வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

டையூ, பகல் நேரத்தில் 100 சதவீதம் புதுப்பிக்கவல்ல எரிசக்தியைப் பயன்படுத்தும் முதலாவது பொலிவுறு நகரமாகிறது

Posted On: 23 APR 2018 2:52PM by PIB Chennai

மற்ற நகரங்கள் தூய்மையாகவும், பசுமையாகவும் மாறுவதற்கான புதிய அடையாளமாக டையூ, பகல் நேரத்தில் 100 சதவீதம் புதுப்பிக்கவல்ல எரிசக்தியைப் பயன்படுத்தும் முதலாவது பொலிவுறு நகரமாகிறது.

        சூரிய மின்சக்தித் திறனை மேலும் விரிவுபடுத்துவதற்காக வீடுகளின் தளங்களின் மேற்பகுதியில் 1-5 கிலோவாட் திறன் உள்ள மின்உற்பத்திக் கலன்களை அமைக்க, குடியிருப்போருக்கு ரூ.10,000 முதல் ரூ. 50,000 வரை மானியம் வழங்க டையூ முன்வந்துள்ளது. டையூ ஒவ்வோர் ஆண்டும் சுமார் 13,000 டன் கரியமில வாயு வெளியேற்றத்தைத் தவிர்க்கிறது. குறைந்த செலவிலான சூரிய எரிசக்தி காரணமாக, குடியிருப்புப் பிரிவுகளில் மின்கட்டணம் சென்ற ஆண்டு 10% அளவிற்கும், இந்த ஆண்டு 15% அளவிற்கும் குறைந்துள்ளது.

     பெங்களூரு பொலிவுறு நகரில் போக்குவரத்து நிர்வாகத்தை மேம்படுத்த மின்னணு நகர நகராட்சி ஆணையத்தின் ஒத்துழைப்புடன் ரோபோக்களைப் பயன்படுத்திப் போக்குவரத்து நிர்வாகம் செய்யும் முன்மாதிரித் தீர்வு தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது.

     பொருளாதாரச் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அப்பால், நகர்ப்புறங்களில் உள்ள பொதுவெளிகளையும், சமூகரீதியாகச் செயல்படும் பகுதிகளையும் சிறந்த முறையில் பயன்படுத்த இளஞ்சிவப்பு நகரின் மையப்பகுதியில் உள்ள சௌரா ரஸ்தாவில் இரவுநேர அங்காடி வளாகத்தை உருவாக்க ஜெய்ப்பூர் பொலிவுறு நகர நிர்வாகம் (ஜேஎஸ்சிஎல்) திட்டமிட்டுள்ளது. ஜேஎஸ்சிஎல் 700 வியாபாரிகள் வரை பதிவுசெய்து, இரவு 9 மணிமுதல் அதிகாலை 1 மணிவரை உணவகங்கள் உள்ளிட்ட அங்காடிகளை அமைக்க அனுமதி அளிக்கும். அலுவலக நேரங்களுக்குப் பின், குடிமக்கள் பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள் பொருட்கள் வாங்குதல் போன்றவற்றுக்கு இடமளிப்பதாக இந்தத் திட்டம் இருக்கும்.

-------
 



(Release ID: 1529939) Visitor Counter : 145


Read this release in: English , Urdu , Marathi , Hindi