பிரதமர் அலுவலகம்

வீட்டுவசதித் திட்டத்தின் பயனாளிகளுடன் விடியோ வழியாகப் பிரதமர் உரையாடல்

Posted On: 05 JUN 2018 2:33PM by PIB Chennai

பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் (Pradhan Mantri Awas Yojana) மூலம் பலன் பெற்ற பயனாளிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி விடியோ மூலமாக உரையாடினார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் பயன்பெற்றவர்களுடன் பாரதப் பிரதமர் விடியோ மூலம் உரையாடுவது இது மூன்றாவது முறையாகும்.

பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் மூலம் பலன்பெற்றவர்களுடன் விடியோ மூலம் உரையாடுவது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறிய பிரதமர் திரு. மோடி, “இத்தகைய கலந்துரையாடல் இத்திட்டத்தின் பல்வேறு அம்சங்களைப் புரிந்து கொள்ளப் பெரிதும் உதவுகிறது. அத்துடன், அந்தந்தப் பகுதியின் மேம்பாடு குறித்தும் அறிந்துகொள்ள முடிகிறது” என்றார்.

அவர் மேலும் பேசியதாவது:

“பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டம் என்பது செங்கல் சிமெண்ட் கொண்டு கட்டடத்தை எழுப்புவதல்ல. மக்களுக்கு நல்ல தரமான வாழ்க்கையை அமைத்துத் தருவதும் அவர்களது கனவுகள் நனவாக வழியமைப்பதும் ஆகும்.

எல்லோருக்கும் வீட்டு வசதி கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. 2022ம் ஆண்டு இந்திய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு விழாவின்போது, நாட்டில் உள்ள அனைவருக்கும் வீடு கிடைப்பதை உறுதி செய்வதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் மொத்தம் 3 கோடி வீடுகளையும் நகர்ப்புறங்களில் மொத்தம் 1 கோடி வீடுகளையும் கட்டித் தருவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதுவரை நகர்ப்புறங்களில் 47 லட்சம் வீடுகளைக் கட்டித் தருவதற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது முந்தைய அரசு 10 ஆண்டுகளில் அளித்த ஒப்புதல் அளவை விட நான்கு மடங்கு அதிகமாகும். அதைப் போல் கிராமப்புறங்களில் முந்தைய அரசு 25 லட்சம் வீடுகளைக் கட்டித் தருவதற்கு ஒப்புதல் அளித்தது. இந்த அரசு நான்கு ஆண்டுகளில் 1 கோடி வீடுகளைக் கட்டித் தருகிறது.

இவை மட்டுமின்றி, வீடு கட்டுவதற்கு 18 மாதங்கள் என்ற நிலையை மாற்றிய இந்த அரசு 12 மாதங்களிலயே வீடுகளைப் பூர்த்தி செய்து, நேரத்தையும் மிச்சப்படுத்தி வருகிறது.

பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தில் (PMAY) சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. ஒரு வீட்டின் பரப்பு 20 சதுர மீட்டராக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதை இந்த அரசு மாற்றி, 25 சதுர மீட்டர் பரப்பாக அதிகரித்துள்ளது. மேலும், அதற்கான நிதியுதவி முன்பு ரூ. 70,000 முதல் ரூ. 75,000 ஆக இருந்தது. இந்த அரசு அதை ரூ. 1,25,000 ஆக அதிகரித்துள்ளது.

பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டம் (Pradhan Mantri Awas Yojana) குடிமக்களுக்குக் கண்ணியமான வாழ்வை அளிப்பதாகும். இத்திட்டத்தின் கீழ் மகளிர், மாற்றுத் திறனாளிகள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோர் மீது மிகுந்த கவனம் கொள்ளப்படுகிறது.

இத்திட்டம் எல்லோருக்கும் வேலைவாய்ப்பு அளிக்க வகை செய்கிறது. இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக திறன் மேம்பாட்டில் அரசு கவனம் செலுத்துகிறது. அதன் மூலம் தரமான வீடுகள் விரைவாகக் கட்டித் தருவதில் உறுதி பூண்டுள்ளது. இதற்காக ஒரு லட்சம் கட்டுமானப் பணியாளர்களுக்கு உரிய  பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இது தவிர, பல மாநிலங்களில் சித்தாள்களுக்கு உரிய பயிற்சியையும் அரசு அளித்து வருகிறது. இதன் மூலம் பெண்களுக்கான அதிகாரமளித்தலுக்கு வழியேற்பட்டுள்ளது” என்று பிரதமர் பேசினார்.

இந்த உரையாடலின்போது, பங்கேற்ற பல பலனாளிகள் வீடுகள் பெற்றதற்காகத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வீடுகள் தங்களுக்குக் கனவாக இருந்தன என்று அவர்கள் பிரதமரிடம் கூறினர்.

அத்துடன், தங்களது வாழ்க்கையை எப்படி புரட்டிப் போட்டு, தரமான வாழ்க்கையை அளித்துள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

*****



(Release ID: 1534400) Visitor Counter : 320