பாதுகாப்பு அமைச்சகம்
மின்னணு ஓய்வூதிய உத்தரவு: சரியான திசையில் எடுக்கப்பட்ட புதிய நடவடிக்கை
Posted On:
14 MAY 2018 3:17PM by PIB Chennai
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தினை முன்னெடுத்துச் செல்லும் வகையில் அலகாபாத் பாதுகாப்பு கணக்கு (ஓய்வூதியங்கள்) முதன்மைக் கட்டுப்பாட்டு அதிகாரி ஓய்வூதியதாரர்களுக்கு மின்னணு ஓய்வூதியம் செலுத்தும் ஆணைகளை விநியோகிக்க தொடங்கியுள்ளார். ஓய்வூதியங்களை வழங்கும் வங்கிகள், பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கும் அலுவலகங்கள், அஞ்சலகங்கள் போன்ற அமைப்புகளுக்கும், இந்த மின்னணு ஓய்வூதியம் வழங்கும் ஆணைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக அனைத்து கமிஷன்டு அதிகாரிகள், ஜூனியர் கமிஷன்டு அதிகாரிகள், இதர பதவியினர் ஆகியோருக்கு 2017 அக்டோபர் முதல் தொடங்கப்பட்ட இந்த நடைமுறை தற்போது பாதுகாப்பு சிவில் பணி ஓய்வூதியதாரர் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஓய்வூதியதாரர்களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் செயல்படும் அலகாபாத், பாதுகாப்பு கணக்குகள் (ஓய்வூதியம்) முதன்மைக் கட்டுப்பாட்டாளர் மட்டுமே பாதுகாப்பு பணியாளர்களுக்கான ஓய்வூதிய அனுமதி ஆணைகளை வழங்குகிறது. ராணுவம், கடலோர காவல்படை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், ஜெனரல் ரிசர்வ் பொறியியல் படை, எல்லைச் சாலைகள் அமைப்பு, இராணுவ பொறியியல் சேவைகள் மற்றும் பாதுகாப்பு கணக்குத் துறை, பாதுகாப்பு சிவிலியன்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளுக்கும் இவர் மட்டுமே ஓய்வூதிய ஆணை வழங்குகிறார்.
சாதாரணமான ஓய்வூதிய முறையிலிருந்து மின்னணு ஓய்வூதிய வழங்கும் ஆணைகள் முறைக்கு மாறுவதால், ஓய்வூதிய வினியோகம் மற்றும் ஓய்வூதியம் மாற்றியமைப்பு ஆகியவற்றில் ஏற்படும் கால தாமதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு நிலைகளில் தரவு பதிவு செய்யும்போது, ஏற்படும் மனித தவறுகளை குறைப்பதற்கும், இந்த திட்டம் பயன்படும்.
இந்த நடைமுறையின் அடுத்த பெரிய திட்டம் 46 ஆவண அலுவலகங்கள் மற்றும் 2900க்கும் கூடுதலான அலுவலகங்கள் ஆகியவற்றின் ஓய்வூதிய ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவதாகும். அலகாபாத், பாதுகாப்பு கணக்குகள் (ஓய்வூதியம்) முதன்மைக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தின் இந்த திட்டம் ஒரு பதவிநிலை ஒரு ஓய்வூதியம் என்ற திட்டத்தை சிறப்பாக அமலாக்க பெரிதும் உதவும்.
===========
(Release ID: 1532036)
Visitor Counter : 169