பிரதமர் அலுவலகம்

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் கலந்துரையாடினார்

Posted On: 20 JUN 2018 1:10PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொது சேவை மையங்கள், 600 விவசாய அறிவியல் மையங்கள் காணொலி உரையாடலுக்காக இணைக்கப்பட்டிருந்தன. அரசின் திட்டங்கள் மூலம் பயனடைந்த பல்வேறு பயனாளிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடும் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக பிரதமர் மேற்கொண்ட 7-வது காணொலி காட்சி இதுவாகும்.

600-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் கலந்துரையாடுவது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக கூறிய பிரதமர்,  விவசாயிகள் நாட்டுக்கு உணவு வழங்குபவர்கள் என்று கூறினார். நாட்டின் உணவுப் பாதுகாப்பு குறித்த முழு பாராட்டும் விவசாயிகளையே சேரும் என்றும் அவர் கூறினார்.

விவசாயம் மற்றும் அதனை சார்ந்த இயற்கை விவசாயம், நீலப்புரட்சி, கால்நடை பராமரிப்பு, தோட்டக்கலை, மலர் விவசாயம் ஆகியவற்றில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நாட்டில் விவசாயிகளின் ஒட்டு மொத்த நலனே தமது தொலைநோக்கு என்று குறிப்பிட்ட பிரதமர், விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு அதிகபட்ச விலை வழங்குவதன் மூலம், 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது தொடர்பாக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று கூறினார். விவசாயிகள் சாகுபடிக்காக நிலத்தை தயார்படுத்துவதிலிருந்து உற்பத்திப் பொருட்களை விற்பது வரை அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதை உறுதி செய்ய இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார். விவசாயிகளுக்கு குறைந்த விலையில் ஈடு பொருட்களை வழங்குவது, விலைப் பொருட்களுக்கு நியாயமான விலை கொடுப்பது, உணவுப்  பொருட்களை் வீணாவதைத் தடுப்பது, விவசாயிகளுக்கு மாற்று வருமானம் கிடைப்பதை உறுதி செய்வது ஆகியவற்றை நடைமுறைப்படுத்த அரசு ஆர்வம் கொண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

விவசாயிகள் விதைப்பதிலிருந்து, தாங்கள் விளைவித்தப் பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்வது வரை, அவர்கள் பாரம்பரிய விவசாயத்தை முன்னேற்றுவதற்கு உதவ பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது என்பதை விவசாயிகள் புரிந்துக் கொள்ள வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்.

பண்ணைத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து தெரிவித்த திரு. நரேந்திர மோடி, கடந்த 48 மாதங்களில் விவசாயத் துறை  மிக அதிக வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறினார். இந்த காலக்கட்டத்தில் பால், பழங்கள். காய்கறிகள் உற்பத்தியில் சாதனை படைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

2014-லிருந்து 2019 வரையிலான காலக்கட்டத்தில் அரசு விவசாயத் துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை இரண்டு மடங்காக்கி உள்ளது. 2014-ம் ஆண்டு ரூ. 1,21,000 கோடியாக இருந்த ஒதுக்கீடு 5 ஆண்டுகளில் ரூ.2,12,000 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. அதே போல உணவுத் தானிய உற்பத்தியும் அதிகரித்துள்ளது. 2010 முதல் 2014-ம் ஆண்டு வரை சராசரியாக 255 மில்லியன் டன்னாக இருந்த உற்பத்தி 2017-18-ல் 279 மில்லியன் டன்னுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. நீலப்புரட்சி காரணமாக இந்த காலக்கட்டத்தில் பண்ணை மீன் வளர்ப்பில் 26 சதவீதம் உயர்வு காணப்பட்டது. இதே போல கால்நடை பராமரிப்பு மற்றும் பால் உற்பத்தியில் 24 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது.

விவசாயிகளுடன் கலந்துரையாடிய பிரதமர், விவசாயிகளின் ஒட்டுமொத்த நலனும் பாதுகாக்கப்படும் என்று கூறினார். மண் ஆரோக்கிய அட்டைகளை அரசு வழங்குகிறது, கிசான் கடன் அட்டைகள் மூலம் கடன் வழங்கப்படுகிறது, வேப்பெண்ணெய் கலந்த யூரியா உள்ளிட்ட தரமான உரங்கள் வழங்கப்படுகின்றன, ஃபசல்  பீமா யோஜனா மூலம் பயிர் காப்பீடு, பிரதமர் விவசாய பாசனத் திட்டம் மூலம் பாசனம் ஆகிய வசதிகள் விவசாயிகளுக்கு தற்போது கிடைக்கின்றன என்ற தகவலையும் அவர் தெரிவித்தார். பிரதமர் விவசாய பாசனத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் சுமார் 100 பாசனத் திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இதன் மூலம் சுமார் 29 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்களது பொருட்களை சரியான விலைக்கு விற்பனை செய்ய இ-நாம் என்னும் ஆன்லைன் தளத்தை அரசு தொடங்கி உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இ-நாம் திட்டத்தின் கீழ் 585-க்கும் மேற்பட்ட ஒழுங்குமுறை மொத்த விலைச் சந்தைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அரசு சுமார் 22 லட்சம் ஹெக்டேர் நிலத்தை இயற்கை விவசாயத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது. 2013-14-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 7 லட்சம் ஹெக்டேராக இருந்தது. வடகிழக்கு பிராந்தியத்தை இயற்கை விவசாய மையமாக மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

கலந்துரையாடலின் போது, விவசாய உற்பத்திக் குழு, விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு ஆகியவற்றை விவசாயிகள் உருவாக்கி தங்களது வலிமையை பறைசாற்றியிருப்பதை அறிந்து பிரதமர் மகிழ்ச்சி வெளியிட்டார்.  இந்த அமைப்புகள் மூலம் இடுபொருட்களை குறைந்த விலைக்கு பெறவும், விளைப் பொருட்களை அதிக விலைக்கு சந்தைப்படுத்தவும் வழிவகை ஏற்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 517 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடையே கூட்டுறவை ஊக்கப்படுத்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமருடன் கலந்துரையாடிய பல்வேறு விவசாயத் திட்டங்களின் பயனாளிகள், உற்பத்தியை பெருக்குவதற்கு அரசின் பல்வேறு திட்டங்கள் எவ்வாறு உதவின என்பதை விளக்கினார்கள். மண் ஆரோக்கிய அட்டையின் முக்கியத்துவத்தையும் பயனாளிகள் தெரிவித்தனர். அத்துடன் கூட்டுறவு இயக்கம் தொடர்பான தங்களது அனுபவங்களையும் பயனாளிகள் பகிர்ந்து கொண்டனர்.



(Release ID: 1536067) Visitor Counter : 342