மத்திய அமைச்சரவை

பாரம்பரிய மருத்துவ முறைகள் துறையில் இந்தியா-ஈரான் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 14 MAR 2018 7:35PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பாரம்பரிய மருத்துவமுறைகள் துறையில் இந்தியா-ஈரான் இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

பயன்கள்: பாரம்பரிய மருத்துவத் துறையில் இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழி வகை செய்யும். இரு நாடுகளுக்கு இடையிலான கலாச்சார பாரம்பரிய தொடர்புகளின் அடிப்படையில் இது மிக முக்கியமான  ஒப்பந்தமாக அமையும்.

பின்னணி: உலகளாவிய சுகாதார சூழலில் பெருமளவு திறன் வாய்ந்ததாக திகழும் மருத்துவ தாவரங்கள் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளில், இந்தியா மேம்பாடு அடைந்துள்ளது. மொழி  அடிப்படையில் இரு நாடுகளும் பல பொதுவான அம்சங்களை உள்ளடக்கியதாக திகழ்கின்றன. மூலிகை மருத்துவ பயன்பாட்டில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் இந்தியாவும், ஈரானும் பொதுவான  மரபை சார்ந்ததாக உள்ளன.  பாரம்பரிய மருத்துவ முறைகளில், தொடர்ந்து பயன்படுத்தப்படும் அரிதான மருத்துவ குணம் கொண்ட தாவரங்கள் மற்றும் பல்லுயிர் பரவலாக்க முறைகளில் இருநாடுகளும் சிறந்து விளங்குகின்றன. நவீன தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பெருமளவிலான வலுவான கட்டமைப்பு ஆகியவற்றை ஒருங்கே கொண்டுள்ள இந்தியாவை பாரம்பரிய மருத்துவமுறைத் துறையில் முதலிடத்தை பெற்றுள்ளதாக ஈரான் அங்கீகரித்துள்ளது.

   பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, சோவா-ரிக்பா மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றை ஊக்குவிக்கவும், பிரபலப்படுத்தவும், உலகளாவிய அளவில் இவற்றை கொண்டு செல்லவும் மத்திய அரசின் ஆயூஷ் அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த அடிப்படையில், சீனா, மலேஷியா, ட்ரினிடாட் & டொபாகோ, ஹங்கேரி, பங்களாதேஷ், நேபாள், மொரிஷியஸ் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளுடன் பாரம்பரிய மருத்துவம்  தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.  இலங்கையுடன் மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

-----



(Release ID: 1524476) Visitor Counter : 262