Infrastructure
இந்தியா சர்வதேச நீர் வாரம் 2026: பருவநிலைத் தாக்கங்களை எதிர்கொள்ளக்கூடிய நீர் மேலாண்மைக் கட்டமைப்பை உருவாக்குதல்
நீர் பாதுகாப்பை உறுதி செய்வதில் சமூகப் பங்கேற்புக்கு முக்கியத்துவமளித்தல்
Posted On:
25 SEP 2026 1:39PM
இந்தியாவில் மழைநீரைச் சேமித்தல், நிலத்தடி நீரைப் பெருக்குதல், ஆறுகள் மற்றும் பாரம்பரிய நீர்நிலைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கான கட்டமைப்புகளை சமூக அளவிலும், தனிமனித அளவிலும் மக்கள் உருவாக்கி வந்துள்ளனர். தற்போது நீருக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், நீர்ப் பாதுகாப்பை உறுதி செய்ய சமூகப் பங்கேற்பை மீட்டெடுப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த முயற்சிகளை ஒருங்கிணைத்து பல்வேறு நீர் தொடர்பான சவால்களுக்கு தீர்வு காண்பது அரசின் அணுகுமுறையாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக 2012-ல் தொடங்கப்பட்ட இந்தியா சர்வதேச நீர் வாரம், கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்துறைத் தலைவர்கள், சமூகங்கள் இணைந்து நிலையான, பருவநிலைத் தாக்கங்களை எதிர்கொள்ளக்கூடிய வகையிலான நீர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தளமாக உள்ளது.

இந்தியா சர்வதேச நீர் வாரம் 2026
இந்தியா சர்வதேச நீர் வாரத்தின் 9-வது பதிப்பு, 2026 செப்டம்பர் 22 முதல் 26 வரை புதுதில்லியில் நடைபெறுகிறது. “பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்ளக்கூடிய நீர் மேலாண்மை நடவடிக்கைகள்” என்ற கருப்பொருளில் ஜல் சக்தி அமைச்சகம் இந்நிகழ்வை நடத்துகிறது. உள்ளடக்கிய, சமத்துவமான நீர் ஆளுகை, நீர்வளங்களின் சிறந்த பயன்பாட்டுக்கான ஒத்துழைப்பு, தொழில்நுட்பம், சமூகப் பங்கேற்பு, பருவநிலை சார்ந்த இடர்களில் நீர்க் கட்டமைப்புகளுக்கான நிதி ஆதாரங்கள், நிலையான நீர்வள மேலாண்மை, மக்கள் மற்றும் பூமிக்கு நீர் ஆகியவை முக்கிய விவாதப் பொருட்களாக உள்ளன.
6 மத்திய அமைச்சகங்கள், 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர். இதில் சுமார் 150 நாடுகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 11 நாடுகளின் கூட்டாண்மையுடன் இந்த சிறப்பு நிகழ்வு நடத்தப்படுகிறது. அமைச்சர்கள் பங்கேற்கும் அமர்வுகள், இளைஞர் மன்றம், புத்தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு அமர்வுகள் உட்பட 49 அமர்வுகள் நடைபெறுகின்றன.
கடந்த 10 ஆண்டுகளில் ஜல் சக்தி திட்டம், ஜல் சக்தி திட்டம்: மழைநீரை சேகரிப்போம், அடல் நீர் திட்டம், அம்ரித் சரோவர் இயக்கம் ஆகிய திட்டங்கள் நீர்ப் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளன. மக்கள் பங்கேற்பின் மூலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் சமூகப் பங்கேற்பு அதிகரித்துள்ளது. நிலத்தடி நீர் மேலாண்மைக்கு தேசிய நிலத்தடி நீர் வளம் வரைபடமாக்கல் மற்றும் மேலாண்மைத் திட்டம் 2.0 (NAQUIM 2.0)-ன் கீழ் அறிவியல் தரவுகளை வழங்குகிறது. இதன் விளைவாக ஆண்டு நிலத்தடி நீர் சேமிப்பு 2017-ல் 432 பில்லியன் கன மீட்டரிலிருந்து 2025-ல் 448.52 பில்லியன் கன மீட்டராக உயர்ந்துள்ளது.
சமூகப் பங்கேற்புடன் நிலத்தடி நீர் சேமிப்பு
சத்தீஸ்கரின் பாலோட் மாவட்டத்தில் கிராமப் பஞ்சாயத்துகள், உள்ளூர் சமூகங்கள் இணைந்து மழைநீர் சேமிப்பு, நிலத்தடி நீர் செறிவூட்டல் பணிகளை மேற்கொண்டுள்ளன. மக்கள் பங்கேற்பின் மூலம் நீர் பாதுகாப்பு இயக்கம் 2.0-ன் கீழ், 2025 ஜூன் முதல் 2026 மே வரை 2.84 லட்சம் நீர் சேமிப்புக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சத்தீஸ்கரின் பாலோட் மாவட்டத்தில் உள்ள தடுப்பணை
தவேரா நல்லா பகுதியில் 14.3 கி.மீ. நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புப் பணிகளின் மூலம் 6,250-க்கும் அதிகமான நீர் பாதுகாப்புக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், கூடுதலாக 6.5 கோடி லிட்டர் மழைநீரைச் சேமிக்க முடிவதுடன், நிலத்தடி நீர்மட்டம் 5 முதல் 10 அடி வரை உயர வாய்ப்புள்ளது.

