பிரதமர் அலுவலகம்

இந்தியா- ரஷ்யா இடையே சாதாரண முறையிலான பேச்சுவார்த்தை

Posted On: 21 MAY 2018 10:16PM by PIB Chennai

ரஷ்யக் கூட்டமைப்பின் சோச்சி நகரில் 2018  மே 21 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர்  முதன் முறையாக சாதாரண முறையில் சந்தித்துப் பேச்சு நடத்தி உள்ளனர்இந்த சந்திப்பு இரு தலைவர்களுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், சர்வதேச மற்றும் பிராந்திய அளவிலான பிரச்சினைகள் குறி்த்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்ததுடன், இந்தியா-ரஷ்யா இடையேயான பாரம்பரிய முறையில் உயர்மட்ட அளவிலான அரசியல் கருத்துப் பரிமாற்றத்திற்கும்  வழி வகுத்தது.

     இந்தியா–ரஷ்யா இடையிலான நீடித்த, சிறப்பு வாய்ந்த முன்னுரிமை அடிப்படையிலான ஒத்துழைப்பு, சர்வதேச அமைதி மற்றும் நிலைத்தத் தன்மைக்கு முக்கியக் காரணமாக திகழ்கிறது என்பதை இருதலைவர்களும் ஒப்புக்கொண்டனர். வெளிப்படையான, சமத்துவ உலக நிலைப்பாட்டிற்காக இந்தியாவும்-ரஷ்யாவும் முக்கிய பங்காற்ற வேண்டியதன் அவசியம் குறித்த கருத்துக்களையும் அவர்கள் பரிமாறிக் கொண்டனர். இந்த விஷயத்தில், சர்வதேச அமைதி  மற்றும் நிலைத்தத் தன்மையை பராமரிப்பதில் சக்தி வாய்ந்த நாடுகள் என்ற அடிப்படையில், தத்தமது பங்களிப்புகளை இரு தலைவர்களும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டனர்.

   முக்கியமான சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இருதலைவர்களும் விரிவாக விவாதித்தனர். அத்துடன் பன்முகப் பரிமாணத்துடன் கூடிய உலக நிலைப்பாட்டை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். மேலும் இந்தோபசிபிக் பிராந்திய விவகாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த ஆலோசனை மற்றும் ஒத்துழைப்புகளை  தீவிரப்படுத்தவும் அவர்கள் முடிவு செய்தனர். ஐக்கிய நாடுகள் சபை, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ் மற்றும் ஜி-20 போன்ற பன்னாட்டு  அமைப்புகளில் தொடர்ந்து ஒருங்கிணைந்து பணியாற்றவும், பிரதமர் மோடியும், அதிபர் புதினும் தீர்மானித்தனர். 

    தீவிரவாதம் மற்றும் தீவிரவாதமயமாக்கல் குறித்து இரு தலைவர்களும் கவலை தெரிவித்ததுடன், தீவிரவாதத்தை அது எந்த வடிவத்தில் வெளிப்பட்டாலும் அதனை எதிர்த்துப் போராடவும் உறுதியேற்றனர். ஆப்கானிஸ்தானில், தீவிரவாத அச்சுறுத்தல் இல்லாத சூழலை ஏற்படுத்தி, அமைதி மற்றும் நிலைத்தத் தன்மையை  ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை இரு தலைவர்களும் அங்கீகரித்ததுடன், இந்த நோக்கத்தை நிறைவேற்ற ஒருங்கிணைந்து பாடுபடவும் ஒப்புக்கொண்டனர்.

      தேசிய வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் முன்னுரிமைப் பணிகள் குறித்தும் இரு தலைவர்களும் விரிவாகக் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். இந்தியா-ரஷ்யா இடையிலான நட்புறவின் குணாதிசயம், ஆழமான நம்பிக்கை, பரஸ்பர மரியாதை, மற்றும் நல்லெண்ணம் குறித்தும் அவர்கள் மனநிறைவு தெரிவித்தனர்.   செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் 2017 ஜுனில் நடைபெற்ற இருதரப்பு உச்சிமாநாட்டிற்கு பிறகு நிலவும் சாதகமான சூழல் குறித்து திருப்தி தெரிவித்த இரு தலைவர்களும், இந்த ஆண்டு பிற்பகுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள அடுத்த உச்சிமாநாட்டிற்கான உறுதியான அம்சங்கள் குறித்து ஆராயுமாறும் தத்தமது நாட்டு அதிகாரிகளை அறிவுறுத்தினர்.

   வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் சிறப்பான ஒத்துழைப்புக்கான அம்சங்களை அடையாளம் காண, இந்தியாவின் நித்தி ஆயோக் மற்றும்  ரஷ்ய கூட்டமைப்பின் பொருளாதார வளர்ச்சி அமைச்சகம் இடையே  நீடித்த பொருளாதார பேச்சுவார்த்தைகளை தொடங்கவும் இருதலைவர்களும் ஒப்புக்கொண்டனர். எரிசக்தித் துறையில், ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்துவது குறித்து மனநிறைவு வெளியிட்ட அவர்கள், இதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவின் கேஸ்பிராம் மற்றும் கெயில் அமைப்புகள் செய்துகொண்ட நீண்ட கால ஒப்பந்தத்தின் அடிப்படையில், முதலாவது திரவ எரிவாயுக் கப்பல் அடுத்த மாதம் வந்தடைய இருப்பதை  வரவேற்பதாகவும் தெரிவித்தனர். மேலும், ராணுவம், பாதுகாப்பு மற்றும் அணுசக்தித்துறைகளில் இருநாடுகளிடையேயான நீண்டகால நட்புறவின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்திய இரு தலைவர்களும்  இத்துறைகளில் தற்போது கையாளப்படும்  ஒத்துழைப்புகளுக்கும்  வரவேற்பு தெரிவித்தனர்.
     இருநாட்டுத் தலைவர்களிடையே நடைபெறும் வருடாந்திர உச்சிமாநாடுகள் தவிர்த்து, கூடுதலாக சாதாரண முறையிலான சந்திப்புகளை  நடத்தும் திட்டத்தையும் வரவேற்றனர்.

     இந்தியாவில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற உள்ள 19வது உச்சிமாநாட்டில் பங்கேற்க வருமாறு அதிபர் புதினுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

-------



(Release ID: 1533026) Visitor Counter : 195