உள்துறை அமைச்சகம்
நாடு தழுவிய முழு அடைப்பின்போது (பாரத் பந்த்) ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் குறித்து மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அறிக்கை
प्रविष्टि तिथि:
03 APR 2018 1:05PM by PIB Chennai
நாடு தழுவிய முழு அடைப்பின்போது (பாரத் பந்த்) ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், மக்களவையில் இன்று அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையின் முழு விவரம் வருமாறு:
அவைத் தலைவர் அவர்களே,
நாட்டின் சில பகுதிகளில் நேற்று கல்வீச்சு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. நாடு தழுவிய இந்த முழு அடைப்பின்போது, வன்முறைக்கு 8 பேர் பலியாகியுள்ளனர். (ம.பி. 06, உ.பி.01, & ராஜஸ்தான் 01.) இந்த முழு அடைப்பின்போது, காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மக்களிடையே பரவலாக, கோப உணர்வு ஏற்பட்டுள்ளதை நான் முழுமையாக உணர்கிறேன். அந்த வழக்கில், மத்திய அரசுக்கு, எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் வீதிகளில் இறங்கி போராடத் தொடங்கி உள்ளனர்.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, எஸ் சி / எஸ் டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ஆராய்ந்து, இந்த சட்டத்தை வலுப்படுத்த முடிவு செய்தோமே தவிர, அதனை நீர்த்துப்போக செய்ய அரசு முயற்சிக்கவில்லை என்பதை இந்த அவையின் மூலமாக உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன். 1995-ல் ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத் திருத்தத்தை அரசு நிறைவேற்றியது. இந்த திருத்தச் சட்டத்தில் பல்வேறு புதிய குற்றங்கள் சேர்க்கப்பட்டன. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதில் ஏற்படும் கால தாமதத்தால், பாதிக்கப்பட்டவர்கள் / சாட்சிகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களை அமைதிப்படுத்தி விடுவதாக அறியப்படுகிறது. எனவே, அவர்களை பாதுகாக்க, சாட்சிகள் பாதுகாப்பு என்ற பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கவனக்குறைவாக உள்ள அரசு ஊழியர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான புதிய பிரிவுகளும் இந்த சட்டத் திருத்தத்தில் உள்ளன.
எஸ் சி / எஸ் டி வகுப்பினரின் நலனுக்காக பாடுபட அரசு முழு உறுதிபூண்டுள்ளது என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான உடனேயே, மத்திய அரசின் சார்பில், மறுஆய்வு மனுத் தாக்கல் செய்ய, அரசு முடிவு செய்தது. இந்த மறுஆய்வு மனுவை, உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படி, அட்டர்னி ஜெனரல் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டதன்பேரில், இதனை இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு எடுத்துக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு உடனடி நடவடிக்கை மேற்கொண்டது, எஸ் சி / எஸ் டி வகுப்பினர் நலனை பாதுகாக்க வேண்டும் என்ற அரசின் நோக்கத்தை தெளிவுப்படுத்துகிறது. 2018 மார்ச் 20ஆம் தேதி, உச்சநீதிமன்றம் தீர்ப்பை அளித்த பிறகு, கடந்த ஆறு வேலை நாட்களுக்குள் அரசு விரைவாக செயல்பட்டு மறுஆய்வு மனுத் தாக்கல் செய்துள்ளதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இடஒதுக்கீடு தொடர்பாக வெளியாகும், வதந்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை, ஆதாரமற்றவை என்றும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
எஸ் சி / எஸ் டி வகுப்பினரின் நலனை பாதுகாக்க அரசு உறுதிபூண்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாத வகையிலும், மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்யுமாறும், மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளோம். மாநில அரசுகள், உதவி கோரினால், உடனடியாக அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கி வருகிறது. மேலும், உள்துறை அமைச்சகமும் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதுடன், மாநில அரசுகளையும் உடனுக்குடன் தொடர்பு கொண்டு வருகிறது. நாட்டு மக்கள் அனைவரும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணி பாதுகாக்க வேண்டும் என இந்த அவையின் மூலமாக நான் கேட்டுக் கொள்கிறேன். அரசியல் கட்சிகளும், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பராமரிக்க உதவுமாறு நான் வேண்டுகிறேன்.
*********
(रिलीज़ आईडी: 1527464)
आगंतुक पटल : 206