பிரதமர் அலுவலகம்

பகதூர்கர் – முன்ட்கா மெட்ரோ ரயில் பாதை தொடக்க விழாவில் காணொலி காட்சி மூலம் பிரதமர் ஆற்றிய உரை

प्रविष्टि तिथि: 24 JUN 2018 1:18PM by PIB Chennai

பகதூர்கர் – முன்ட்கா மெட்ரோ ரயில் பாதை செயல்பாட்டிற்கு வந்திருப்பதையொட்டி, ஹரியானா மற்றும் தில்லி வாழ் மக்களுக்கு முதலில் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

     அரியானாவின் பகதூர்கர், இன்று தில்லி மெட்ரோவுடன் இணைக்கப்பட்டுள்ளது. குருகிராம் மற்றும் ஃபரிதாபாதிற்கு அடுத்தபடியாக, அரியானாவின் 3-வது பெரும் பகுதியாகக் கருதப்படும் பகதூர்கர் தற்போது தில்லி மெட்ரோவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்த ரயில் பாதை அர்ப்பணிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அரியானாவில் மெட்ரோ ரயில் சேவை செயல்படுத்தப்படும் பரப்பளவு 26 கிலோமீட்டர் அளவிற்கு விரிவடைந்துள்ளது.

     நண்பர்களே,

     தில்லி மெட்ரோ ரயில் போக்குவரத்து மக்களின் வாழ்க்கையை எந்த அளவில் மாற்றியமைத்துள்ளது என்பதற்கு இந்த ரயிலில் பயணம் செய்யும் ஒவ்வொருவரும் சாட்சியாக திகழ்கின்றனர். நானே பலமுறை தில்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளேன். பகதூர்கர்-முன்ட்கா வழித்தடத்தில் இன்றுமுதல் பயணம் செய்வோரும், இதே அனுபவத்தை உணர்வார்கள்.

     பகதூர்கர் பகுதியில் தொழிற்சாலைகள் அதிகரித்து வருவதால், இப்பகுதி மக்கள் மெட்ரோ ரயில் சேவையை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தனர். பகதூர்கர் பகுதியில் ஏராளமான கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளதால், ஏராளமான மாணவர்கள் தினந்தோறும் தில்லியிலிருந்து பகதூர்கருக்கு பயணம் செய்கின்றனர். தற்போது, இப்பகுதியில் உள்ள லட்சக்கணக்கான தொழில் முனைவோர், மாணவர்கள் மற்றும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள மக்கள் தில்லிக்கு பயணம் செய்வது மிகவும் எளிதாகியுள்ளது.

     அரியானாவின் நுழை வாயில் என்று பகதூர்கர் அழைக்கப்படுவது வழக்கம், எனினும், இந்த மெட்ரோ ரயில்பாதை, வளர்ச்சிக்கான நுழைவாயிலாக இங்கு வந்துள்ளது.

     தொழிற்சாலைகள் வளர்ச்சியடையும் போது, இந்த மெட்ரோ ரயில் சேவை மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும்.  மேலும், புதிய குடியிருப்புகள் உருவாவதுடன், வேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்புகளும் உருவாக்கப்படும். இணைப்பு வசதிகளும், வளர்ச்சிப் பணிகளும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதை, இந்த மெட்ரோ ரயில் போக்குவரத்து மூலம் அறிந்து கொள்ளலாம்.

     தற்போது, தில்லியில் 280 கிலோமீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில் பாதை செயல்பாட்டில் உள்ளது. இந்த சேவை அசுரவேகத்தில் விரிவுபடுத்தப்பட்டு வருவதால், ஷாங்காய், பெய்ஜிங், லண்டன் மற்றும் நியூயார்க் நகரங்களுக்கு அடுத்தபடியாக, 5-வது பெரிய மெட்ரோ ரயில் சேவையை கொண்ட நகரமாக தில்லி வெகு விரைவில் மாறும்.

