மத்திய அமைச்சரவை

பொலிவுறு நகர மேம்பாடு குறித்த இந்திய டென்மார்க் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 06 JUN 2018 3:27PM by PIB Chennai

பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் நீடித்த மற்றும் பொலிவுறு நகர அபிவிருத்திக்கான தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கு வகை செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கடந்த ஏப்ரல் மாதம் கையெழுத்தானது குறித்து பிரதமரிடம் விவரிக்கப்பட்டது.

விவரம்:

நீடித்த மற்றும் பொலிவுறு நகர மேம்பாடு குறித்து இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். இந்த இரு தரப்பு ஒத்துழைப்பின் கீழ் இரு நாடுகளும் அறிவாற்றல், நிறுவன அளவிலான ஒத்துழைப்பு, ஆய்வு மற்றும் அபிவிருத்தி, வணிக உறவுகள் ஆகியவற்றைப் பரிமாறிக் கொள்வர். அத்துடன், பொலிவுறு நகரங்கள் எதிர்கொள்ள வேண்டிய தீர்வுகள், வாழும் திறன், ஒருங்கிணைந்த நகர்ப்புறத் திட்டம், மறு அபிவிருத்தி மற்றும் நிலப் பயன்பாடு, ஒருங்கிணைந்த திடக் கழிவு மேலாண்மை, கழிவிலிருந்து மின்சாரம் எடுத்தல், நீடித்த போக்குவரத்து நடைமுறைகள், குடிநீர், சுகாதார வசதிகள், மின்சக்தி ஆற்றல், வளங்களை உருவாக்குதல் மற்றும் இதர தொடர்புடைய துறைகளில் பரஸ்பரம் இணக்கத்துடன் செயல்படுவதும் இந்த ஒத்துழைப்பில் இடம்பெறும் அம்சங்களாகும்.

செயல்படுத்துவதற்கான உத்தி:

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்துவதற்காக கூட்டு பணிக் குழு (Joint Working Group - JWG) அமைக்கப்படும். இருதரப்பினரின் வசதிக்கு ஏற்ப இக்குழு அவ்வப்போது கூடி விவாதிக்கும். அந்தக் கூட்டம் ஒருமுறை இந்தியாவிலும் மறு முறை டென்மார்க்கிலும் நடைபெறும்.

முக்கிய விளைவு

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையில் நீடிப்புத் தன்மை, பொலிவுறு நகர்ப்புற மேம்பாடு ஆகியவை குறித்த பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்தும்.

பலன்கள்

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் புதிதாக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் கழிவிலிருந்து மின் உற்பத்தி செய்தல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த திடக் கழிவு மேலாண்மை, நீடித்த போக்குவரத்து நடைமுறைகள், குடிநீர், சுகாதார வசதிகள், மின்சக்தி திறன், வளங்களை அபிவிருத்தி செய்தல் ஆகியவற்றுக்கும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்யும்.

 

*****



(Release ID: 1534753) Visitor Counter : 159