Rural Prosperity
தீன் தயாள் உபாத்யாயா கிராமப்புற திறன் மேம்பாட்டுத் திட்டம்
கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் இணைந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி
Posted On:
24 SEP 2026 12:14PM
விவசாயத்தையே சார்ந்திருக்கும் பெரும்பாலான கிராமப்புறக் குடும்பங்களில், ஒரு புதிய திறனைப் பெறுவது வாழ்வாதாரத்துக்கான பாதையைத் திறக்கும் திறவுகோலாக அமைகிறது. பல கிராமப்புற இளைஞர்களுக்கு கற்றல், வேலைவாய்ப்பு, புதிய வருவாய் வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்பு கிடைப்பதன் மூலம் இந்தப் பாதை தொடங்குகிறது. இந்தச் சூழலில், தீன் தயாள் உபாத்யாயா கிராமப்புற திறன் மேம்பாட்டுத் திட்டம் முக்கியப் பங்காற்றுகிறது. தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 2014 செப்டம்பர் 25-ம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டம், விளிம்புநிலையில் உள்ள கிராமப்புறக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களை மையமாகக் கொண்டுள்ளது. நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்கும் நோக்கில் வேலைவாய்ப்புடன் இணைந்த திறன் பயிற்சி வழங்கப்படுகிறது. 15 முதல் 35 வயது வரையிலான இளைஞர்களுக்கு திறன் பயிற்சியுடன் வேலைவாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.
மறுசீரமைக்கப்பட்ட தீன் தயாள் உபாத்யாயா கிராமப்புற திறன் மேம்பாட்டுத் திட்டம் 2.0 கட்டமைப்பு, தொழில்துறை சார்ந்த பயிற்சி, நிலையான வேலைவாய்ப்பு, வேலைவாய்ப்புக்குப் பிந்தைய ஆதரவு, திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. பயிற்சி, மதிப்பீடு, சான்றிதழ், கண்காணிப்பு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான டிஜிட்டல் நடைமுறை தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. கூட்டாண்மைகள், வேலைவாய்ப்பு முகாம்கள், நிறுவனங்களிலேயே வேலைவாய்ப்பு, தொழில்துறை ஆலோசனைகள் மூலம் நிறுவனங்களின் தலைமைப்பொறுப்பில் உள்ளவர்களுடனான தொடர்பும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. பயிற்சி வேலைவாய்ப்புக்கு வழிவகுக்க வேண்டும், அந்த வேலைவாய்ப்பு நிலையானதாக மாற வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும். 2026 ஜூன் நிலவரப்படி, இத்திட்டத்தின் கீழ் 18.45 லட்சம் கிராமப்புற இளைஞர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். 12.35 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கைகளுக்குப் பின்னால், திறன் பயிற்சி மூலம் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரத்துக்கான புதிய பாதைகளை உருவாக்கிக்கொண்ட தனிநபர்களின் வாழ்க்கைப் பயணங்கள் உள்ளன.
கனவைத் முன்னெடுத்துச் செல்லுதல்
நாகாலாந்தைச் சேர்ந்த விமெத்தானோ சாக்ரி, 10 பேரைக் கொண்ட தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காக தனது தாய் கடுமையாக உழைத்ததை பல ஆண்டுகளாக நேரில் பார்த்து வளர்ந்தார். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் உயர்கல்வி பயில வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருந்தது. ஆனால், குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் அந்தக் கனவை நனவாக்குவதில் தடையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தீன் தயாள் உபாத்யாயா கிராமப்புறத் திறன் மேம்பாட்டுத் திட்டம் குறித்து அவர் அறிந்துகொண்டார். தனது கனவுகளைக் கைவிடாமல், சுற்றுலா, விருந்தோம்பல் துறையில் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பயிற்சியில் சேர்ந்தார். சில மாதங்களுக்குப் பின்னர் பெங்களூருவில் உள்ள தி டென் நிறுவனத்தில் உணவு சேவைப் பிரிவில் தனது முதல் பணிவாய்ப்பைப் பெற்றார். அது அவருக்கு ஒரு வேலைவாய்ப்பாக மட்டும் அமையவில்லை. அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமைந்தது.
விமெத்தானோவுக்கு, வாழ்க்கையைத் தொடங்குவதற்கான வாய்ப்பாக தீன் தயாள் உபாத்யாயா கிராமப்புற திறன் மேம்பாட்டுத் திட்டம் அமைந்தது.
அன்றாட வேலைகளிலிருந்து வெளிநாட்டுத் வேலை வரை
பீகார் மாநிலம் சிவான் மாவட்டம் தெதாஹ்லி கிராமத்தைச் சேர்ந்த சந்தன் ஷாவின் குடும்பத்திற்கு ஒரு காலத்தில் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றுவது சிரமமாக இருந்தது. கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பு குறைவாக இருந்த நிலையில், பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் தனது தந்தைக்கு விவசாயப் பணிகளில் உதவுவதற்காக அவர் படிப்பை பாதியிலேயே நிறுத்தினார்.

