பிரதமர் அலுவலகம்

49-ஆவது ஆளுநர்கள் மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் உரை

Posted On: 04 JUN 2018 1:20PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த 49-ஆவது ஆளுநர்களின் மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

மத்திய அரசின் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளின் அதிகபட்ச பலனை மக்கள் அடையும் வகையில், ஆளுநர்கள் தங்களது வாழ்க்கையில் பெற்ற  பலதரப்பட்ட அனுபவங்களை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறித்து பிரதமர் விளக்கினார். கூட்டாட்சி கட்டமைப்பு மற்றும் நாட்டின் அரசியல் சாசன வரம்புக்கு உட்பட்டு ஆளுநர் முக்கிய பங்கு ஆற்ற முடியும் என்று அவர் தெரிவித்தார்.

பழங்குடியின வகுப்பினர் அதிகமாக வசிக்கும் மாநிலங்களைச் சேர்ந்த ஆளுநர்கள், பழங்குடியின வகுப்பினருக்கு கல்வி, விளையாட்டு, நிதிப் பயன்பாடு ஆகியவற்றில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளின் பயன்களை உறுதி செய்யும் வகையில் உதவலாம் என பிரதமர் கூறினார். விடுதலைப் போராட்டத்தில் பழங்குடியின வகுப்பினர் முக்கிய பங்காற்றியதாகக் கூறிய அவர், டிஜிட்டல் அருங்காட்சியகங்கள் போன்ற வழிமுறைகள் மூலம் அவர்களது தியாகத்திற்கு அங்கீகாரம் கிடைக்கச் செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினார்.

ஆளுநர்கள்  பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாகவும் உள்ளனர் என்று பிரதமர் குறிப்பிட்டார். ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், யோகா பயிற்சியின் முக்கியத்துவத்தை இளைஞர்கள் அறியும் வகையில், மிகப்பெறும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வாய்ப்பாக அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதுபோல, மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதில் பல்கலைக்கழகங்களில் முக்கிய பங்காற்றுவதை உறுதி செய்ய வேண்டுமென்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

தேசிய ஊட்டச்சத்து இயக்கம், கிராமங்களுக்கு மின்சார வசதி, வெகுவேகமாக முன்னேற முயலும் மாவட்டங்களின் மேம்பாட்டு அளவுகோல்கள் போன்ற முக்கிய வளர்ச்சித்திட்டங்கள் குறித்து பிரதமர் குறிப்பிட்டார். அண்மையில் மின்சார வசதி பெற்ற கிராமங்களுக்கு ஆளுநர்கள் சென்று, மின்சாரத்தின் பயன்களை அங்குள்ள மக்கள் எவ்வாறு பெற்று மகிழ்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம் என பிரதமர் யோசனை தெரிவித்தார்.

அண்மையில் ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் கிராம ஸ்வராஜ் அபியான் மூலம் அரசின் ஏழு முக்கிய திட்டங்கள் 16,000த்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். ஜன் பாஹிதாரி மூலம் ஏழு பிரச்சினைகளிலிருந்து இந்த கிராமங்கள் விடுவிக்கப்பட்டதாக அவர் கூறினார். ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் இந்தத் திட்டம் மேலும் 65,000 கிராமங்களில் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற இலக்குடன் விரிவாக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

50-ஆவது ஆளுநர்கள் மாநாட்டை  அடுத்த ஆண்டு முன்னதாகவே நடத்த உடனடியாக திட்டமிடவேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார். இந்த வருடாந்திர நிகழ்ச்சியை மேலும் அதிக செயல்திறனுடன் நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

                                     ----



(Release ID: 1534251) Visitor Counter : 122