பிரதமர் அலுவலகம்

சத்திஷ்கரில் பிரதமர்: ஜங்ஜிர் சம்பாவில் விவசாயிகள் மாநாட்டில் உரை - முக்கியமான கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

Posted On: 22 SEP 2018 6:11PM by PIB Chennai

பிரதமர் நரேந்திர மோடி இன்று சத்திஷ்கருக்கு வருகை தந்தார். ஜங்ஜிர் சம்பாவில் வேளாண் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை அவர் பார்வையிட்டார். தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் மற்றும் பென்ட்ரா-அனுப்பூர் 3-வது ரயில்வே தடம் ஆகியவற்றுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகளுக்கு அவர் சான்றிதழ்களை வழங்கினார்.

     அங்கு மாபெரும் விவசாயிகள் மாநாட்டில் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, உத்ராகண்ட், ஜார்க்கண்ட் மற்றும் சத்திஷ்கர் ஆகிய 3 மாநிலங்களை உருவாக்கிய முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாயின் பணிகளை நினைவு கூர்ந்தார். திரு. அடல் பிகாரி வாஜ்பாயின் தொலைநோக்குப் பார்வையே, இந்த மாநிலங்களில் விரைந்த வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

     மத்திய அரசு வளர்ச்சிக்கே முக்கியத்துவம் தருகிறது என்றும், மக்களின் அபிலாஷைகளை முற்றிலும் நிறைவேற்ற விரும்புகிறது என்றும் பிரதமர் உறுதிபடத் தெரிவித்தார். மக்கள் சிரமப்படாமல் வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

     வாக்கு வங்கிக்காகவோ அல்லது தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவோ மத்திய அரசு திட்டங்களை உருவாக்குவதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என்று தெரிவித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, மத்திய அரசின் நோக்கம் நவீன சத்திஷ்கரை உருவாக்குவதுதான் என்றார். நாங்கள் அனைவரும் இணைவோம், நாங்கள் அனைவரும் உயர்வோம் என்ற திட்டத்தோடு நாங்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்ட பிரதமர், விவசாயிகள் மதிப்புக்கூடுதல் மூலமாக பயனடைவதை உறுதி செய்ய மத்திய அரசு கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறது என்றார். இதன் ஒரு பகுதியாக, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான பிரதம மந்திரி கிஷான் சம்பதா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். தொழில்நுட்ப உதவிகள் மூலம், விவசாயிகளின் மேம்பாட்டை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்த பிரதமர், மண்வள அட்டை திட்டம் மற்றும் விவசாயிகள் காப்பீட்டுத் திட்டம், அவர்களுக்கு மிகவும் பயனளித்துள்ளது என்றார்.

     ஒரு காலத்தில், குறிப்பிட்ட சிலரே நலத் திட்ட உதவிகளை பெற்று வந்ததாக குறிப்பிட்ட பிரதமர், ஊழல் அரசு அமைப்பையே அழித்துவிட்டது என்றார். நாங்கள் அனைவரின் மேம்பாட்டுக்கும் உறுதிபூண்டுள்ளோம் என்றும் 2022 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொருக்கும் வீடு கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

     வீடுகளில் கழிப்பறைகள் கட்டும் பணி விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த பிரதமர், உஜ்வாலா திட்டத்தின்கீழ், ஏழை மக்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். தற்போது, சௌபாக்யா திட்டம் மூலம், ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டு வருவதாகவும்  பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்தார்.

********



(Release ID: 1546972) Visitor Counter : 141