மத்திய அமைச்சரவை

மகாநதி நீர் பிரச்சினைக்கு ஒடிசா மாநில அரசின் கோரிக்கையின்படி மாநிலங்களுக்கு இடைப்பட்ட நதி நீர் பிரச்சினை சட்டம் 1956-ன் படி நடுவர் மன்றம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 20 FEB 2018 1:20PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மகாநதி ஆற்று நீர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மகாநதியால் பயன்பெறும் பாசனப் பகுதி மாநிலங்களில் கிடைக்கும் முழுமையான தண்ணீர் அளவு, ஒவ்வொரு மாநிலத்தின் பங்களிப்பு, ஒவ்வொரு மாநிலத்திலும் தற்போது பயன்படுத்தப்படும் நீர்வளங்கள், எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பாசனப் பகுதி மாநிலங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டிய நீரின் அளவை நடுவர் மன்றம் நிர்ணயம் செய்யும்.

மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் தகராறுகள் (ISRWD) சட்டம் 1956-ன் விதிகளின்படி, இந்த நடுவர் மன்றம் ஒரு தலைவர்,  உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்ற நீதிபதிகளில் இருந்து தலைமை நீதிபதியால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும்.  மேலும், இந்த நடுவர் மன்றத்தின் செயல்பாடுகளில் ஆலோசனைகள் வழங்குவதற்கு,  தண்ணீர் தொடர்பான உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளைக் கையாள்வதில் அனுபவம் வாய்ந்த நீர்வளத் துறை நிபுணர்களான இரண்டு மதிப்பீட்டாளர்களின் சேவை பயன்படுத்திக் கொள்ளப்படும்.

ISRWD சட்டம் 1956-ன் விதிகளின்படி, நடுவர் மன்றம் மூன்று ஆண்டுகளுக்குள் தனது அறிக்கை மற்றும் முடிவை சமர்ப்பிக்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால், இதன் பதவிக்காலம், 2 ஆண்டுகளுக்கு மிகாத வரையில் மேலும் நீட்டிக்கப்படலாம்.

நடுவர் மன்றம் மூலம் தீர்வு காணப்படுவதால், ஒடிசா மற்றும் சத்திஸ்கர் மாநிலங்களுக்கு இடையில் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள மகாநதி ஆற்று நீர் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


******(Release ID: 1521071) Visitor Counter : 111