண்ணத்திலும் ஊடுருவி இருக்க வேண்டும் என்று சையத்னா சாஹிப் கூறியிருப்பதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. இந்தூரின் கவுரவத்தை மனதில் இருத்தி ஆஷாரா முபாரக்கா விழாவை ஏற்படுத்தியிருப்பதாகவும் சுற்றுப்புறச் சூழல் மற்றும் தூய்மையை இந்நிகழ்வு வலியுறுத்தியிருப்பதாகவும் என்னிடம் கூறினார்கள்.

  இங்கே பிளாஸ்டிக் பைகள் அனைத்தும் முற்றிலும் தடை  செய்யப்பட்டுள்ளது. இதனால் கழிவுகள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. தினமும் பத்து டன் கழிவுகள் மறு சுழற்சி செய்யப்பட்டு இங்கே உரமாக மாற்றப்படுகிறது. இந்த உரம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த நடைமுறை சுற்றுப்புறச் சூழலுக்கு நீங்கள் சேவை செய்வது மட்டுமல்ல கழிவுகளை எரிசக்தியாக்கும் மத்திய அரசின் முனைப்பையும் வலியுறுத்தி வருகிறது.

    இந்த நடவடிக்கை விவசாய சகோதர சகோதரிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். நாடு முழுவதும் உள்ள தூய்மைத் தூதர்கள் இதன் மூலம் பாடம் கற்றுக் கொண்டு தூய்மைப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இனி வரும் எங்களது திட்டங்களில் கழிவுகளை எரிசக்தியாக மாற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தூய்மைப் பணி இயக்கம் செப்டம்பர் 15-ம் தேதி  முதல் தொடங்கப்பட்டு, மகாத்மா காந்திஜி பிறந்த நூற்றாண்டான அக்டோபர் 2-ம் தேதி வரை நீடிக்கும். நாளை காலை ஒன்பது  30 மணிக்கு காணொலி காட்சி மூலம் தூய்மை தூதர்கள், மதக்குருக்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், தொழில் அதிபர்கள், மற்றும் சமுதாயத்தின் முக்கிய பிரமுகர்களுடன் நான் கலந்துரையாட இருக்கிறேன். எனவே உலக சாதனை உருவாக்கப்படும். கோடிக்கணக்கான மக்கள் அதே நேரத்தில் நாளை தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

      மேலும்  அக்டோபர் 2-ம் தேதி மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் நிகழ்ச்சிகளும் தொடங்கிவிடும். காந்தியின் 150-வது பிறந்தநாள் குறித்து சையத்னா சாஹிப் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படும் போது காந்தீய வழியில் தூய்மையைக் கடைப்பிடிக்கும் முயற்சிகளுக்கு அவர் தூண்டுகோளாக இருப்பார்.

நண்பர்களே,

    இத்தருணத்தில் உங்கள் அனைவரையும் மற்றொரு விஷயம் தொடர்பாக பாராட்ட விரும்புகிறேன். உங்களில் பெரும்பாலானோர் வணிகம் மற்றும் வியாபாரத்துடன்  தொடர்புடையவர்கள்.  சட்ட விதிகளின்படி பணிகளை எப்படி முறையாக செயல்படுத்த வேண்டும் என்பதற்கு நீங்கள் ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் வியாபாரத்தை எப்படி விரிவுப்படுத்தலாம் என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.  சையத்னா சாஹிபும் இதே கருத்தைத் தான் எப்போதும் வலியுறுத்தி வந்தார். இது சாதாரண விஷயம் அல்ல. உலகில் எந்த இடத்தில் கூடியிருந்தாலும் தாவூதி போரா சமூகத்தினர்  நற்பண்புகளை பொறுத்தமட்டில் தங்களுக்கென தனி அடையாளத்தை பதிவு செய்துள்ளனர்.

