மத்திய அமைச்சரவை

பர்ன் ஸ்டான்டர்ட் கம்பெனி லிமிடட் என்ற மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தை (CPSE) மூடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 04 APR 2018 7:24PM by PIB Chennai

10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மோசமான செயல்பாடு மற்றும் நிதி நிலைமை காரணமாகவும், இதைப் புதுப்பித்தால் குறைந்த லாபமே எதிர்காலத்தில் கிடைக்கும் என்பதையும் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டது

இழப்பு ஏற்படுத்தும்  BSCL நிறுவனத்துக்கு இப்போது செலவிடப்படும் மக்களின் பணம் இதன் மூலம் மிச்சப்படுத்தப்பட்டு, மற்ற வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட முடியும்

 

 

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பர்ன் ஸ்டான்டர்ட் கம்பெனி லிமிடட் ( Burn Standard Company Ltd (பி.எஸ்.சி.எல்)) என்ற மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனத்தை மூடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நிதி உதவி மற்றும் அரசின் மற்ற ஆதரவுகளை அளித்தும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மோசமான  செயல்பாடு மற்றும் நிதிநிலைமையைக் கருத்தில் கொண்டும், இதைப் புதுப்பித்தால் எதிர்காலத்தில் குறைந்த லாபமே கிடைக்கும் என்பதைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இழப்பு ஏற்படுத்தும் பி.எஸ்.சி.எல். நிறுவனத்துக்கு இப்போது செலவிடப்படும் மக்களின் பணம் இதன் மூலம் மிச்சப்படுத்தப்பட்டு, மற்ற வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட முடியும்.

     ஊழியர்கள் பணி நிறுத்தத்துக்கான ஊதியம் வழங்குவதற்கும், நிறுவனத்தின் தற்போதைய கடன்களை அடைப்பதற்கும் ஒருமுறை மானியமாக ரூ.417.10 கோடியை அரசு அளிக்கும். மேலும் இந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு (ரயில்வே அமைச்சகம்) அளித்து நிலுவையில் உள்ள ரூ.35 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும். பி.எஸ்.சி.எல்.  நிறுவனத்தின் 508 தொழிலாளர்கள் தாமாக முன்வந்து ஓய்வு பெறும் வி.ஆர்.எஸ். திட்டத்தின் (VRS) மூலம் பயன்பெறுவர்.

பின்னணி :

தேசியமயமாக்கல் திட்டத்தைத் தொடர்ந்து  பர்ன் ஸ்டான்டர்ட் கம்பெனி லிமிடட் என்ற இந்த நிறுவனம் 1976-ல் தொடங்கப்பட்டது.  பர்ன் அண்ட் கம்பெனி ( Burn and Company ) மற்றும் இந்தியன் ஸ்டான்டர்ட் வேகன் கம்பெனி லிமிடட்  (Indian Standard Wagon Company Limited) நிறுவனங்கள் தேசிய மயமாக்கப்பட்டு  ஒன்றாக சேர்க்கப்பட்டன. 1987ல்  கனரக தொழில்கள் துறையின் (DHI) கீழ் கொண்டுவரப்பட்டது. 1994-ல் இந்த நிறுவனம் தொழில் மற்றும் நிதி மறுசீரமைப்பு வாரியத்தின் (BIFR)பரிசீலனைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இது நலிவுற்ற நிறுவனமாக 1995ல் அறிவிக்கப்பட்டது. அப்போதிருந்து இந்த நிறுவனம் நலிவுற்ற நிறுவனமாக நீடித்து வருகிறது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கமிட்டி ஒப்புதலின்படி, இந்த நிறுவனத்தின் நிர்வாகக் கட்டுப்பாடு DHI-யிடம் இருந்து 15/09/2010-ல் ரயில்வே அமைச்சகத்துக்கு மாற்றப்பட்டது. ரயில் சரக்குப் பெட்டிகள் தயாரித்தல் மற்றும் பழுதுபார்த்தல் பணிகளிலும், ஸ்டீல் உற்பத்தியிலும் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

******

 



(Release ID: 1527763) Visitor Counter : 150


Read this release in: English , Marathi , Gujarati