மத்திய அமைச்சரவை

துருக்கியிலிருந்து கசகசா இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவாகவும், வெளிப்படையாகவும் மேற்கொள்வதை உறுதி செய்ய, இந்தியா-துருக்கி இடையே கசகசா வர்த்தகம் செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 23 MAY 2018 3:53PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், துருக்கியிலிருந்து கசகசா இறக்குமதி செய்வதில், இந்தியா-துருக்கி இடையே கசகசா வர்த்தகத்தில், விரைவான – வெளிப்படையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வகைசெய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

விபரம்:

இந்த ஒப்பந்தம் கீழ்கண்ட அம்சங்களுக்கு வழிவகுக்கிறது-

  1. துருக்கியிலிருந்து இந்தியாவுக்கு கசகசா ஏற்றுமதி செய்வதை முறைப்படுத்த, துருக்கி தானிய வாரியம் ஆன்லைன் முறையை கையாளும். ஏற்றுமதி நிறுவனங்கள் ஆன்லைன் அமைப்பில் உறுப்பினராவதற்கு ஏஜியான் ஏற்றுமதியாளர் சங்கத்தின் மூலம் (சட்டத்தின்படி இந்த அமைப்புக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது) துருக்கி தானிய வாரியத்திற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
  2. ஆண்டுதோறும், துருக்கியிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் கசகசாவின் அளவை, துருக்கியில் விளையும் கசகசாவின் அளவைப் பொறுத்து அந்நாட்டு அரசுடன் ஆலோசித்து இந்திய அரசு முடிவு செய்யும். முந்தைய ஆண்டுகளில் விளைந்த கசகசாவின் அளவு மற்றும் துருக்கியின் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதித் தேவைகளை கருத்தில்கொண்டு இந்த முடிவு மேற்கொள்ளப்படும்.
  3. ஏற்றுமதி நிறுவனங்கள் துருக்கிய தானிய வாரியத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். துருக்கி ஏற்றுமதி நிறுவனங்கள் இந்திய இறக்குமதியாளருடன் மேற்கொள்ளும் ஒவ்வொரு விற்பனை ஒப்பந்தத்தையும் துருக்கி தானிய வாரியத்தில் பதிவு செய்து,  ஆன்லைன் முறையில் தெரிவிக்க வேண்டும். பத்தி 2-ல் தெரிவிக்கப்பட்டுள்ள அளவிற்கு அதிகமான விற்பனை ஒப்பந்தங்களை துருக்கி தானிய வாரியம் பதிவு செய்யக்கூடாது என்பது அதன் கடமைகளில் ஒன்றாகும்.
  4. பத்தி 2-ல் குறிப்பிட்டுள்ள அளவை கருத்தில் கொண்டு, ஆண்டுதோறும் இருதரப்பினரும் ஆலோசனை நடத்தி, ஒவ்வொரு பயிர் ஆண்டுக்கும் ஏற்ப, இந்திய இறக்குமதியாளர்களால், இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் கசகசாவின் அளவைத் தீர்மானிக்க வேண்டும்.

 

  1. துருக்கி தானிய வாரியத்தில் பதிவு செய்யப்படும் விற்பனை உடன்படிக்கைகளை, துருக்கி தானிய வாரியத்தால் பராமரிக்கப்படும் இணையதளம் மூலம் அறிந்து, மத்திய நிதியமைச்சகத்தால் வகுக்கப்பட்ட பதிவு விதிமுறைகளுக்கு ஏற்ப, மத்திய போதைப் பொருள் தடுப்பு அமைப்பு பதிவு செய்யும். இந்தியாவின் மத்திய போதைப் பொருள் தடுப்பு அமைப்பில் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தங்களுக்கு மட்டுமே, துருக்கி தானிய வாரியம் கசகசா ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கும்.
  2. விற்பனை உடன்படிக்கைகளை தாக்கல் செய்து, இதர நடைமுறைகளை பூர்த்தி செய்யும் ஏற்றுமதியாளர்களுக்கு துருக்கி தானிய வாரியம் கசகசா ஏற்றுமதி செய்வதற்கான சட்டரீதியாக சான்றிதழ்களை வழங்கும்.

துருக்கியிலிருந்து கசகசா இறக்குமதி செய்வதற்கான முன்அனுமதி மற்றும் ஏற்றுமதி அளவுக்கான ஒதுக்கீடு நடவடிக்கைகளை விரைவாகவும், வெளிப்படையாகவும் மேற்கொள்வதை இந்த ஒப்பந்தம் ஊக்குவிக்கும். இந்த நடைமுறை மூலம், இறக்குமதி ஒப்பந்தங்களின் உண்மைத் தன்மை எளிதில் உறுதி செய்யப்பட்டு, இறக்குமதியில் ஏற்படும் தாமதங்கள் தவிர்க்கப்படும்.

இந்தியாவின் உள்நாட்டுச் சந்தையில் கசகசா தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதுடன், கசகசா பயன்படுத்தும் இந்திய நுகர்வோருக்கு பலன் அளிப்பதையும் இந்த ஒப்பந்தம் உறுதி செய்யும்.

பின்னணி:

     ஒரு வழக்கு காரணமாக, துருக்கியிலிருந்து கசகசா இறக்குமதி செய்வது தடைபட்டதால், இந்தியாவின் உள்நாட்டுச் சந்தையில் கசாகசா விலை கடுமையாக உயர்ந்ததுடன், இறக்குமதியாளர்கள் பதுக்கலில் ஈடுபடுவதற்கும் வழிவகுத்தது.     நீதிமன்றம் பிறப்பித்த பல்வேறு தடை உத்தரவுகள் மற்றும் வழக்கு  அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டதன் காரணமாக, இந்தியாவில் கசகசா கிடைப்பது குறைந்து, நுகர்வோருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. இதுபோன்ற  சட்ட சிக்கல்கள், விலையேற்றம் மற்றும் பதுக்கலை தவிர்ப்பதற்கான மாற்று நடைமுறைகளை கடைபிடிக்க இந்தியா, துருக்கி அரசுகளிடையே செய்துகொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம், உண்மையான புள்ளிவிபரங்களை பரிமாறிக் கொள்ளவும், துருக்கியில் சட்டரீதியாக, நேர்மையாக உற்பத்தி செய்யப்பட்ட கசகசாவை போதிய அளவிற்கு இறக்குமதி செய்யவும் வழிவகை செய்கிறது.

-------



(Release ID: 1533247) Visitor Counter : 143