பிரதமர் அலுவலகம்

“பரீக்ஷா பே சர்ச்சா” என்ற தலைப்பில் தேர்வுகள் குறித்து மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

Posted On: 16 FEB 2018 6:26PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மாணவர்களுடன் தேர்வுகள் தொடர்பான விஷயங்கள் குறித்து கலந்துரையாடினார். புதுதில்லியில் உள்ள தல்கதோரா விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் அவரிடம் பல கேள்விகளை எழுப்பினார்கள். பல்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகள், நரேந்திர மோடி மொபைல் செயலி மற்றும் மைகவ் மேடை மூலமாகவும் மாணர்கள் அவரிடம் கேள்விகள் எழுப்பினார்கள்.

இந்த கலந்துரையாடலின் தொடக்கத்தில் பேசிய பிரதமர் தாம் இந்த அமர்வுக்கு மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் குடும்பத்தின் நண்பராக வந்திருப்பதாக கூறினார்.  பல்வேறு மேடைகளின் மூலம் தாம் நாடு முழுவதும் உள்ள 10 கோடி மக்களுடன் உரையாடிக் கொண்டிருப்பதாக அவர் கூறினார். இன்று வரையில் தாம் மாணவராகத் உணரும் வகையிலான மதிப்புகளை தமது ஆசிரியர்கள் தனக்குள் விதைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஒவ்வொருவரும் தாம் ஒரு மாணவர் என்பதை தங்கள் நினைவில் உயிரோட்டத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

 சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது பதற்றம், கவலை, செறிவு, அழுத்தம், பெற்றோரின் எதிர்பார்ப்புகள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு என பல்வேறு வகையான கேள்விகளுக்கு பிரதமர் பதிலளித்தார். அவரது பதில்களில் அறிவாற்றல், நகைச்சுவை மற்றும் ஏராளமான விளக்கப்பட்ட உதாரணங்கள் இடம்பெற்றிருந்தன.

தேர்வு அழுத்தம் மற்றும் கவலையை எதிர்கொள்ள தன்னம்பிக்கையின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் அவர் சுவாமி விவேகானந்தர் கூறியவற்றை மேற்கோள் காட்டினார்.  உயிர் போகக்கூடிய அளவு ஏற்பட்ட காயம் காரணமாக பதினோரு மாதங்கள் அவதிப்பட்ட கனடாவைச் சேர்ந்த பனிச்சறுக்குபவர் மார்க் மெக்கோரிஸ் தற்போது நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற உதாரணத்தை அவர் குறிப்பிட்டார்.

கவனம் செலுத்துவதை பொருத்த வரையில் மன் கீ பாத் என்ற மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர் கூறியிருந்த ஆலோசனையை அவர் நினைவுகூர்ந்தார்.  தன்னை நோக்கி வரும் பந்தை விளையாடுவதில் மட்டுமே தாம் கவனம் செலுத்துவதாகவும் கடந்து போனதைப் பற்றியோ அல்லது எதிர்காலத்தைப் பற்றியோ தாம் கவலைப்படுவதில்லை என்றும் டெண்டுல்கர் கூறியிருந்தார். கவனம் செலுத்துவதை மேம்படுத்துவதில் யோகா உதவும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

மன அழுத்தம் பற்றி குறிப்பிடுகையில் பிரதமர் பிரதிஸ்பார்தா எனப்படும் மற்றவர்களுடன் போட்டியிடுவதை விட அனுஸ்பார்தா எனப்படும் தம்மைத் தாமே எதிர்கொள்தல் முக்கியம் என்றார். தாம் முன்பு செய்ததை விட சிறப்பாக என்ன செய்யலாம் என மட்டுமே முயற்சி செய்ய வேண்டும் என அவர் கூறினார்.

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்காக தியாகம் செய்கிறார்கள் எனக் குறிப்பிட்ட பிரதமர், தங்கள் குழந்தைகளின் சாதனையை சமூக கவுரவத்திற்கான விஷயமாக ஆக்கக் கூடாது என பெற்றோர்களை வலியுறுத்தினார். 

மாணவர்களின் வாழ்க்கையில் அறிவாற்றல் மற்றும் உணர்ச்சி ஆகிய இரண்டும் முக்கியம் என்று பிரதமர் விளக்கினார். 

நேர நிர்வாகத்தைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர் மாணவர்களுக்கு ஒரு முழு ஆண்டுக்கும் நேர அட்டவணை அல்லது அட்டவணை போதுமானதாக இருக்காது என பிரதமர் தெரிவித்தார். ஒருவர் தனது நேரத்தை சிறப்பாக பயன்படுத்தும் வகையில் வளைந்து கொடுக்க வேண்டியது அவசியம் என அவர் மேலும் குறிப்பிட்டார். 

****

 


(Release ID: 1520855) Visitor Counter : 251