மத்திய அமைச்சரவை

2018 அணைகள் பாதுகாப்பு மசோதாவை சட்டமாக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 13 JUN 2018 6:20PM by PIB Chennai

2018  அணைகள் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும்  திட்டத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பயன்கள்:

  நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், ஒரே சீரான அணை பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க இந்த மசோதா உதவும். அணைகளிலிருந்து பயன்களை பெறும்வகையில், அவற்றின் பாதுகாப்பை இது உறுதி செய்கிறது. இந்த மசோதா மனித உயிர்கள், கால்நடைகள், சொத்துக்கள் ஆகியவற்றை பாதுகாக்கவும் உதவும்.

 இந்தியாவின் முன்னணி நிபுணர்கள் மற்றும் சர்வதேச நிபுணர்களுடன் விரிவான ஆலோசனைகளுக்கு பிறகு, இந்த மசோதாவின் வரைவு இறுதி செய்யப்பட்டது.

விவரங்கள்:

  • நாட்டில் உள்ள அனைத்து குறிப்பிட்ட அணைகளிலும் அவை பாதுகாப்பாக செயல்படுவதை உறுதி செய்யும் உரிய கண்காணிப்பு, ஆய்வு, நடைமுறை, பராமரிப்பு ஆகியவற்றை மேற்கொள்ள இந்த மசோதா வகைசெய்கிறது.
  •  தேசிய அணைகள் பாதுகாப்புக் குழுவை அமைப்பதற்கு இந்த மசோதா வகை செய்கிறது. இந்தக் குழு அணை பாதுகாப்பு கொள்கைகளை உருவாக்கி, இதற்கென தேவைப்படும் வரன்முறைகளை பரிந்துரை செய்யும்.
  • தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையம் என்கிற கட்டுப்பாட்டு அமைப்பை ஏற்படுத்தவும் மசோதா வகை செய்கிறது. இந்த ஆணையம், கொள்கை, நாட்டின் அணைகள் பாதுகாப்பு குறித்த நெறிமுறைகள், தரங்கள் ஆகியவற்றின்  அமலாக்கத்தை மேற்கொள்ளும்.
  • மாநில அரசுகள், மாநில அணை பாதுகாப்புக் குழுக்களை அமைத்து செயல்படவும் மசோதா வகைசெய்கிறது.

தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையம்:

  • இந்த ஆணையம் மாநில அணைப் பாதுகாப்பு அமைப்புகளுடன் தொடர்புகளை பராமரிக்கும். அணைகள் மீது உரிமை உடையவர்களுடன் தொடர்புகொண்டு அணைப் பாதுகாப்பு தொடர்பான தகவல் மற்றும் நடைமுறையை தரப்படுத்தும்.
  • மாநிலங்கள் மற்றும் மாநில அணை  பாதுகாப்பு அமைப்புகளுக்கு தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை உதவிகளை வழங்கும்.
  • தேசிய நிலையில் அனைத்து அணைகள் சார்ந்த தகவல் கட்டமைப்பை பராமரிக்கும். பெரிய அணைகளில் ஏற்படும் குறைபாடுகளையும் ஆவணப்படுத்தி வைக்கும்.
  • அணைகளின் பெரிய குறைபாடுகளுக்கான காரணங்களை ஆராயும்.
  • வழக்கமான ஆய்வுக்கான தரமான நெறிமுறைகள், சரிபார்ப்பு பட்டியல்கள் ஆகியவற்றை வெளியிட்டு அவ்வப்போது மேம்படுத்தும். அணைகளின் விரிவான ஆய்வுகள் பற்றியும், இந்த ஆணையம் தகவல் சேகரித்து வெளியிடும்.
  • புதிய அணைகளின் ஆய்வு, வடிவமைப்பு, கட்டுமானப் பணிகளை ஒப்படைக்க தகுதியுள்ள நிறுவனங்களுக்கு அங்கீகாரத்தையும், தரங்களையும் இந்த ஆணையம் வழங்கும்.
  • இரு மாநிலங்களின் அணைகள் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையே தீர்க்கப்படாமல் இருக்கும் விஷயங்கள் குறித்து ஆணையம் ஆராயும். அணைள் மீது உரிமை உடையவர்கள் தொடர்பான நிலுவையில் இருக்கும் பிரச்னைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளும்.
  • மேலும், ஒரு மாநிலத்தின் அணைகள் மற்றொரு மாநிலத்தின் பகுதியில் அமைந்திருப்பது போன்ற  சில வழக்குகளில் தேசிய ஆணையம் மாநில அணை பாதுகாப்பு அமைப்பின் கடமை பொறுப்புகளையும் மேற்கொண்டு, மாநிலங்களுக்கு இடையிலான பிணக்குகளை தவிர்க்க உதவும்.  

மாநில அணை பாதுகாப்புக் குழு:

   மாநிலத்தில் உள்ள அனைத்து குறிப்பிட்ட அணைகளின் சரியான கண்காணிப்பு, ஆய்வு, நடைமுறை, பராமரிப்பு ஆகியவற்றை இந்தக் குழு உறுதிசெய்யும். பாதுகாப்பான செயல்பாட்டையும் அது உறுதிசெய்யும். ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில அணை பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தவேண்டும் என்று இந்தச் சட்டம்  வலியுறுத்துகிறது. இந்த அமைப்பில் அணை பாதுகாப்பு துறை சார்ந்த அதிகாரிகள் இடம்பெற்றிருப்பார்கள். குறிப்பாக, அணை வடிவமைப்பு, நீரியியல் -  எந்திரவியல் பொறியியல், நீரியியல், புவி-நுட்ப ஆய்வு, கருவிகள் மற்றும் அணை மறுசீரமைப்பு ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகள் இடம்பெற்றிருப்பார்கள்.

பின்னணி:

  இந்தியாவில் 5200 க்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன. சுமார் 450 அணைகள் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. மேலும் ஆயிரக்கணக்கான நடுத்தர மற்றும் சிறிய அணைகள் உள்ளன. இந்தியாவில் அணை பாதுகாப்பு குறித்த சட்டப்படியான அமைப்பு ரீதியிலான நிறுவனங்கள் இல்லாததால், அணை பாதுகாப்பு கவலையளிக்கும் பிரச்னையாக உள்ளது. பாதுகாப்பற்ற அணைகள் ஆபத்தானவை. அணை உடைப்பினால் பேரிடர்கள் ஏற்பட்டு உயிரிழப்பும், சொத்து இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது.

  2018 அணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் ஆய்வு, அவசர கால செயல் திட்டம், விரிவான அணை பாதுகாப்பு ஆய்வு, போதுமான பழுதுப்பார்ப்பு மற்றும் பராமரிப்புக்கான நிதி, கருவிகள் மற்றும் பாதுகாப்பு கையேடுகள் உள்ளிட்ட அணை பாதுகாப்பு சம்பந்தப்பட்ட  பிரச்னைகளை தீர்க்க வகைசெய்யும்.  அணை பாதுகாப்பு பொறுப்பினை அணை உரிமையாளர்மீது இந்தச் சட்டம் சுமத்துகிறது. சில செயல்களை செய்வது அல்லது செய்ய தவறுவது ஆகியவற்றுக்கான தண்டனை பிரிவுகளும் சட்டத்தில் அடங்கியுள்ளன.

==============



(Release ID: 1535389) Visitor Counter : 737