பிரதமர் அலுவலகம்

நாடு முழுதும் சுகாதாரத் திட்டங்களில் பலனடைந்தோருடன் பெற்றோருடன் காணொலி மூலம் பிரதமர் உரையாடல்

Posted On: 07 JUN 2018 12:51PM by PIB Chennai

பிரதம மந்திரி இந்திய மக்கள் மருத்துவத் திட்டம் (Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojna) உள்பட பல்வேறு சுகாதாரத் திட்டங்களின் மூலம் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பலனடைந்தவர்களுடன் பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி காணொலிக் காட்சி (விடியோ) மூலம் உரையாடினார். இவ்வாறு விடியோ மூலம் பிரதமர் நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களால் பலனடைந்த மக்களுடன் உரையாடுவது ஐந்தாவது முறையாகும்.

மக்கள் நல்வாழ்வு, சுகாதாரம் ஆகியவற்றின் அவசியம் குறித்து விளக்கிய பிரதமர், எல்லா வெற்றிக்கும் அடிப்படையானதும் சொத்தாகவும் இருப்பது சுகாதாரம்தான் என்றார். நாட்டின் 125 கோடி குடிமக்களும் சுகாதாரமாக வாழ்ந்தால்தான் இந்தியா சுகாதாராமாகவும் மகத்தானதாகவும் திகழ முடியும் என்றும் அவர் கூறினார்.

இந்தக் கலந்துரையாடலின்போது பிரதமர் திரு. மோடி பேசியதாவது:

“சுகாதாரக் குறைவு ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினருக்கு மிகுந்த பொருட்செலவை  ஏற்படுத்துவது மட்டுமின்றி, சமூக  பொருளாதாரத்துக்கும் ஊறு ஏற்படுத்துகிறது. அதனால்தான் ஒவ்வொரு குடிமகனுக்கும் மலிவான நல்ல சுகாதார நலத்தை அளிப்பதற்கு மத்திய அரசு பெருமுயற்சி மேற்கொண்டு வருகிறது. அதனால்தான் மத்திய அரசு பிரதம மந்திரி இந்திய மக்கள் மருத்துவத் திட்டத்தைக் (Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojna) அமல்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் ஏழைகள், நடுத்தர வகுப்பினருக்கும் கீழுள்ளவர்கள், நடுத்தர வகுப்பினர் ஆகிய பிரிவினர் குறைந்த செலவில் தரமான மருத்து வசதிகளைப் பெற்று, நிதிச் சுமையைத் தவிர்க்கலாம்.

மத்திய அரசு நாடு முழுவதும் 3,600 மக்கள் மருத்துவ மையங்களைத் (Jan Aushadhi Kendras) தொடங்கியுள்ளது. இந்த இடங்களில் மலிவான விலையில் 700 வகையான மருந்துகள் கிடைக்கும். இங்கு கிடைக்கும் மருந்துகள் வெளிச்சந்தை விலையைவிட 50 முதல் 90 சதவீதம் வரை குறைவுதான் இருக்கும். விரைவில் இந்த மக்கள் மருத்துவ மையங்களின் எண்ணிக்கையை 5 ஆயிரமாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சைக்காக மக்கள் முன்பெல்லாம் தங்களது சொத்துகளையே விற்கவோ, அடமானம் வைக்கவோ வேண்டிய நிலை இருந்தது. ஆனால், ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் உதவவேண்டும் என்பதற்காக மருத்துவச் செலவுகளை மத்திய அரசு குறைத்துவிட்டது. இதய சிகிச்சைக்கு ரூ. 2 லட்சம் ஆகும். தற்போது ரூ. 29 ஆயிரத்திலேயே இதய சிகிச்சை செய்து கொள்ளலாம். அந்த அளவுக்குக் குறைந்துவிட்டது.

முழங்கால் மாற்று சிகிச்சைக்கான செலவு 60 முதல் 70 சசதவீதம் வரையில் குறைந்துவிட்டது. அதாவது இதற்கான செலவு ரூ. 2.5 லட்சத்திலிருந்து ரூ. 70 ஆயிரம் முதல் ரூ. 80 ஆயிரம் வரை குறைந்துவிட்டது. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 1.5 லட்சம் பேருக்கு முழங்கால் அறுவைச் சிகிச்சை நடத்தப்படுவதாகத் தெரிய வந்துள்ளது. இதற்கான சிகிச்சைச் செலவு குறைக்கப்பட்டதால், நாடுமுழுவதும் பொதுமக்கள் மொத்தம் சுமார் ரூ. 1,500 கோடி அளவுக்கு மிச்சப்படுத்தியுள்ளனர்.

பிரதம மந்திரி தேசிய டயாலிசிஸ் சிகிச்சைத் திட்டத்தின் (Pradhan Mantri Rashtriya Dialysis Program) மூலம் நாடு முழுவதும் 500 மாவட்டங்களுக்கு மேல் இரண்டு லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு மொத்தம் 22 லட்சம் முறை டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளன. “இந்திர தனுஷ்” (Indradhanush) இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் 528 மாவட்டங்களில் மொத்தம் 3.15 கோடி குழந்தைகளுக்கும், 80 லட்சம் கருவுற்ற பெண்களுக்கும் நோய்த்தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவை தவிர, கூடுதலாக மருத்துவர்கள், அதிகமான படுக்கைகள், அதிகமான மருத்துவமனைகள் இருப்பதை உறுதி செய்வதற்காக அரசு 92 மருத்துவக் கல்லூரிகளைத் திறந்துள்ளது. மருத்துவப் படிப்பில் சேருவதற்கான எண்ணிக்கையை 15 ஆயிரமாக உயர்த்தியுள்ளது.

மருத்துவசதி குறைந்த செலவிலும் தரமாகவும் ஏழைகளுக்குக் கிடைக்கும் வகையில் மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் (Ayushman Bharat) திட்டத்தைத் தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் 10 கோடி பேர் பலனடைவர். ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 5 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Mission) இந்தியாவை ஆரோக்கியமான நாடாக்கி வருவதில் பெரும் பங்களிப்பை செலுத்துகிறது. தூய்மை இந்தியா இயக்கத்தின் (Swachh Bharat Abhiyan) காரணமாக நாட்டில் மூன்றரை லட்சம் கிராமங்களில் திறந்தவெளிக் கழிப்பிடம் ஒழிக்கப்பட்டுள்ளது. சுகாதார வசதி 38 சதவீதம் அதிகரித்துள்ளது”

இவ்வாறு பிரதமர் பேசினார்.

பிரதமருடன் உரையாடிய சிலர், பிரதம மந்திரி இந்திய மக்கள் மருத்துவத் திட்டம் (Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojna) மருத்துவச் செலவு, மருந்துகளின் செலவு ஆகியவற்றைப் பெருமளவுக்குக் குறைத்துள்ளதைக் குறிப்பிட்டனர். அத்துடன் இதய சிகிச்சை, முழங்கால் மாற்று அறுவைச் சிகிச்சை ஆகியவற்றுக்கு ஆகும் செலவுகளும் குறைந்துள்ளதையும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அப்போது பிரதமர் பொதுமக்கள் யோகப் பயிற்சியை வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் அதன் மூலம் வலுவான, ஆரோக்கியமான நாட்டை உருவாக்க உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 

*****

 



(Release ID: 1534808) Visitor Counter : 219