     உங்களது நேர்மை, நன்னடத்தை, ஆகியவை வியாபாரத்தை  எப்படி முன்னெடுத்துச் செல்லலாம் என்பதையும், மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. நாட்டின் வணிகர் ஒருவர் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கிறார். நாட்டில் வேலை வாய்ப்புகளை பெருக்குவதற்கு அவர் முக்கியமானவராக கருதப்படுகிறார். அவரை முடிந்தவரை நாங்கள் ஊக்குவிக்க விரும்புகிறோம். இதுதான் எங்களது முன்னுரிமை.

      ஒரு கையில் உள்ள அனைத்து வி்ரல்களும் சமமாக இருப்பதில்லை என்பதுதான் உண்மை. ஏமாற்றுவதே வியாபாரம் என்பதை நம்மிடையே உள்ள சிலர் நம்புகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில் சட்டத்தின் முன் ஒவ்வொருவரும் கொண்டு வரப்படுவார்கள் என்ற தகவலை வெற்றிகரமாக தெரிவித்திருக்கிறோம். சரக்கு மற்றும் சேவை வரி, நொடித்துப் போதல், திவால் குறியீடு உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் மூலம் நேர்மையான வணிகர்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர். இதன் பலனை போரா சமூகத்தினர் பெருமளவில் அனுபவித்து வருகின்றனர். நம் நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள முதலீட்டாளர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் நம்பிக்கையை மேம்படுத்தியிருக்கிறோம். தற்போதுள்ள நிலவரப்படி இந்தியாவில் தயாரிப்பு என்ற திட்டத்தின் கீழ், கைபேசிகள், கார்கள் உள்ளிட்டவற்றை அதிக அளவில் உற்பத்தி செய்திருக்கிறோம். முதலீடுகளும்  அதிக அளவில் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் பலனாக  கடந்த ஆண்டு நமது வளர்ச்சி எட்டு சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. உங்களது முயற்சிகள் மற்றும் 125 கோடி இந்திய மக்களின் கடின உழைப்புக் காரணமாக இதனை சாதிக்க முடிந்தது. இந்திய பொருளாதாரம், உலகிலேயே துரிதமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாகும்.

    நம் நாடு தற்போது இரட்டை இலக்க வளர்ச்சியை எதிர் நோக்கி உள்ளது. நம் நாடு வளர்ந்து வருவதைப் பார்க்கும்போது எண்ணற்ற  சவால்களை நாடு வலுவோடு எதிர்கொண்டு உரிய வளர்ச்சி இலக்கை எட்டிவிடும்.

நண்பர்களே,

    உலகில் இந்தியாவைப் பற்றிய நல்லெண்ணத்தை உருவாக்குவதில் நீங்கள் அனைவரும் முக்கிய பணியாற்றி வருகிறீர்கள்.  பண்டைய இந்தியா உலகில் ஒளிமயமான இடத்தை பெற்றதைப் போன்று, புதிய இந்தியாவுக்கும் அதே கவுரவம் கிடைக்க நமக்கு  கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

   இந்தியாவை சீரமைப்பதற்கு நாம் அயராது பாடுபட வேண்டும். இந்த நம்பிக்கையோடு நான் எனது உரையை முடித்துக் கொள்கிறேன். மீண்டும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சையத்னா சாஹிப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எப்போதும் உங்களது அன்பையும், பற்றுதலையும், ஆசிகளையும் எனக்கு தெரிவித்துவருகிறீர்கள். உங்களது வாழ்த்துகள் எனக்கு வலுவாக அமைந்துள்ளது. இந்த வலு எனக்கு மட்டுமல்ல 125 கோடி இந்திய மக்களுக்கும் சேரும். வாழ்த்துக்களையும் வலுவையும் நாட்டு மக்கள் அனைவருக்கும் அர்ப்பணித்துக்கொண்டு மீண்டும் உங்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களுக்கு அனைவருக்கும் நன்றி.

*******



(Release ID: 1547403) Visitor Counter : 279


Read this release in: English , Marathi , Bengali , Kannada