Infrastructure

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் முதல் மின்சார வாகனங்கள் வரை: நகர்ப்புறத் தூய்மை நடவடிக்கைகளில் நவீன மாற்றம்

Posted On: 01 OCT 2026 1:06PM

சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருத்தல், பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுவதைத் தவிர்த்தல், தூய்மையைப் கூட்டுப் பொறுப்புணர்வாக மாற்றுதல் என்ற நோக்கத்துடன், 2014 அக்டோபர் 2-ம் தேதி, தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டது. துடைப்பம், குப்பைத் தொட்டிகள், மக்கள் பங்கேற்பு ஆகியவற்றுடன் தொடங்கிய இந்த இயக்கம் இன்று தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. டிஜிட்டல் கண்காணிப்பு, ரோபோக்கள், மின்சார வாகனங்கள் ஆகியவை நகர்ப்புறத் தூய்மைப் பணிகளை மேம்படுத்தி வருகின்றன.

ராய்ப்பூர் மாநகராட்சியில், கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்வதற்கு மக்கள் மாநகராட்சி அலுவலகத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. தற்போது, நகர்ப்புற இணையவழி நிர்வாகத் தளத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பு மூலம், மக்கள் இணையவழியில் சேவையைக் கோருதல், கட்டணம் செலுத்துதல், பணியின் நிலையை அறிதல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். கைப்பேசி எண் அல்லது சொத்து அடையாள எண்ணைப் பதிவிட்டால் முகவரி தானாகக் கண்டறியப்படும். பணிகள் முடிந்ததும் ஓட்டுநர்கள் புகைப்படங்களைப் பதிவேற்றுவதால் சேவையை டிஜிட்டல் முறையில் சரிபார்க்க முடிகிறது. வாகனங்களைக் கண்காணித்து வளங்களைத் திறம்படப் பயன்படுத்தவும் இந்த அமைப்பு உதவுகிறது. இதன் மூலம், மனிதர்களின் நேரடி பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும் அபாயகரமான கழிவுநீர்க் கால்வாய் சுத்திகரிப்புப் பணிகளுக்குப் பதிலாக இயந்திரமயமான முறை பின்பற்றப்படுகிறது.

திருவனந்தபுரத்தில், தம்பானூர் ரயில் நிலையப் பகுதியின் கீழ் செல்லும் அமையிழஞ்சான் கால்வாயைச் சுத்தம் செய்வதற்காக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயங்கும் ஜி-ஸ்பைடர் ரோபோ பயன்படுத்தப்படுகிறது. ஜென்ரோபோட்டிக் இன்னோவேஷன்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த ரோபோ, சென்சார், காட்சித் தொழில்நுட்பம் ஆகியவற்றின் உதவியுடன் கழிவுகளைக் கண்டறிந்து அகற்றுகிறது. நச்சு வாயுக்கள், மாசடைந்த நீர், அபாயகரமான கழிவுகள் ஆகியவற்றால் தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது. அதிக நீர்மட்டம், தொடர்ச்சியான நீரோட்டம் உள்ள சூழல்களிலும் இந்த ரோபோவால் செயல்பட முடியும்.

குப்பை சேகரிப்பிலும் மின்சார வாகனங்கள் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் நகரில் வீடுகளில் உருவாகும் குப்பைகளை சேகரிக்க 200-க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஜிபிஎஸ் கண்காணிப்புடன் இயங்கும் இவ்வாகனங்கள், ஆண்டுக்கு 71,000 லிட்டருக்கும் அதிகமான டீசல் பயன்பாட்டைத் தவிர்க்கின்றன. இதன் மூலம் 10 ஆண்டுகளில் 21,000 டன் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் பேட்டரி மூலம் இயங்கும் 5,478 சிறிய வாகனங்கள் குப்பைகள் சேகரிக்க பயன்படுத்தப்படுகின்றன. இவை நாள்தோறும் சுமார் 40 கி.மீ. பயணிக்கின்றன. இவற்றால் தினமும் 41 டன் கரியமில வாயு வெளியேற்றம் குறைக்கப்படுகிறது. ஈரக் கழிவுகள், உலர் கழிவுகள், அபாயகரமான கழிவுகள் எனத் தனித்தனியாகப் பிரித்து சேகரிக்கும் வசதியும் இவற்றில் உள்ளது. 24,621 தெருக்கள், 21 லட்சத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு இச்சேவை வழங்கப்படுகிறது. இதன் மூலம் 6,000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில், 100 மின்சார வாகனங்கள் குப்பை சேகரிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் ஆண்டுக்கு சுமார் 24,918 டன் கரியமில வாயு வெளியேற்றம் குறைவதுடன், எரிபொருள், பராமரிப்புச் செலவுகளில் ரூ.5.97 கோடி சேமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தலா 10 கிலோவாட் திறன் கொண்ட சூரிய மின்தகடுகளுடன் 20 சூரிய மின்னேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை நாள்தோறும் 800 முதல் 1,000 அலகுகள் வரை பசுமை மின்சாரம் உற்பத்தி செய்கின்றன.

டிஜிட்டல் கண்காணிப்புப் பலகைகள் முதல் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள், குப்பை சேகரிப்பில் மின்சார வாகனங்கள் வரை, தொழில்நுட்பமானது நகர்ப்புறத் தூய்மைப் பணிகளைப் பாதுகாப்பானதாகவும், திறன்மிக்கதாகவும் மாற்றி வருகிறது. இந்தப் புதுமை முன்முயற்சிகளை மேலும் பல நகரங்களுக்கு விரிவுபடுத்தி, அன்றாடத் தூய்மைப் பணிகளில் ஒருங்கிணைப்பது, தூய்மையான, பாதுகாப்பான, மக்களின் தேவைகளை விரைவாகப் பூர்த்தி செய்யும் நகரங்களை உருவாக்குவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/FeaturesDeatils.aspx?NoteId=160265&ModuleId=2&reg=3&lang=1

****

TV/PD/RJ

(Features ID: 160483) आगंतुक पटल : 35
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी , Bengali , Telugu , Kannada