     நண்பர்களே, தில்லியில் கனவுகள் நனவாகியிருக்கும் நிலையில், அசைக்கமுடியாத உறுதிப்பாடுகளின் பலனை தில்லி தலைநகர மண்டலப் பகுதி மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதேபோன்ற முயற்சிகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும். மெட்ரோ ரயில் பணிகள் ஒவ்வொரு நகரத்திலும் வெவ்வேறு விதமாக செயல்படுத்தப்பட்டது, இத்திட்டத்திற்கு பெரும் பின்னடைவாக இருந்தது. மெட்ரோ ரயில் மற்றும் அதனை சார்ந்த பணிகளுக்கென தனிக் கொள்கையும் இல்லாமல் இருந்தது. அதன் காரணமாக, இலக்கு மற்றும் தர நிர்ணயம் செய்ய முடியாமல் இருந்தது.  அரசியல்வாதிகள் அவரவர் விருப்பத்திற்கேற்ப ரயில் நிலையங்கள் அமைப்பது பற்றி முடிவு செய்து வந்ததுடன், பல்வேறு துறைகளின் விருப்பங்களின் பேரிலும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

     2017-ல் நாட்டின் முதலாவது மெட்ரோ ரயில் கொள்கை உருவாக்கப்பட்ட பிறகு இந்த அம்சங்கள் அனைத்தும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. நகரங்களில் ஒட்டுமொத்த போக்குவரத்து முறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதால், அலுவலகங்கள் அல்லது வீடுகளுக்கு செல்வதற்காக, ஒரு ரயில் நிலையத்திலிருந்து  மற்றொரு ரயில் நிலையத்திற்கு பயணம் செய்வோர்  இனி சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்காது. தற்போது, நாட்டின் எந்தப்பகுதியில் மெட்ரோ ரயில் போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டாலும், அது ஒரே தரத்தில் உருவாக்கப்படுகிறது.

     நண்பர்களே, 21-ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கேற்ப, எளிமையான, குறைந்த கட்டணத்தில், தூய்மையான அரசுப் போக்குவரத்து சேவைகளை நகரங்களில் ஏற்படுத்துவது என்பது இந்த அரசின் உறுதியாகும்.

     இன்று நாட்டிலுள்ள 12 நகரங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்து விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள பல்வேறு நகரங்களை மெட்ரோ ரயில் மூலம் இணைக்குமாறு மாநில அரசுகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன.  இதுதவிர, மெட்ரோ ரயில் பெட்டிகளும் தற்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது.

     குஜராத்தின் வதோதரா மற்றும் தமிழகத்தின் சென்னையில் அதிநவீன மெட்ரோ ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தின்கீழ் மெட்ரோ ரயில் உற்பத்தியை ஊக்குவிக்க ஏதுவாக  கொள்முதல் கொள்கையை அரசு திருத்தி அமைத்துள்ளது.  இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை 75 சதவீத அளவிற்கு பயன்படுத்துவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நண்பர்களே

நமது சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்பின் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது மெட்ரோ கட்டமைப்பு. முன்னர் மெட்ரோ கட்டமைப்பின் வளர்ச்சிக்கு பல நாடுகள் உதவி புரிந்துள்ளன. தற்போது உலகில் உள்ள பல நாடுகளுக்கு மெட்ரோ ரயில் பெட்டிகளை வழங்க இந்தியா தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறது.

சர்வதேச உறவுகள் மட்டுமல்ல ஒத்துழைப்போடு கூடிய கூட்டாட்சி முறையின் செயல்பாட்டுக்கும் இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. இன்று நாட்டில் எந்த மாநிலத்தில் மெட்ரோ கட்டமைப்பு, வளர்ச்சி அடைந்தாலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் முனைப்போடு கூடிய பங்களிப்போடுதான் இந்த வளர்ச்சி உள்ளது.

நண்பர்களே

தில்லி தேசிய தலைநகர் பகுதியை பொறுத்தவரை மெட்ரோ கட்டமைப்பு வளர்ச்சியடைந்திருக்கும் வேகம் நாளொன்றுக்கு 6 லட்சம் வாகனங்களின் தேவையை நீக்கியுள்ளது.

மக்களின் பணம் மற்றும் நேரத்தை சேமித்துள்ள மெட்ரோ, சுற்றுப்புற சூழல் மாசுபடுவதை குறைக்கும் பணியையும் செய்துள்ளது. மெட்ரோவிற்கு மேலாக, தில்லி தேசிய தலைநகர் பகுதியில் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப போக்குவரத்து முறையை சீர் செய்யும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.

