பிரதமர் அலுவலகம்

சுவீடன், பிரிட்டன் நாடுகளுக்குப் புறப்படுவதற்கு முன் பிரதமர் விடுத்த அறிக்கை

Posted On: 15 APR 2018 8:50PM by PIB Chennai

சுவீடன், பிரிட்டன் நாடுகளுக்குப் புறப்படுவதற்கு முன் பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்ட  அறிக்கையின் முழு விவரம் வருமாறு:

“ இருதரப்புச் சந்திப்புகளுக்காகவும், இந்தியா -  நார்டிக் உச்சிமாநாட்டிற்காகவும், காமன்வெல்த் அரசுத் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும், 2018 ஏப்ரல் 17 – 20 நாட்களில் நான் சுவீடன், பிரிட்டன் நாடுகளுக்குச் செல்லவிருக்கிறேன்.

சுவீடன் நாட்டுப் பிரதமர் ஸ்டெபான் லோவென் அழைப்பின்பேரில், ஏப்ரல் 17 அன்று நான் ஸ்டாக்ஹோமில் இருப்பேன். இது சுவீடனுக்கான எனது முதல் பயணமாகும். இந்தியாவும், சுவீடனும் இதமான, நட்பு ரீதியான உறவுகளைப் பகிர்ந்துகொண்டுள்ளன. நமது நட்புறவு என்பது ஜனநாயக மாண்புகளையும், வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய உலக ஒழுங்குவிதிகளைப் பின்பற்றுவதையும், அடிப்படையாகக் கொண்டது. நமது வளர்ச்சிக்கான முன்முயற்சிகளில் சுவீடன் மதிப்புமிகு பங்குதாரராக உள்ளது. இருநாடுகளின் உயர்நிலையில் உள்ள வர்த்தகத் தலைவர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பைப் பிரதமர் லோவெனும், நானும் பெற்றிருக்கிறோம். மேலும், வர்த்தகம், முதலீடு, புதிய கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, பொலிவுறு நகரங்கள், தூய்மையான எரிசக்தி, டிஜிட்டல் மையம், சுகாதாரம் போன்றவற்றில் கவனம் செலுத்தி ஒத்துழைப்பதற்கான எதிர்காலத் திட்டத்தையும் நாங்கள் வகுக்க உள்ளோம். சுவீடன் அரசர் மாட்சிமை பொருந்திய கார்ல் பதினாறாம் குஸ்தாஃப்  மன்னரையும் நான் சந்திக்கவிருக்கிறேன்.

ஃபின்லாந்து, நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து நாடுகளின் பிரதமர்களுடன் ஏப்ரல் 17அன்று ஸ்டாக்ஹோமில் இந்தியா -  நார்டிக் உச்சிமாநாட்டிற்கு இந்தியாவும், சுவீடனும் கூட்டாக ஏற்பாடு செய்யவிருக்கிறது. தூயத் தொழில்நுட்பங்கள், சுற்றுச்சூழல் தீர்வுகள், துறைமுகங்கள் நவீன மையம், தொடர்ச்சியான குளிர்பதனக் கிடங்குகள், திறன் மேம்பாடு, புதிய கண்டுபிடிப்பு போன்றவற்றில் நார்டிக் நாடுகளுக்கு உள்ள பலம், உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மாற்றத்தை உருவாக்குவது என்ற நமது தொலைநோக்குப் பார்வைக்கு நல்ல பொருத்தமுள்ளதாக நார்டிக் திறமைகள் உள்ளன.

பிரிட்டன் பிரதமர் தெரசா மே அவர்களின் அழைப்பையேற்று, 2018 ஏப்ரல் 18 அன்று நான் லண்டன் செல்கிறேன். ஏற்கெனவே, 2015 நவம்பரில் பிரிட்டனில் பயணம் செய்திருக்கிறேன். இந்தியாவும், பிரிட்டனும் வலுவான வரலாற்று உறவுகளோடு பிணைந்த நவீன நட்புறவையும் கொண்டிருக்கிறது.

வளர்ந்துவரும் இருதரப்புப் பணிகளுக்குப் புதிய உத்வேகத்தை இருநாடுகளுக்கும் அளிப்பதற்கான இன்னொரு வாய்ப்பாக எனது லண்டன் பயணம் இருக்கும். சுகாதாரம், புதிய கண்டுபிடிப்பு, டிஜிட்டல் மையம், மின்னாற்றல் இயக்குத்திறன், தூய எரிசக்தி, இணையவெளிப்   பாதுகாப்பு போன்ற துறைகளில் இந்தியாவும், பிரிட்டனும் இணைந்த செயல்பாட்டை விரிவுப்படுத்துவதில் நான் கூடுதல் கவனம் செலுத்துவேன். “உயிரோட்டமான தொடர்பு” என்ற கருத்தின் அடிப்படையில் பன்முகப்பட்ட இந்தியா , பிரிட்டன் நட்புறவை வளப்படுத்துகின்ற வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உள்ள மக்களைச் சந்திக்கும் வாய்ப்பையும் நான் பெற்றிருக்கிறேன்.

மாட்சிமை பொருந்திய இங்கிலாந்து அரசியையும் சந்திக்கவுள்ள நான், பொருளாதார ஒத்துழைப்பில் புதிய அம்சங்களுக்காகப் பாடுபட்டுவரும் இருநாடுகளின் பெரு நிறுவனத் தலைமை நிர்வாகஅதிகாரிகளுடன் கலந்துரையாடுவேன். லண்டனில் மிகச் சிறந்த ஆயுர்வேத மையத்தைத் துவக்கிவைக்கிறேன். சர்வதேசச் சூரியசக்திக் கூட்டமைப்பின் புதிய உறுப்பினரான பிரிட்டனுக்கு வரவேற்பு தெரிவிப்பேன்.

மால்டாவிடமிருந்து காமன்வெல்த் அமைப்புக்கான புதிய தலைமையை ஏற்கவிருக்கும் இங்கிலாந்து ஏற்பாடு செய்துள்ள காமன்வெல்த் நாடுகளின் அரசுத் தலைவர்கள் கூட்டத்தில் ஏப்ரல் 19, 20 தேதிகளில் நான் பங்கேற்பேன். காமன்வெல்த் அமைப்பில் உள்ள வளர்ச்சியடைந்து வரும் உறுப்புநாடுகளுக்கு - குறிப்பாக, சிறிய அரசுகளுக்கும், வளர்ந்துவரும் சிறிய தீவு அரசுகளுக்கும் - பயன்தரும் உதவிகளை வழங்குவது மட்டுமின்றி, வளர்ச்சிக்கான விஷயங்களிலும் சர்வதேச அளவில் வலுவாகக் குரல்கொடுக்கும் இணையற்ற பன்முகத்தன்மை உள்ள நாடுகளின் குழுவாகவும் காமன்வெல்த் அமைப்பு உள்ளது.

எனது சுவீடன், பிரிட்டன் பயணங்கள் இந்த நாடுகளுடனான நமது பணிகளை விரிவுப்படுத்தவும் உயர்த்தவும் பயன்படும் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். “

=============



(Release ID: 1529182) Visitor Counter : 136