மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

மேலும் திறனுள்ள தீர்வுகளைக் காணுமாறு வாட்ஸ்-அப் நிறுவனம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

Posted On: 20 JUL 2018 1:06PM by PIB Chennai

வாட்ஸ்-அப் மேடையை தவறாக பயன்படுத்தி உணர்ச்சியூட்டும் செய்திகளை பரப்புவதனால் ஏற்படும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்களை தவிர்ப்பதற்காக உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு வாட்ஸ்-அப் நிறுவனத்திற்கு 2018 ஜூலை 3-ந் தேதி அன்று மத்திய மின்னணுவியல் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடிதம் எழுதியிருந்தது. அதே நாளில் வாட்ஸ்-அப் நிறுவனம் அனுப்பியிருந்த பதிலில் பொய்யான செய்திகளை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாகவும், பார்வேர்டு செய்யப்பட்ட தகவல்களை குறிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விளக்கியிருந்தது.

     இதனையடுத்து பிடார் என்ற இடத்தில் முகமது ஆசாம் என்கிற 32 வயது மென்பொருள் பொறியாளர் அடித்துக் கொல்லப்பட்ட, துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்தது. அந்த சமயத்தில் வாட்ஸ்-அப் மூலம் குழந்தைகளைக் கடத்துபவர்கள் பற்றிய வதந்திகள் பெரிய அளவில் பரவியிருந்தன. நாடெங்கும் பொய்யான செய்திகளால் தொடர்ந்து குற்றங்கள் இழைக்கப்பட்டு வரும் பின்னணியில், இத்தகைய சவாலின் பெரிய அளவு தொடர்பாகவும் பொறுப்பற்ற முறையில் மிகப் பெரிய அளவில் பொய்த் தகவல்கள் தங்கள் மேடையில் பரவி வருவதையும் குறித்து போதுமான  எதிர் நடவடிக்கைகளை வாட்ஸ்-அப் நிறுவனம் எடுக்கவில்லை என்பது வருந்தத்தக்கது.

     ஊடகங்களில் வந்துள்ள செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் வாட்ஸ்-அப் நிறுவனம் இந்த வகையில் செய்ய வேண்டியது மிக அதிகம் உள்ளது என்பது தெரிய வருகிறது. தூண்டி விடக் கூடிய, உணர்ச்சிகரமான தகவல் அடையாளம் காணப்பட்டு சட்ட அமலாக்க பிரிவினரிடம் இருந்து கோரிக்கை வரும் போது மற்றும் அந்த செய்தியின் தோற்றத்தை கண்டுபிடிக்கவும், அதற்கு பொறுப்பானவர்களை நிர்ணயிக்கவும் அவசியம் ஏற்படுகிறது. வதந்திகளும், பொய்யான செய்திகளும் விஷமிகளால் அதிகமாக பரப்பப்படும் போது அது இடம் பெற்ற ஊடகம் தனது பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. அந்த ஊடகம் அமைதியாக இருந்தால் இந்த செய்திகளால் இழைக்கப்படும் குற்றத்திற்கு துணைப் போவதாக அமையும். இதனையடுத்து அந்த ஊடகம் சட்டப்படியான நடவடிக்கையை எதிர்நோக்க வேண்டியது இருக்கும்.

     மேற்கண்ட விளக்கத்தை அடுத்து வாட்ஸ்-அப் நிறுவனம் மேலும் திறம்பட்ட தீர்வுகளை கொண்டு வந்து பொறுப்பேற்கும் தன்மையை நிலைநிறுத்தி சட்ட அமலாக்கத்திற்கு உதவ வேண்டும் என இன்று (20.07.2018) கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பார்வர்டு செய்யப்பட்ட செய்திகளையும், பொய்யான செய்திகளையும் அடையாளம் காணும் முயற்சிகளுடன் இந்த பொறுப்பேற்கும் தன்மையை நிலைநிறுத்தவும் வேண்டுமென அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனை மிகவும் முக்கியமான, உணர்வுபூர்வமான பிரச்சனை. இதை தீர்ப்பதற்கு மேலும் சிறப்பான பதில் நடவடிக்கை அவசியம் என்பதை எவ்வித ஐயப்பாட்டுக்கும் இடமின்றி வாட்ஸ்-அப் இடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.



(Release ID: 1539443) Visitor Counter : 139