மத்திய அமைச்சரவை

பட்டயக் கணக்காளர்கள் குறித்த இந்தியா-தான்சானியா இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 18 JUL 2018 5:28PM by PIB Chennai

இந்தியாவின் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தில் மற்றும் தான்சானியாவின் கணக்காளர்கள் மற்றும் தணிக்கையாளர்களின் தேசிய வாரியம் ஆகியவற்றுக்கு இடையே செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. உறுப்பினர் மேலாண்மை, தொழில்முறை மரபுகள், ஆராய்ச்சி நுட்பம், தொழில்முறை மேம்பாடு, பயிற்சி, தரமான தணிக்கை உள்ளிட்ட பிரிவுகளில் பரஸ்பர ஒத்துழைப்பு கட்டமைப்பை ஏற்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

விளைவு

  பட்டயக் கணக்காளர் நிறுவன உறுப்பினர்கள், மாணவர்கள், அவர்களது அமைப்புகள் ஆகியவற்றின் நலனைக் கருத்தில் கொண்டு, பரஸ்பரம் பயனளிக்கக்கூடிய உறவை மேம்படுத்த  இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும். இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் உறுப்பினர்கள் தங்களது தொழில் ரீதியிலான திறனை விரிவாக்க இந்த ஒப்பந்தம் வாய்ப்புகளை வழங்கும். இந்தியா மற்றும் தான்சானியா நாடுகளின் பட்டயக் கணக்காளர்கள் இடையே வலுவான பணி உறவுகளை வளர்க்கவும் இது வகைசெய்யும்.

பின்புலம்

  ஆப்பிரிக்காவில் பட்டயக் கணக்கு மற்றும் தணிக்கைத் தொழிலை மேம்படுத்திக்கொள்ள மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. பட்டயக் கணக்குத் துறையை சேர்ந்த இருநாட்டு நிறுவனங்களும், அவற்றின் உறுப்பினர்களுக்கு  மறைமுக வேலைவாய்ப்பை உறுதி செய்ய உதவும். தற்போது ஆப்பிரிக்க சந்தையில் பணியாற்றும் இந்திய பட்டயக் கணக்காளர்கள், தான்சானியா சந்தையை நோக்கிச் செல்ல தங்களது ஆக்கப்பூர்வமான வேலைத் திறனை உருவாக்குவதற்கு இது வழிவகுக்கும்.

   இந்தியாவில் பட்டயக் கணக்குத் தொழிலை முறைப்படுத்த 1949ஆம் ஆண்டில் பட்டயக் கணக்காளர்கள் சட்டத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட அமைப்பு, இந்திய பட்டயக் கணக்காளார் நிறுவனமாகும். தான்சானியா அரசின் நிதி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசிய கணக்காளர்கள் மற்றும் தணிக்கையாளர்கள் வாரியம், தான்சானியா நாடாளுமன்றம் இயற்றிய 1972ஆம் ஆண்டின் தணிக்கையாளர்கள் மற்றும் கணக்காளர்கள் (பதிவு) சட்டம் எண் 33-ன்படி, உருவாக்கப்பட்டதாகும்.

================



(Release ID: 1539187) Visitor Counter : 128