மத்திய அமைச்சரவை

ஜார்கண்ட் மாநிலம் தேவ்கரில் புதிய எய்ம்ஸ் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 16 MAY 2018 3:39PM by PIB Chennai

ஜார்கண்ட் மாநிலம் தேவ்கரில் புதிய அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனம், எய்ம்ஸ் அமைப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்திற்கு ரூ.1103 கோடி நிதிச்செலவுக்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த எய்ம்ஸ் நிறுவனம் பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்படும்.

விவரங்கள்:

      தேவ்கர் நகரில் அமைய உள்ள எய்ம்ஸில் கீழ்கண்டவை இடம் பெற்றிருக்கும்:

  • அவசரகால சிகிச்சை மையமும் 750 படுக்கை வசதியும் கொண்ட மருத்துவமனை.
  • ஆண்டுக்கு 100 மாணவர்கள் எம் பி பி எஸ் படிக்கும் வகையிலான மருத்துவகல்லூரி.
  • ஆண்டுக்கு 60 மாணவர்கள் பி எஸ் சி செவிலியர் படிப்பு படிப்பதற்கான செவிலியர் கல்லூரி , குடியிருப்பு வளாகங்கள், புதுதில்லி எய்ம்ஸ் மாதிரியில் சம்பந்தப்பட்ட வசதிகள் / சேவைகள்.
  • 20 சிறப்பு மருத்துவ / உயர் சிறப்பு மருத்துவத்துறைகளும் அவற்றுக்கான 15 அறுவை சிகிச்சை அரங்குகளும்.
  • பாரம்பரிய மருத்துவமமுறையின்படி சிகிச்சை வழங்குவதற்கான 30 படுக்கைகள் கொண்ட ஆயுஷ் துறை.

தாக்கம்:

  தேவ்கரில் அமைய உள்ள புதிய எய்ம்ஸ் நிறுவனம் அந்தப் பகுதி மக்களுக்கு உயர்சிறப்பு மருத்துவ வசதியை வழங்கும். மேலும், இந்த மண்டலத்தில் தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் ஏற்படக்கூடிய ஆரம்ப மற்றும் இடைநிலை நிறுவனங்கள்  / வசதிகள் ஆகியவற்றில் பணிபுரிய தகுதி வாய்ந்த மருத்துவர்கள், இதர சுகாதார பணியாளர்களை உருவாக்க உதவுவதும் இந்த நிறுவனத்தின் நோக்கமாகும்.

பின்னணி:

    பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் புவனேஷ்வர், போபால், ராய்ப்பூர், ஜோத்பூர், ரிஷிகேஷ், பாட்னா, ஆகிய இடங்களில் எய்ம்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பரேலி (உபி), நாக்பூர் (மகாராஷ்ட்ரா), கல்யாணி (மேற்கு வங்கம்), குண்டூரில் மங்களகிரி (ஆந்திரபிரதேசம்) ஆகிய இடங்களில் எய்ம்ஸ்அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.   கோரக்பூர் (உபி-யில்) எய்ம்ஸ் அமைப்பதற்கான பணியாணைகள் வழங்கப்பட்டுள்ளன.

   மேலும், கீழ்கண்ட எய்ம்ஸ்-களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • 2016 ஜூலையில் பஞ்சாப் பத்தின்டா
  • 2017 மே –யில் அசாம் குவஹாத்தி
  • 2018 ஜனவரியில் இமாசலப்பிரதேசம் பிலாஸ்பூர்

------



(Release ID: 1532494) Visitor Counter : 123