ஊரக வளர்ச்சி அமைச்சகம்

பிரதமர் திரு. நரேந்திர மோடி 2018 ஜூலை 12 அன்று, தேசிய ஊரக வாழ்வாதார இயக்க பயனாளிகளுடன் காணொலிக் காட்சி மூலம் நேரடியாக கலந்துரையாடுகிறார்.

Posted On: 11 JUL 2018 11:01AM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி 2018 ஜூலை 12 அன்று காலை 9.30 மணியளவில், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின்,  தீன்தயாள் அந்தியோதயா திட்டத்தின்கீழ் வரும் சுயஉதவிக் குழுவினர், தீன்தயாள் உபாத்யாயா கிராமப்புற இளைஞர் வேலைவாய்ப்புத் திட்டம் மற்றும் கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய பயனாளிகளுடன் காணொலிக் காட்சி மூலம் நேரடியாக கலந்துரையாடுகிறார்.  இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி தூர்தர்ஷன் மற்றும் தேசிய தகவல் மைய இணைய தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.  இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி, தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின்,  தீன்தயாள் அந்தியோதயா திட்டத்தின்கீழ் செயல்படும் சுயஉதவிக் குழு உறுப்பினர்களை பற்றியும், அவர்களது பல்வேறு செயல்பாடுகள் பற்றியும், இந்த திட்டம் அவர்களது வாழ்வில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்தும் பிரதமர் நேரடியாக அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.

தீன்தயாள் அந்தியோதயா திட்டத்தின் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் மேம்பாட்டுக்கான ஒரு மாபெரும் தளமாக உருவெடுத்துள்ளது.  இந்த இயக்கம் தற்போது, 29 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களில் உள்ள 600 மாவட்டங்களுக்கு உட்பட்ட 4,884 வட்டங்களில் செயல்பாட்டில் உள்ளது. 2018 மே மாத நிலவரப்படி, 5 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் 45 லட்சம் மகளிர் சுயஉதவிக் குழுக்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுதவிர, 2.48 லட்சம் கிராம அமைப்புகள் மற்றும் 20 ஆயிரம் சிறிய அளவிலான கூட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணைய தளத்தை காணவும்.



(Release ID: 1538322) Visitor Counter : 274