கெண்டா ஜீவிகா சுயஉதவிக் குழுவில் உறுப்பினராக இருந்த அவரது தாயார், தீன் தயாள் உபாத்யாயா கிராமப்புற திறன் மேம்பாட்டுத் திட்டத்தைப் பற்றி அறிந்துகொள்ள அவரை ஊக்குவித்தார். ஆலோசனை பெற்ற சந்தன், உதவி மின்பணியாளர் பயிற்சியைத் தேர்ந்தெடுத்தார். பயிற்சி அவருக்கு தொழிலில் முதல் அடியை எடுத்து வைப்பதற்குத் தேவையான திறன்களை வழங்கியது. பயிற்சியை முடித்த பின்னர், பதியில் உள்ள ஒரு மதுபான உற்பத்தி ஆலையில் உதவியாளராக தனது முதல் வேலைவாய்ப்பைப் பெற்றார். மாதம் ரூ.10,500 ஊதியம் பெற்றார். இந்த ஆரம்ப அனுபவம் அவரது அடுத்தகட்ட தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.
தனது திறன்கள், அனுபவத்தின் அடிப்படையில் வெளிநாட்டில் கிடைத்த வாய்ப்பைத் தொடர்ந்து சந்தன் துபாய்க்குச் சென்றார். அங்கு அல் ஷஃபா ஜெனரல் கான்ட்ராக்டிங் நிறுவனத்தில் மின்பணியாளராகப் பணியில் சேர்ந்தார். அவரது மாத வருமானம் ரூ.35,000 ஆக உயர்ந்தது. அவரது பயணம் கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலான உதாரணமாக அமைந்தது.
வேலைவாய்ப்பிலிருந்து தொழில்முனைவுக்கு
அசாம் மாநிலம் சரைடியோவைச் சேர்ந்த ரூபாலி ஹஸ்தா பொருளாதாரச் சூழல் காரணமாக 9-ம் வகுப்புக்குப் பிறகு பள்ளிப் படிப்பை நிறுத்த வேண்டியிருந்தது. அவரது குடும்பம் விவசாயத்தைச் சார்ந்திருந்தது. குடும்பத்தின் ஒரே வருவாய் ஈட்டுபவராக அவரது தந்தை இருந்தார். சுயஉதவிக் குழுவில் தீவிரமாக செயல்பட்டு வந்த அவரது தாய், ரூபாலியின் கனவுகளை நனவாக்க தொடர்ந்து ஊக்குவித்தார். ஜீவிகா சகி மூலம் தீன் தயாள் உபாத்யாயா கிராமப்புற திறன் மேம்பாட்டுத் திட்டம் குறித்து அறிந்த ரூபாலி, 2022 டிசம்பரில் தையல் இயந்திர இயக்குநர் பயிற்சியில் சேர்ந்தார்.

பயிற்சியை முடித்த பின்னர் திருப்பூரில் உள்ள கேபிஆர் அப்பேரல்ஸ் மில்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற்றார். அறிமுகமில்லாத நகரத்தில் 5 மாதங்கள் பணியாற்றிய அவர், புதிய சூழலுக்கு தன்னை மாற்றிக்கொண்டார். பணியில் இருந்து சேமித்த பணத்துடன் ஹதிபந்தாவுக்குத் திரும்பிய அவர், ரூ.50,000 முதலீட்டில் தையல் கடையைத் தொடங்கினார்.
தனக்கென ஒரு தொழில்
ஜார்க்கண்டைச் சேர்ந்த ஹிராலால் பண்டிட், தனக்கான வாய்ப்புகளைத் தேடியபோது, தீன் தயாள் உபாத்யாயா கிராமப்புற திறன் மேம்பாட்டுத் திட்டம் குறித்து ஹிராலால் அறிந்துகொண்டார். இலவசப் பயிற்சி, வேலைவாய்ப்பு ஆதரவு ஆகியவை திறன்களைப் பெற்று வேலைவாய்ப்பைத் தொடர்வதற்கான வாய்ப்பை அவருக்கு வழங்கின. ஜார்க்கண்டின் தும்காவில் உள்ள பயிற்சி மையத்தில் சுகாதார பல்நோக்கு பணிப் பிரிவில் சேர்ந்தார்.

இந்தப் பயிற்சி ஹிராலாலின் வாழ்க்கைப் பயணத்தில் முக்கியமான திருப்பமாக அமைந்தது. பயிற்சியை முடித்த பின்னர், நாசிக்கில் உள்ள எஸ்எம்பிடி மருத்துவமனையில் உதவியாளராக வேலைவாய்ப்பு பெற்றார். இதன் மூலம் அவர் சுயமாக வருமானம் ஈட்டுவதுடன், குடும்பத்தின் நலனுக்கும் பங்களிக்க முடிந்தது. அதைவிட முக்கியமாக, இந்த அனுபவம் அவரது தன்னம்பிக்கையை அதிகரித்ததுடன், சாதிப்பதற்கான வாய்ப்புகள் குறித்த பார்வையையும் விரிவுபடுத்தியது.
திறன் வாழ்வாதாரமாக மாறும்போது
இவர்களின் வாழ்க்கைப் பயணங்கள் வெவ்வேறு திசைகளில் சென்றாலும், திறன்களைப் பெறுவதற்கான வாய்ப்பு, அவற்றைப் பயன்படுத்துதல், அதன் மூலம் வாழ்வாதாரத்தை உருவாக்குதல் என்ற பொதுவான அம்சம் அவர்களிடம் உள்ளது. கிராமப்புற இளைஞர்கள் பயிற்சியிலிருந்து வேலைவாய்ப்புக்கும், வேலைவாய்ப்பிலிருந்து பாதுகாப்பான, நிலையான வாழ்வாதாரத்துக்கும் முன்னேறுவதற்கான முதல் அடியை எடுத்து வைக்கச் செய்வதே தீன் தயாள் உபாத்யாயா கிராமப்புற திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/FeaturesDeatils.aspx?NoteId=160127&ModuleId=2®=3&lang=1
***
TV/PD
(Features ID: 160241)
आगंतुक पटल : 57
Provide suggestions / comments