வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

மின்னணு வர்த்தகம் தொடர்பான தேசிய கொள்கைக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கான சிந்தனையாளர் கூட்டத்திற்கு சுரேஷ் பிரபு தலைமை வகிப்பார்

Posted On: 23 APR 2018 4:05PM by PIB Chennai

மின்னணு வர்த்தகம் தொடர்பான, தேசிய கொள்கைக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்காக 2018 ஏப்ரல் 24 அன்று நடைபெற உள்ள முதலாவது சிந்தனையாளர் கூட்டத்திற்கு, மத்திய வர்த்தகம் & தொழில்துறை மற்றும் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு தலைமை வகிப்பார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு, மின்னணு வர்த்தகம் சார்ந்த மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், தொழில் நிறுவனங்களின் உயர்மட்டப் பிரதிநிதிகள், மின்னணு வணிக நிறுவனங்கள், தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் பல்துறை நிபுணர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மின்னணு வர்த்தகம் தொடர்பான, தேசியக் கொள்கைக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கான சிந்தனையாளர்கள், டிஜிட்டல் பொருளாதாரத் துறையில் நாடு எதிர்நோக்கும் சவால்கள் பற்றி விரிவாக விவாதிக்க உள்ளனர். மின்னணு வர்த்தகத்திற்காக விரிவான மற்றும் உயர் அளவிலான தேசியக் கொள்கையை வகுப்பதற்கு இவர்கள் பரிந்துரைப்பார்கள். மின்னணு வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் சார்ந்த கீழ்காணும் அம்சங்கள் பற்றி இந்தச் சிந்தனையாளர் குழு விவாதிக்கும்: இயற்பியல் சார்ந்த மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு, கட்டுப்பாட்டு முறை, வரிவிதிப்புக் கொள்கை, புள்ளி விவரத் திரட்டு, கணினிச் சேவையகத்தைத் தேவைக்கேற்ப மாற்றியமைத்தல், அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு, அன்னிய நேரடி முதலீடு, தொழில்நுட்பத் திரட்டு, தொழில் நிறுவனங்களில் ஏற்படும் சிக்கல்களுக்குத் தீர்வு காணுதல், திறன் மேம்பாடு மற்றும் வர்த்தகம் சார்ந்த அம்சங்கள். உலக வர்த்தக அமைப்பில் மின்னணு வர்த்தகம் தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் நிலுவையில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக உரிய தேசியக் கொள்கையை உருவாக்குதல் போன்றவையும், மின்னணு வர்த்தகம் பற்றிய தேசியக் கொள்கைக்கான கட்டமைப்பை உருவாக்கும் சிந்தனையாளர் குழுவின் மற்றொரு முக்கியப் பரிமாணமாகும்.

2018 ஏப்ரல் 24 அன்று நடைபெறஉள்ள மின்னணு வர்த்தகம் பற்றிய தேசியக் கொள்கைக்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கான சிந்தனையாளர்  குழுவின் முதலாவது கூட்டத்தில் சுமார் 50 நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 



(Release ID: 1529968) Visitor Counter : 397


Read this release in: English , Urdu , Hindi , Malayalam