பிரதமர் அலுவலகம்

அஸாம்கடில் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் வழித்தடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

Posted On: 14 JUL 2018 4:14PM by PIB Chennai

உத்தரபிரதேச மாநிலம்,  அஸாம்கடில் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் வழித்தடத்திற்கு பிரதமர்  திரு. நரேந்திரமோடி இன்று (14.07.2018) அடிக்கல் நாட்டினார்.

பெருந்திரளாக கூடியிருந்த மக்களிடையே உரையாற்றிய அவர், இந்த நிகழ்ச்சி மாநிலத்தின் வளர்ச்சிப் பயணத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்கியிருக்கிறது என்ற வர்ணித்தார். இந்த மாநிலத்தில் சிறந்த தலைமைத்துவத்தைத் தந்துவரும் முதலமைச்சர்  யோகி ஆதித்யநாத்தை அவர் பாராட்டினார். மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த இணக்கமான சூழலை உருவாக்க மாநில அரசு செயல்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் மேம்பாட்டிற்காக மாநில அரசு பணியாற்றி வருகிறது என்றும் அவர் கூறினார்.

340 கிலோமீட்டர் தூரமுள்ள பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் வழித்தடம் பெருநகரங்கள், சிறுநகரங்கள் ஆகியவற்றின் வழியாக கடந்து செல்லும் என்று பிரதமர் தெரிவித்தார். தில்லிக்கும், காஜிப்பூருக்கும் இடையே விரைவான தொடர்பை இது ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் கூறினார். இந்த எக்ஸ்பிரஸ் பாதையின் காரணமாக, புதிய தொழிற்சாலைகளும், கல்வி நிறுவனங்களும் உருவாகும் என்றார். இந்தப் பகுதியில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் சுற்றுலாவை இந்த எக்ஸ்பிரஸ் வழித்தடம் மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

இன்றைய வளர்ச்சிக்கு இணைப்பு என்பது அவசியமானது என்றும் திரு. நரேந்திரமோடி தெரிவித்தார். நான்காண்டுகளில் உத்தரப்பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் பெரும்பாலும் இருமடங்காகியுள்ளன என்று அவர் கூறினார். இந்தச் சூழலில் வான்வழி இணைப்பு மற்றும் நீர்வழி இணைப்புக்கான முயற்சிகள் பற்றியும் பிரதமர் பேசினார். புதிய வளர்ச்சிக்கான இடமாக நாட்டின் கிழக்குப் பகுதியை உருவாக்குவதற்கான முயற்சி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அனைவரும் இணைவோம் – அனைவரும் உயர்வோம் என்ற தமது தொலைநோக்குத் திட்டம் பற்றி குறிப்பிட்ட பிரதமர், இந்தப் பிராந்தியத்தின் சீரான வளர்ச்சியை வலியுறுத்தினார். டிஜிட்டல் இணைப்பு பற்றி குறிப்பிட்ட அவர், இதுவரை 1 லட்சம் கிராமங்களுக்கு கண்ணாடி இழைத் தொடர்பு அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மக்களின் வாழ்க்கையை எளிதாக்க இதுவரை 3 லட்சம் பொதுசேவை மையங்கள் தொடங்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

பிரதமர் வீட்டுவசதித் திட்டம், பிரதமர் கிராமச் சாலைத் திட்டம் போன்ற மத்திய அரசின் பிற நலத் திட்டங்கள் பற்றியும் வளர்ச்சிக்கான முன்முயற்சிகள் பற்றியும் பிரதமர் பேசினார். விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில், குறுவைப் பயிருக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

“முத்தலாக்” முறையிலிருந்து இஸ்லாமியப் பெண்களை பாதுகாப்பதற்கான சட்டத்தை நிறுத்தி வைக்க சில சக்திகள் முயற்சி செய்வதை பிரதமர் குறை கூறினார். இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த உறுதியான முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மத்திய அரசுக்கும், உத்தரபிரதேச மாநில அரசுக்கும் தேசமும் மக்களும் மிகவும் உயர்ந்தவை என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பகுதியில் நெசவாளர்கள் நலனுக்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக பிரதமர் கூறினார். இந்நிலையில், அவர்களுக்கு நவீனக் கருவிகளும், குறைந்த வட்டியில் கடனும், வாரணாசியில் வர்த்தக மையமும் அமைக்கப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார். மாநில அரசு மேற்கொண்டுள்ள முன்முயற்சிகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

-----



(Release ID: 1540476) Visitor Counter : 111