Rural Prosperity

கழிவுப்பொருட்கள் மறுசுழற்சி & மறுபயன்பாடு: சமையலறைக் கழிவுகள் முதல் நகர்ப்புறப் பொது இடங்கள் வரை

Posted On: 01 OCT 2026 1:43PM

2014-ல் தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா இயக்கம், தூய்மை, கழிவு மேலாண்மை, மக்களின் பழக்கவழக்கங்களில் மாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான இயக்கமாக வளர்ச்சியடைந்துள்ளது. 2017-ல் தொடங்கப்பட்ட தூய்மையே சேவை இயக்கம், மக்கள் பங்கேற்புடன் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கிறது. கழிவுகளை வளமாக மாற்றும் அணுகுமுறையின் மூலம், பழைய பொருட்களை மீட்டெடுத்து, மறுபயன்பாட்டுக்கு உட்படுத்தி, மதிப்புமிக்க பொருட்களாக மாற்றுவதில் அரசு கவனம் செலுத்துகிறது. நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கம் 2.0-ன் கீழ், கழிவுகளை அவை உருவாகும் இடத்திலேயே தரம் பிரித்தல், மறுசுழற்சி செய்தல் ஆகிய நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

  

வீடுகளிலேயே உரமாகும் சமையலறைக் கழிவுகள்

ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடாவைச் சேர்ந்த மூத்த குடிமகள் கே. சுப்பலட்சுமி, சமையலறையில் உருவாகும் ஈரக் கழிவுகளை உரமாக மாற்றி தனது தோட்டத்திற்கு பயன்படுத்துகிறார். சண்டிகரைச் சேர்ந்த கமல்ஜீத் கௌர் தியோல், கொவிட் பெருந்தொற்றுக் காலத்தில் வீட்டிலேயே உரம் தயாரிக்கும் முயற்சியைத் தொடங்கியதோடு, இதுகுறித்து பிறருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தெலங்கானாவின் சித்திப்பேட்டில் உள்ள கழிவு மேலாண்மைக் கற்றல் மையம், வீட்டு உரம் தயாரித்தல் முதல் சமூக அளவில் உரம் தயாரித்தல் வரை இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது. இதேபோன்ற மையங்களை 141 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நீர்த்தாவரத்திலிருந்து வாழ்வாதாரத்திற்கான வாய்ப்பு

அசாமின் மோரிகான் மாவட்டம் போர்சிலா கிராமத்தில், நீர்நிலைகளில் வேகமாக வளரும் நீர்த்தாவரமான ‘பானி மெடேகா’-வை பயன்படுத்தி கைவினைப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அசாம் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியில் பங்கேற்கும் பெண்களுக்கு மாதம் குறைந்தது ரூ.10,000 வருமானத்தை வழங்குகிறது. நீர்நிலைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் தாவரம், தற்போது பெண்களின் வாழ்வாதாரத்துக்கும், தொழில்முனைவுக்குமான வளமாக மாறியுள்ளது.

தேங்காய்க் கழிவுகளிலிருந்து புதிய பொருட்கள்

பீகாரின் பாட்னாவில், நாள்தோறும் உருவாகும் 25 முதல் 30 மெட்ரிக் டன் தேங்காய்ச் சிரட்டை, நார் உள்ளிட்ட கழிவுகளைப் மேலாண்மை செய்யும் மையத்தை மாநகராட்சி நிறுவியுள்ளது. தொடக்கத்தில் நாளொன்றுக்கு 10 டன் கழிவுகளை அகற்றும் திறன் கொண்ட இந்த ஆலை, பின்னர் 30 டன் வரையிலான திறன் கொண்டதாக மாற்றும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. தேங்காய்க் கழிவுகளிலிருந்து இயற்கை உரம், கட்டுமானம், கோணிப்பைகள், பாய்கள், கைவினைப்பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் தேங்காய் நார் கயிறுகள், தோட்டக்கலைக்குப் பயன்படும் தென்னை நார்த் தூள் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் குப்பைக் கிடங்குகளுக்குச் செல்லும் கழிவுகளின் அளவு குறைவதுடன், உள்ளூர் அளவில் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படுகின்றன.

பொது இடங்களை அலங்கரிக்கும் மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுகள்

கழிவுகளைப் பயன்படுத்திப் பொது இடங்களை அழகுபடுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. சண்டிகரின் ராக் பூங்கா, தொழிற்சாலை மற்றும் வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுப் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. அங்கு 1.75 ஏக்கர் பரப்பில் கழிவுகளிலிருந்து பெறப்பட்ட பொருட்களைக் கொண்டு பொழுதுபோக்கு பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. தில்லியில், குப்பைக் கிடங்குகளிலிருந்து பெறப்பட்ட உலோகங்கள், வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி பல்வேறு உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பூங்காவில் 50 கிலோவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி அமைப்புகளும் உள்ளன. இவற்றின் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை மின் விநியோக நிறுவனங்களுக்கு வழங்க முடியும்.

  

கழிவுகளைத் தூக்கி எறியும் பொருளாகக் கருதுவதற்குப் பதிலாக, பயனுள்ள வளமாக மாற்றும் அணுகுமுறை, வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உதவுகிறது. கழிவுகளைத் தரம் பிரித்தல், மீட்டெடுத்தல், மறுசுழற்சி செய்தல் ஆகியவற்றின் மூலம் தூய்மையான சமூகங்கள் உருவாக்கப்படுவதுடன், சுழற்சிப் பொருளாதாரத்திற்கும் வலுசேர்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/FeaturesDeatils.aspx?NoteId=160268&ModuleId=2&reg=3&lang=1

****

TV/PD/RJ

(Features ID: 160484) आगंतुक पटल : 40
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Assamese , Telugu , Kannada , Malayalam