பிரதமர் அலுவலகம்

துறவி கபீர் நகரில் மகாதுறவியும், கவிஞருமான கபீருக்கு பிரதமர் புகழஞ்சலி செலுத்தினார்

Posted On: 28 JUN 2018 1:00PM by PIB Chennai

உத்திரபிரதேச மாநிலம், துறவி கபீர்நகர் மாவட்டத்தில் உள்ள மகருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (28.06.18) பயணம் மேற்கொண்டார்.

     மகாதுறவியும், கவிஞருமான கபீரின் 500-வது நினைவு நாளையொட்டி, துறவி கபீர் சமாதியில் அவர் மலரஞ்சலி செலுத்தினார்.  துறவி கபீரின் கல்லறைமீது அவர் மலர்ப் போர்வையையும் போர்த்தினார். துறவி கபீரின் குகைக்கு சென்றிருந்த அவர், மகாதுறவியின் போதனைகளுக்கும், சிந்தனைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் துறவி கபீர் கல்விக் கழகத்திற்கு அடிக்கல் நாட்டுவதன் அடையாளமாக கல்வெட்டு ஒன்றை  திறந்து வைத்தார்.

     பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பிரதமர், துறவி கபீர், குருநானக், பாபா கோரக்நாத் ஆகியோர் ஆன்மிக விவாதத்தில் ஈடுபட்டிருந்த புனித மகருக்கு வருகை தந்து, மகா துறவி கபீருக்கு அஞ்சலி செலுத்தியதன் மூலம், பல ஆண்டுகளாக தாம் கொண்டிருந்த விருப்பம் நிறைவேறியிருக்கிறது என்றார்.

     ரூ.24 கோடி செலவில் கட்டப்படவுள்ள துறவி கபீர் கல்விக் கழகம், துறவி கபீரின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் அமைப்பாக உருவாகும் என்றும், அதேபோல், உத்தரபிரதேசத்தின் பிராந்திய மொழிகளையும், நாட்டுப்புறக் கலைகளையும் பாதுகாக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

     இந்திய ஆன்ம சாரத்தின் பிரதிநிதியாக துறவி கபீர் விளங்கியதாக பிரதமர் தெரிவித்தார். துறவி கபீர் சாதித் தடைகளை தகர்த்தார் என்றும், இந்தியக் கிராமப்புறங்களில் வாழும் சாமானிய மக்களின் மொழியில் பேசினார் என்றும் திரு. நரேந்திர மோடி மேலும் கூறினார்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது துறவிகள் உருவாகி, சமூகத் தீமைகளை விட்டொழிக்க சமுதாயத்திற்கு வழிகாட்டினார்கள் என்றும் பிரதமர் கூறினார். பல தருணங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உருவான இதுபோன்ற துறவிகளின் பெயர்களை குறிப்பிட்டுப் பேசிய பிரதமர், அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம், இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் சமத்துவத்தை உறுதிப்படுத்தியவர் பாபாசாஹேப் அம்பேத்கர் என்றார்.

அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக கடுமையாக கருத்து தெரிவித்த பிரதமர், மக்களின் உணர்வுகளையும், துயரங்களையும் புரிந்து கொள்கின்ற சிறந்த ஆட்சியாளர்கள் பற்றி துறவி கபீரின் சிந்தனைகள் தெரிவிப்பதை நினைவு கூர்ந்தார். மக்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்துகின்ற அனைத்து சமூகக் கட்டமைப்புகளையும் துறவி கபீர் விமர்சனம் செய்ததாக அவர் கூறினார். இந்தப் பின்னணியில், சமூகத்தின் ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினருக்கு அதிகாரமளிக்க ஜன்தன், உஜ்வாலா திட்டங்கள், காப்பீட்டுத் திட்டங்கள், கழிப்பறை கட்டுமானம், பயனாளிகளுக்கு நேரடி பணப் பரிமாற்றம் போன்ற மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பிரதமர் எடுத்துரைத்தார். சாலைகள், ரயில் பாதைகள், கண்ணாடி இழை தகவல் தொடர்புகள் போன்ற பல்வேறு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் அதிகரித்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். வளர்ச்சியின் பயன்களை இந்தியாவில் அனைத்துப் பகுதிகளில் உள்ளவர்களும் பெறுவதை உறுதிசெய்ய மத்திய அரசு பாடுபட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

புதிய இந்தியா என்ற தொலைநோக்கு திட்டத்திற்கு நல்லதொரு வடிவம் கொடுக்க துறவி கபீரின் போதனைகள் நமக்கு உதவும் என்று அவர் நமபிக்கை தெரிவித்தார்.

------



(Release ID: 1537022) Visitor Counter : 218