உயர் வேக ரயிலின் வசதியோடு சோனிபட், அல்வார், மீரட் ஆகியவற்றை தில்லியோடு இணைப்பதற்கான மண்டல அதிவேக போக்குவரத்து கட்டமைப்பிற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கூடுதலாக தில்லியை சுற்றி விரைவுச் சாலைகளுக்கான கட்டமைப்பை உருவாக்கும் பணி வேகமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப் பணியை செய்து முடிக்க மக்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்பு கிழக்கு வெளிச்சுற்று அதிவேக சாலை திட்டத்தின் முதல் பகுதியை நான் மக்களுக்கு அர்ப்பணித்தேன். அரியானாவில் உள்ள மேற்கு வெளிச்சுற்று அதிவேக சாலைத் திட்டத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வெளிச்சுற்று அதிவேக சாலையின் காரணமாக தில்லி வழியாக செல்லும் சிறிய மற்றும் பெரிய வாகனங்களின் எண்ணிக்கை 25 முதல் 30 சதவீதம் குறைந்துள்ளது.

இதனால் போக்குவரத்து நிச்சயமாக குறைந்துள்ளதோடுசுற்றுச்சூழல் மாசுபடுவதற்கான முக்கியமான காரணியும் குறைக்கப்பட்டுள்ளது.

சகோதர, சகோதரிகளே

ஒரு புதிய உத்வேகமுள்ள உள்கட்டமைப்பு வசதியே புதிய இந்தியாவிற்கான இந்த அரசின் கடப்பாடாகும்.

கடந்த 4 ஆண்டுகளில் சாலைகள், ரயில்கள், நீர்வழிகள் சார்ந்த உள்கட்டமைப்பிற்கு அதிகபடியான முதலீடு செய்யப்பட்டுள்ளது. கார்கிலிலிருந்து கன்னியாகுமரிக்கும், கட்ச்சிலிருந்து காமக்கியாவிற்கும் இடையேயான தொடர்பை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. நீளமான குகைகளானாலும், மிகப் பெரிய பாலங்களானாலும் இவை யாவும் ஒன்றன் பின் ஒன்றாக உரிய நேரத்தில் முடிக்கப்படுகின்றன. பாரத் மாலா திட்டத்தின் கீழ் 35 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமான நவீன நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கான பணி  தொடங்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் ஒரு புறம் 100 நீர்நிலைகளும், புல்லட் ரயில்களும் நாட்டின் போக்குவரத்து முறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும், அதே வேளையில் மறுபுறம் சிறு நகரங்களில் அமைக்கப்படும் சிறு விமான நிலையங்கள் வானத்தை எட்டிப் பிடிக்கும், மக்களின் துணிவிற்கு உதவிப் புரியும். இந்த நவீன உள்கட்டமைப்பு 21 ஆம் நூற்றாண்டில் நமது நகரங்கள் வளர்ச்சியின் மையமாக விளங்குவதற்கு உதவிப் புரியும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டால், தொடர்புகள் மேலும் வசதியாகி விடும், போக்குவரத்தின் பல்வேறு கூறுகள் வழங்கும் ஆதரவு, மக்களின் வாழ்க்கையை மேலும் எளிமையாக்கும் என்பதோடு, வேலைவாய்ப்புகள் மற்றும் வியாபாரத்திற்கான வாய்ப்புக்கள்  உருவாக்கப்படும்.

நண்பர்களே

அரசின் முயற்சிகளுக்கு சாமானிய மனிதர்களின், முனைப்போடு கூடிய பங்களிப்பு மிகவும் தேவை. இல்லையெனில் இது சாத்தியமல்ல.

புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான கட்டமைப்பின் வளர்ச்சிக்கான நமது முயற்சிகளில் பங்கேற்க தாங்கள் தயவுசெய்து முன்வர வேண்டும்.

மீண்டும் ஹரியானா மற்றும் பகதூர்கர் மக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தனிமனித வாகனங்களை கைவிட்டு இந்த வசதியை குடிமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நான் எனது உரையை நிறைவு செய்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி.

 

 

 

 

  

***


(रिलीज़ आईडी: 1538849) आगंतुक पटल : 268
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , Bengali , Gujarati