பிரதமர் அலுவலகம்

தேசியக் கிராமச் சுயாட்சி இயக்கத்தைப் பிரதமர் தொடங்கிவைத்தார்; பழங்குடியினரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான திட்டபாதையையும் தொடங்கிவைத்தார்

Posted On: 24 APR 2018 3:15PM by PIB Chennai

ராஷ்ட்ரீய கிராமின் ஸ்வராஜ் அபியான் என்ற தேசிய கிராமச் சுயாட்சி இயக்கத்தைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி, மத்தியப் பிரதேசம் மண்டலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொடங்கிவைத்தார். இதன் மூலம் பழங்குடியினரின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான அடுத்த ஐந்து ஆண்டு திட்டப்பாதையைத் தொடங்கிவைத்தார்.

மாண்ட்லா மாவட்டம், மானேரியில், இந்திய ஆயில் நிறுவனத்தின் சமையல் எரிவாயு நிரப்பும் ஆலைக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார். அவர் உள்ளூர் அரசாங்கக் கோப்பகத்தை ஆரம்பித்தார். உள்ளாட்சித் தகவல் தொடர்பு விவரக் குறிப்பேட்டையும் பிரதமர் வெளியிட்டார்.

100 சதவீத புகையில்லா அடுக்களைகள், இந்திர தனுஷ் இயக்கத்தின் கீழ் 100 சதவீதத் தடுப்பூசி போடப்பட்ட மற்றும் சவுபாக்யா திட்டத்தின் கீழ் 100 சதவீத மின்இணைப்பு வழங்கப்பட்ட கிராமங்களின் ஊராட்சித் தலைவர்களையும் பிரதமர் கவுரவித்தார்.

மாண்ட்லாவில் நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்தி ராஜ் பிரதிநிதிகளுடன் உரையாற்றிய பிரதமர், மகாத்மா காந்தி கூறிய ‘கிராமத்தில் இருந்து தேசம்’ மற்றும் கிராம சுயாட்சி ஆகியவற்றை நினைவுகூர்ந்தார். தேசிய பஞ்சாயத்திராஜ் தினத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் மகாத்மா காந்தி எப்போதுமே கிராமத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும் கிராமச் சுயாட்சி பற்றியும் சிறப்பாகக்  கூறியிருக்கிறார் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். நமது கிராமங்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற நமது உறுதிப்பாட்டினை நாம் அனைவரும் மீண்டும் உறுதிபடுத்துவோம் என்றார் பிரதமர்.

ஊரக வளர்ச்சி பற்றிப் பேசுகையில் வரவுசெலவுக் கணக்குகள் மிகவும் முக்கியம் என்றார் பிரதமர். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இந்தக் கூற்றில் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன என்றும் ஒரு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது குறித்தும் அது சரியான நேரத்திலும் வெளிப்படையாகவும் செயல்படுத்தப்படவேண்டும் என்பது குறித்தும் மக்கள் தற்போது பேசத் தொடங்கியுள்ளனர் என்றும் பிரதமர் கூறினார்.

மக்கள் தங்களின் குழந்தைகளின் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், அது அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார்.

வேளாண்துறையில் சுயசார்புடன் இருப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பிரதமர் வலியுறுத்தினார். நீர்ப் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகளில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஒவ்வொரு சொட்டு நீரும் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் பிரதமர் பஞ்சாயத்திராஜ் பிரதிநிகளைக் கேட்டுக்கொண்டார்.

அனைவரையும் உள்ளடக்கிய நிதி வளர்ச்சிக்கான மக்கள் நிதித் திட்டம், பழங்குடியினருக்கு அதிகாரம் அளிப்பதற்கான வன நிதித் திட்டம், கழிவுகளை எரிசக்தியாக மாற்றுவதுடன் விவசாயிகள் அதிகமாக சுயச்சார்புடன் இருப்பதற்கான சாணம்- நிதித் திட்டம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும் பிரதமர் மோடி பேசினார்.

கிராமங்களில் ஏற்படும் மாற்றம் இந்தியாவின் மாற்றத்தை உறுதி படுத்தும் என்றும் அவர் கூறினார்.

மத்திய அரசு சமீபத்தில் எடுத்துள்ள நடவடிக்கைகள் பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுபடுத்தும் என்றார் பிரதமர்.



(Release ID: 1530047) Visitor Counter : 377