திரிபுராவின் கோவாய் மாவட்டத்தில் பஞ்சாயத்து அமைப்புகள், சுயஉதவிக் குழுக்கள், பள்ளிகள் இணைந்து நீர்வள மேலாண்மையில் சமூகப் பங்கேற்பை வலுப்படுத்துகின்றன. 6,000-க்கும் அதிகமான சுயஉதவிக் குழு பெண்கள் சமூக அணித்திரட்டல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிகளில் நீர் மன்றங்கள் மூலம் மாணவர்களுக்கு அடிப்படை நீர்த் தரப் பரிசோதனைப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. 860 அங்கன்வாடி மையங்களிலும் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் ஆறுகள் மறுசீரமைப்பு, நீர்ப் பாதுகாப்பு, சமூகப் பங்கேற்பு ஆகியவை ஜல் ஜீவன் இயக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. “நிலத்திலிருந்து பாரம்பரியத்திற்கு” இயக்கத்தின் கீழ் பான் (Ban) ஆற்றில் சுமார் 42 கி.மீ. நீளத்திற்கும், சோட் (Sot) ஆற்றில் சுமார் 17 கி.மீ. நீளத்திற்கும் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிராம சபை கண்காணிப்பு, பானி கி பாடசாலை அமர்வுகள், பெண்கள் தலைமையிலான நீர்த் தரப் பரிசோதனைகள் மூலம் மக்கள் பங்கேற்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவில் மழைநீர் சேகரிப்பு 2026 இயக்கத்தின் மூலம் மாணவர்களுக்கு நிலத்தடி நீரின் இயக்கம், நீரியல் செயல்முறைகள், மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் 968 தகவல், கல்வி மற்றும் தகவல் தொடர்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் செறிவூட்டலுக்காக 905 கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.


இந்த அனுபவங்கள் நீடித்த நீர்வள மேலாண்மைக்கு சமூகப் பங்கேற்பு, அறிவியல் திட்டமிடல், நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு, தொடர்ச்சியான பொறுப்புணர்வு ஆகியவை அவசியம் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. உலக நாடுகளும், பல்வேறு தரப்பினரும் நீர் சேமிப்பு சார்ந்த அறிவு, அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு நிலையான நீர்வள மேலாண்மைக்கான தீர்வுகளை ஆராய்வதற்கான முக்கியத் தளமாக இந்தியா சர்வதேச நீர் வாரம் 2026 அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/FeaturesDeatils.aspx?NoteId=160157&ModuleId=2®=3&lang=1
****
TV/PD
(Features ID: 160344)
आगंतुक पटल : 48
Provide suggestions / comments